மன்னராட்சியின் சிறப்பை விவரிக்கும் வரலாற்றுப் பாடங்களில், காட்டை அழித்து நாடாக்கி.. குளம் தொட்டு வளம் பெருக்கினார் என்று இருக்கும். காட்டுப் பகுதிகளை மாற்றியமைத்து குடியிருப்புகளுக்கேற்ற நகரங்களாக மாற்றினால்தான் மனிதர்கள் வாழ முடியும் என்பதால், மன்னர்களின் நிர்வாகத் திறனைக் காட்டுவதற்கு இந்தச் சொற்றொடரைப் பயன்படுத்துவது வழக்கம். மக்களாட்சிக் காலத்தில் அதிகாரத்தில் இருந்தவர்களும் இதே நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டியிருந்ததால், காடுகளும் நீர்நிலைகளும் கான்க்ரீட் கட்டடங்களாக மாற்றம் பெற்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலக நாடுகள் பலவற்றிலும் இதுதான் நிலை.
நகரக் கட்டமைப்புக்கான வளர்ச்சியில் இயற்கையின் செல்வங்கள் சிதைக்கப்படுவதும், பசுமையான காடுகள் அழிக்கப்படுவதால் இயற்கையின் தன்மை மாறுபாட்டு மழை அளவு குறைவது போன்ற சூழலியல் பாதிப்புகள் ஏற்படுவதும் மிகத் தாமதமாகவே கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன. 1970களில் வளர்ந்து நாடுகள், வளரும் நாடுகள் ஆகியவற்றில் காடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வும் அதற்கேற்ற சட்டங்களும் உருவாக்கப்பட்டன. இந்தியாவில் பிரதமர் இந்திராகாந்தி ஆட்சிக்காலத்தில் காடுகளைப் பாதுகாப்பதற்கான சட்டரீதியான முயற்சிகள் தொடங்கப்பட்டன. எனினும், இயற்கை வளங்களை மனிதத் தேவைக்காகப் பயன்படுத்துவது என்பது தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது.
வளர்ச்சிக்கேற்ற வகையில் இயற்கை வளங்களை பயன்படுத்துவது மனித சமுதாயத்தின் இயல்பு. அந்த வளர்ச்சி என்பது சூழலியலையும் பாதுகாக்கக்கக்கூடிய நீடித்த வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை பிரேசில் தலைநகர் ரியோடி ஜெனிரோவில் நடந்த சுற்றுச்சூழல் மாநாடு முன்னெடுக்க, உலக நாடுகள் பலவும் அதன்பிறகே காட்டுவளம், இயற்கை வளம் ஆகியவை தொடர்பான வலிமையான சட்டங்களை இயற்றின. ஐ.நா.மன்றம் போன்ற பன்னாட்டு அமைப்புகளும் இதில் கவனம் செலுத்தின.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காடுகளின் பரப்பளவு 23% என்ற அளவில் உள்ளது. மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு வனப்பகுதியாக இருந்தால் இயற்கையின் தன்மைகள் சீராக இருக்கும். எனவே, 10% அதிகமாக காட்டு வளத்தைப் பெருக்க வேண்டிய கட்டாயம் தமிழ்நாட்டிற்கு உள்ளது. முதலமைச்சர் தலைமையில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழு இது குறித்து ஆலோசித்து, 10 ஆண்டுகளில் 33% அளவுக்கு தமிழ்நாட்டுக் காடுகளின் பரப்பளவை உயர்த்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 10 கோடி மரங்களை நட்டு வளர்ப்பதற்கானத் திட்டமும் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.
மேற்கு மலைத் தொடர்ச்சி மலைகளில் உள்ள காடுகள், கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள காடுகள், சமவெளியில் உள்ள காடுகள் எனத் தமிழ்நாட்டின் காட்டு வளம் என்பது அதனதன் தன்மைக்கேற்ற மரங்களைக் கொண்டதாகும். அந்தந்த மண்ணுக்குரிய தாவரங்களைப் பெருக்குவதே இயற்கையின் சமத்தன்மையைப் பாதுகாக்கக் கூடியதாக அமையும். அந்த வகையில், தமிழ்நாட்டில் அழிந்து வரும் தாவர வகைகளைக் காப்பாற்றும் முயற்சியாக கிராமப்புறங்களிலும் மலைப்பகுதிகளிலும் உள்ள கோயில் காடுகளை வளர்க்கும் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு முன்னெடுத்திருக்கிறது. இதற்கென 50 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை அரசாணையாக வெளியிட்டிருக்கிறது சூழலியல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கானத் துறை.
கிராமக் கோயில்கள் என்பவை ஆகமக் கோயில்களைப் போன்றவையல்ல. சுடுமண்ணால் செய்யப்பட்ட தெய்வச் சிலைகளைக் கொண்டதாகவே அவை பெரும்பாலும் இருக்கும். பொங்கல் வைப்பது, கிடா வெட்டுவது போன்ற திருவிழாக்களை அந்தத் தெய்வத்தை வழிபடும் வழக்கமுள்ள மக்களே கொண்டாடுவார்கள். இத்தகைய கோயில்கள் பல வித மரங்கள் சூழ்ந்த பகுதியில் அமைந்திருக்கும். காலப்போக்கில் மக்கள் தங்கள் வசதிக்காக மரங்களை வெட்டிவிட்டு, மண்டபங்களைக் கட்டியிருக்கிறார்கள்.
மரங்கள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ள இத்தகைய வழிபாட்டு இடங்கள், உள்ளூர் மரங்கள் நிறைந்த காடுகள் இவற்றைப் பாதுகாக்கவும் வளர்த்தெடுக்கவும் தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்கட்டமாக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதுடன், பெருநிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு நிதி, பொதுமக்களின் பங்களிப்பு, உள்நாட்டு-வெளிநாட்டு நன்கொடைகள் இவற்றின் மூலம் இந்தக் காடுகளை மேம்படுத்தவும் அதில் அந்தந்தப் பகுதி மக்களையும், இயற்கை வள அறிவுகொண்ட பழங்குடி மக்களையும் ஈடுபடுத்தவும் இந்தத் திட்டத்தில் வழி வகுக்கப்பட்டுள்ளது.
காட்டை அழித்து நாடாக்கினார் என்று மன்னர்களின் பெருமையைச் சொன்ன காலம் மாறி, நாடெங்கும் காடாக்கினார் என்று மக்களாட்சித் தலைவர்களை சொல்ல வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியிருக்கிறது இயற்கைச் சூழல்.