மேலூரிலிருந்து தல்லாகுளம் வரையிலான மதுரை மாவட்டத்தில் வாகனத்தில் அணிவகுத்த விவசாயிகளின் பேரணி அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. ஜனவரி 7ந் தேதியன்று வைகைப் பாசன விவசாயிகள், மதுரை அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமத்தை எடுக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்திய பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்ற தகவல் பரவிய காரணத்தால் உடனடியாக அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்த்தது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது கண்டனத்தில், ஆளுநரை எதிர்த்து ஆளுங்கட்சி நடத்தும் போராட்டத்திற்கு உடனே அனுமதி கிடைக்கிறது. விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக நடத்தும் போராட்டத்திற்கு அனுமதியில்லையா என்று கேட்டார். பா.ஜ.க. சார்பில் அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை, விவசாயிகளுக்கு முதலமைச்சர் ஏன் நேரில் உத்தரவாதம் அளிக்கவில்லை என்று கேட்டார். மக்கள் எழுச்சி ஏற்பட்டுவிட்டதாக மேலும் சில அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்துகளைப் பதிவு செய்திருந்தனர்.
டங்ஸ்டன் சுரங்க உரிமம் என்பது மத்திய அரசு தொடர்புடையது. ஏலம் எடுக்கும் நிறுவனத்தை அனுமதிப்பது என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் இந்த விவகாரம் கிளம்பியபோது, “ஆட்சியில் இருக்கும்வரை டங்ஸ்டன் கனிமத்தை எடுக்க அனுமதிக்க மாட்டேன்” என்று முதலமைச்சர் தெரிவித்தார். இந்த உரிமம் தொடர்பான விவகாரத்தில் யார் பக்கம் தவறு என்று தி.மு.க-அ.தி.மு.க-பா.ஜ.க. மூன்று கட்சிகளுமே சட்டமன்றத்தில் மாறி மாறி குற்றம்சாட்டி விவாதங்கள் நடந்த நிலையில், பல்லுயிர்ச்சூழலுக்குரிய பகுதியும்-சமணர் படுக்கைகள் போன்ற வரலாற்றுப் பின்னணி கொண்டதுமான மேலூர் அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமம் எடுக்கக்கூடாது எனத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்பட பல கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், விவசாயிகள் பேரணி நடத்தியதும் அதில் அரசியல் கணக்குடன் கருத்துகளை முன்வைத்தனர் தலைவர்கள்.
தமிழ்நாடு அரசு சார்பில் பேட்டியளித்த அமைச்சர் ரகுபதி, “விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டுகிறார். போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டே இருந்தது. சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் இருந்து நடந்தே மதுரை மத்திய தபால் நிலையம் வரை செல்ல முயன்றபோது, வாகனங்களில் செல்லும்படி காவல்துறை தெரிவித்தது. அதற்கு போராட்டக்காரர்கள் இணங்க மறுத்ததால், சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதைத்தான் போராட்டத்திற்கு அனுமதியில்லை எனத் திசை திருப்புகிறார் எதிர்க்கட்சித்தலைவர். விவசாயிகள் நடத்திய போராட்டம் மத்திய அரசுக்கு எதிராகத்தான். அந்த மத்திய அரசை கண்டித்து ஒரு சொல்கூட எதிர்க்கட்சித் தலைவர் ஏன் தெரிவிக்கவில்லை” என ஆளுந்தரப்பின் அரசியல் நிலைப்பாட்டை குறிக்கும் வகையில் தெரிவித்திருந்தார் அமைச்சர் ரகுபதி.
மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்குகிற அளவிற்கு ஏறத்தாழ 15 கி.மீ. வாகனப் பேரணியுடன் தமுக்கம் மைதானத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி, டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கான தங்கள் எதிர்ப்பை உறுதியாகப் பதிவு செய்துள்ளனர். விவசாயப் பகுதிகளில் கனிம வளங்கள் எடுப்பது, கட்டமைப்புகளை உருவாக்குவது போன்ற செயல்பாடுகளுக்கு ஆதரவாகவும் எதிராகவும் அரசியல் செய்யும் வழக்கம் உலகம் முழுக்கவும் தொடர்கிறது. விவசாயத்தையும் சூழலியலையும் பாதுகாக்கும் அதே வேளையில், வளர்ச்சித் திட்டங்களுக்கான நடவடிக்கைகளையும் அறிவியல்பூர்வமான கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து மேற்கொண்டால்தான் மனிதகுல வளர்ச்சி சமநிலையில் இருக்கும்.
உலகளாவிய சுற்றுச்சூழல் கொள்கை மூலமாக நீடித்த நிலைத்த வளர்ச்சி என்கிற கோட்பாடு கடந்த இருபது ஆண்டுகளாக முன்னிறுத்தப்பட்டது. சூழலியலைக் காப்பதிலும், புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதிலும் வளரும் நாடுகள் மீது திணிக்கப்படும் நெறிமுறைகள், வளர்ந்த நாடுகள்-வல்லரசு நாடுகளுக்குப் பொருந்துவதில்லை என்றும் அவை தன்னிச்சையாக செயல்படுகின்றன என்றும் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் எழுந்ததால், தற்போது இதுகுறித்து மறுபரிசீலனை செய்யும் கட்டத்திற்கு சூழலியல் ஆர்வலர்கள் வந்துள்ளனர்.
இந்தியா போன்ற வளரும் நாடுகளின் தேவையையும், அந்தத் தேவைகளை நிறைவேற்றுவதில் சூழலியல் பாதிப்பில்லாத நடவடிக்கைகளை முன்னிறுத்துவதிலும் புதிய கண்ணோட்டங்கள் தேவைப்படுகின்றன. காலநிலை மாற்றத்தால் மழை அளவு மாறுபடுகிறது. மேக வெடிப்பு, பருவகாலத்தைக் கடந்த புயல் சின்னங்கள் இவற்றை உலகம் எதிர்கொண்டு வரும் நிலையில், உண்மையாகவே இவை மனிதத் தேவைகளுக்கான செயல்பாடுகளால் ஏற்படுகிறதா, இயற்கை தன்னை தகவமைத்துக்கொள்ளும் சூழலின் விளைவா என்பன உள்ளிட்ட அறிவியல் பூர்வ ஆய்வுகள் அவசியமாகும். அதைவிடுத்து, விவசாயிகளை அரசியலுக்குப் பயன்படுத்துவது சரியல்ல.