தமிழ்நாட்டில் 6 கோடியே 27 இலட்சம் வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் ஆணையம் வரைவு வாக்காளர் பட்டியலை கடந்த மாத இறுதியில் வெளியிட்டது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையிலும், பெரும்பாலான தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர். 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களும் 25 வயது வரையிலான இளம் வாக்காளர்களும் தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகளில் முக்கிய பங்கு வகிக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாமல் போன வாக்காளர்கள், முகவரி மாற்றங்கள் செய்ய விரும்புகிறவர்கள், புதிய வாக்காளர்கள் ஆகியோருக்காக நவம்பர் 16, 17 தேதிகளில் சுருக்கத் திருத்த முகாம்களை ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நடத்தியது தேர்தல் ஆணையம். இதுபோன்ற முகாம்கள் தேர்தல் ஜனநாயகம் குறித்த விழிப்புணர்வை வாக்காளர்களுக்கு ஏற்படுத்தும் என்பதுதான் முகாம் நடத்துவதன் நோக்கம். தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. வாக்காளர் பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம், இறந்தவர்கள்-வீடு மாறியவர்களின் பெயர்களை நீக்குதல், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வாக்குரிமை ஆகியவற்றுக்குத் தனித்தனி படிவங்களும் வழங்கப்பட்டன. இந்த விவரங்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் முழுமையாகப் போய்ச் சேர்ந்தது என உறுதியாக சொல்ல முடியாது. வாக்காளர்களிடம் முகாம் குறித்த விவரத்தைக் கொண்டு போய் சேர்ப்பதில் அரசியல் கட்சிகள்தான் பங்கு வகிக்கின்றன.
சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் நடைபெற்ற முகாம்களில் தமிழ்நாட்டில் உள்ள ஏறத்தாழ 65ஆயிரம் வாக்குச்சாவடிகளில் பெரும்பாலானவற்றில் பாக முகவர்கள் தலைமையில் கட்சியினர் உதவியுடன் வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், திருத்தங்கள் ஆகியவற்றுக்கு துணை நின்றதில் ஆளுங்கட்சியான தி.மு.க.வுக்கு முக்கிய பங்கு உண்டு. எதிர்க்கட்சியான அ.தி.மு.க. ஞாயிற்றுக்கிழமையன்று தனது கட்சி நிர்வாகிகள் மூலமாக இந்த முகாமுக்கு வந்த வாக்காளர்களுக்கு உதவி செய்தது. எனினும், முழுமையான அளவில் அதன் பணி அமையவில்லை. அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் போன்றவற்றில் கவனம் செலுத்துவதைவிட, திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் முழுமையாக வெளியான பிறகு, அதனை வாக்குச்சாவடி வாரியாக கையில் வைத்துக்கொண்டு, ஒவ்வொரு வாக்காளரையும் ‘அணுகுவதில்’ முழு வேகம் காட்டுவது அ.தி.மு.கவின் வழக்கம்.
காங்கிரஸ் உள்ளிட்ட தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகள், “இந்த வேலைகளையெல்லாம் ஆளுங்கட்சியான தி.மு.க.வே பார்த்துக் கொள்ளும்” என்ற மனநிலையில் இருந்துவிட்டன. பா.ஜ.க. தரப்பில் தனக்கு செல்வாக்குள்ள தொகுதிகளின் வாக்குச்சாவடிகளில் மட்டும் கவனம் செலுத்தியது. தங்கள் ஆதரவு வாக்காளர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்வார்கள் என்பது அக்கட்சியின் நம்பிக்கை. பா.ம.க, நாம் தமிழர் கட்சி போன்றவற்றின் பங்களிப்பும் குறைவுதான்.
இந்தக் கட்சிகளுடன் ஒப்பிடுகையில் புதிய கட்சியான நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சென்னை, மதுரை, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் முழு கவனம் செலுத்தி இளைஞர்களையும் இளம்பெண்களையும் கொண்டு வாக்காளர்களுக்கு உதவி செய்தது. சில இடங்களில் தி.மு.க.வைப் போலவே த.வெ.க.வினரும் இரண்டு நாட்களும் கொடிகளுடன் காலை முதல் மாலை வரை முகாமில் இருந்தனர். தேர்தல் பணிகளில் புது அனுபவம் என்பதால் பிற கட்சிகளில் பதவி கிடைக்காமல் த.வெ.க. பக்கம் வந்தவர்கள் உதவி செய்ததைக் காண முடிந்தது.
ஆன்லைன் வசதிகளை தேர்தல் ஆணையம் மேம்படுத்தியிருந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தங்கள் செய்வதற்கும் அனுபவமிக்க கட்சிக்காரர்கள் துணை இருந்தால் எளிதாக வேலை முடிந்துவிடும் என்பதால் பொதுமக்களும் அரசியல் கட்சியினரைத் தேடி வருவது இயல்பாக உள்ளது. முதல் முறை வாக்காளர்களான கல்லூரி மாணவ-மாணவியர் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற வேண்டும் என்ற ஆர்வத்துடன் வாக்காளர் பட்டியல் திருத்த முகாமிற்கு வந்திருந்ததைக் காண முடிந்தது. அவர்களை ஈர்ப்பதில் ஆளுங்கட்சிக்கும் புதுக்கட்சிக்கும் ஆர்வமும் போட்டியும் இருந்தது. மற்ற கட்சிகள் இதில் பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகாலம் இருக்கிறது என்றாலும், வாக்காளர் பட்டியல் அடிப்படையில்தான் ஆதரவைப் பெற முடியும். வெற்றி-தோல்வியைத் தீர்மானிப்பவர்கள் பட்டியலில் இருக்கிறார்களா என்பதை அரசியல் கட்சிகள் உன்னிப்பாக கவனிக்கும். புதிய வாக்காளர்கள்-இளம் வாக்காளர்கள் இவர்களை ஈர்ப்பதில் எப்போதுமே போட்டா போட்டி இருக்கும். 2026 சட்டமன்றத் தேர்தலில் அது கூடுதலாக இருக்க வாய்ப்பு உள்ளதை வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் உணர்த்துகிறது.
அரசியல் கட்சிகள் அதனதன் கடமையைச் செய்கின்றன. வாக்காளர்கள் தங்கள் பெயர், முகவரி ஆகியவை வாக்காளர் பட்டியலில் சரியாக இருக்கின்றதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டிய கடமை உள்ளது. ஆன்லைனில் சரிபார்க்கலாம். தேவைப்பட்டால் உரிய திருத்தங்களை செய்யவும், பெயரை சேர்க்கவும் நவம்பர் 23, 24 தேதிகளில் மீண்டும் நடைபெறவுள்ள வாக்காளர் பட்டியல் திருத்த முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம்.