புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன் தாயாருக்குத் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டது எனக் கூறி டாக்டரை கத்தியால் குத்தி, சிறைக்கு சென்றிருக்கிறார் ஓர் இளைஞர். சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் நடந்த இந்தக் கொடூர சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி, ஒட்டுமொத்த அரசியல் களத்திலிருந்தும் விமர்சனங்களை எழச் செய்தது.
இந்தியாவில் மருத்துவக் கட்டமைப்பு சிறப்பாக உள்ள மாநிலங்களில் தமிழ்நாட்டிற்கு முதன்மையான இடம் உண்டு. மாநகரங்களில் உள்ள பன்னோக்கு மருத்துவமனைகள் தொடங்கி கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரை அனைத்து மக்களுக்கும் தேவையான சிகிச்சைகளை உறுதி செய்யும் வகையில் இந்தக் கட்டமைப்புகள் அமைந்துள்ளன. உலகின் முன்னேறிய நாடுகளில்கூட கிடைக்காத மருத்துவ வசதியைத் தமிழ்நாட்டில் கட்டணமின்றிப் பெற முடியும். மருத்துவமனையை மக்கள் நாடிச் செல்வது மட்டுமின்றி, மக்களைத் தேடி மருத்துவம் என்கிற திட்டமும் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு, அதற்கு ஐ.நா.அவையின் பாராட்டும் விருதும் கிடைத்துள்ளது. எனினும், டாக்டருக்கு கத்திக்குத்து என்பது இத்தனை சிறப்பான கட்டமைப்புகளையும் பின்தள்ளி அரசு மருத்துவமனைகள் மீதும், அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீதும் கடும் விமர்சனங்களை உண்டாக்குகிற வகையில் ஊடகங்களில் தொடர்ச்சியான செய்திகள் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் அவை கிருமி வேகத்தில் (வைரல்) பரவின.
ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். அவர்கள்தான் தங்களுக்கான அரசாங்கத்தை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கின்றனர். தங்களுக்கான அரசாங்கத்தை நம்பிக்கையுடன் தேர்ந்தெடுக்கும் மக்கள், அந்த அரசாங்கத்தின் கீழ் செயல்படும் அதிகாரிகள், அரசு மருத்துவர்கள், காவல்துறையினர் மீது நம்பிக்கை வைக்காமல் வைப்பதற்கும், கோபத்தை வெளிப்படுத்துவதற்கும் அடிப்படையானக் காரணங்கள் என்ன என்பதை ஆராய்ந்து, தீர்வு காணும் வகையிலான செயல்பாடுகள் அமைய வேண்டிய காலச்சூழல் உருவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு வலுவாக இருந்தாலும் கடந்த 10, 12 ஆண்டுகளகாவே மருத்துவர்-செவிலியர் உள்ளிட்ட மருத்துவத் துறை சார்ந்த பணியாளர்கள் கட்டமைப்புப் போதுமானதாக இல்லை என்பதை நோயாளிகள் சொல்வதைவிட, டாக்டர்களும் நர்ஸ்களுமே தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். அவசர சிகிச்சைப் பிரிவுகள், சிறப்பு சிகிச்சை பிரிவுகள், மகப்பேறு மற்றும் குழந்தை நலன் சார்ந்த பிரிவுகளில் போதிய அளவில் மருத்துவப் பணியாளர்கள் தேவை என்பதை அவர்களுக்கான சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் ஏழை மக்கள்தான். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவதற்கு செலவு செய்ய இயலாதவர்கள். எனினும், அரசு மருத்துவமனையில் தனியார் மருத்துவமனை போல உடனடியாக சிகிச்சை செய்ய வேண்டும் என்பது நோயாளிகளுக்கும் அவர்களுடன் துணைக்கு வருபவர்களுக்குமான எதிர்பார்பப்பாக இருக்கிறது. ஒரு நோய்க்கான மருத்துவ சிகிச்சை-அறுவை சிகிச்சை இவை குறித்து நோயாளிகளுக்கு முழுமையாகத் தெரிய வாய்ப்பில்லை. அது மருத்துவர்களுக்குத் தெரியும் என்பதால் அதற்கேற்ற கால அவகாசத்தில் சிகிச்சை வழங்குகிறார்கள். ஆனால், நோயாளிகளுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் இந்த காலஅவகாசம் என்பது இழுத்தடிப்பாகவும் புறக்கணிப்பாகவும் தெரிகிறது. அது தொடர்பான வாக்குவாதம் உருவாகும்போது, மருத்துவர்கள் சொல்லும் வார்த்தைகள் கோபத்தை உண்டாக்கி, கத்திக்குத்து என்ற நிலைக்குத் தள்ளுகிறது.
சென்னையில் அரசு மருத்துவமனையில் இத்தகைய தாக்குதல் நடந்த அதே நாளில், தர்மபுரியில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின்போது தாயும் சேயும் மரணமடைந்ததைக் கண்டித்து மக்கள் போராட்டம் நடந்துள்ளது. அரசாங்கமாக இருந்தாலும் தனியாராக இருந்தாலும் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் கட்டமைப்பு, சிகிச்சை முறை, நோயாளிகளுடனான அணுகுமுறை இவைதான் தரமான-நலமான சிகிச்சைக்கு உத்தரவாதமாக அமையும்.
ஒவ்வொரு துறைக்கும் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் போதுமான அளவில் இருக்கும்போது இத்தகைய தாக்குதல்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். நோயாளிகளுக்கு விரைவான சிகிச்சை தர முடியும். கால அவகாசம் தேவைப்படுகிறதென்றால் அது பற்றி மருத்துவர்களால் பொறுமையாக விளக்க நேரமும் அமையும். எத்தகைய ஒரு வலுவான கட்டமைப்பும் அதில் பணியாற்றுபவர்களாலும் பயன் பெறுபவர்களாலும்தான் நீடித்து நிற்கும்.
கிண்டி கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையில் டாக்டரை நோயாளியின் மகன் கத்தியால் குத்திய நிகழ்வு குறித்து ஊடகங்களில் பலவித செய்திகள் வெளியாகின. டாக்டருக்கு ஆதரவாகவும், தாக்கியவருக்கு நியாயம் கற்பிக்கும் வகையிலும் அவரவர் பார்வையில் வெளியான செய்திகளில் ஒன்று, கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்ட அந்த இளைஞரை, சிறையில் உள்ள கைதிகள் கைக்குலுக்கி வரவேற்றனர் என்பதாகும்.
இந்த மனநிலை வளர்ந்தால் அது சமுதாயத்தை பாதிக்கும். இதனை சரிசெய்வதற்கான கட்டமைப்பு சீர்திருத்த சிகிச்சை மிக மிக அவசியம்.