தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவாகத் திகழ்வது பொங்கல் விழாவாகும். தமிழ்நாட்டில் பல வகையானப் பண்டிகைகள் கொண்டாடப்பட்டாலும், தமிழர் திருநாள் என்ற சிறப்பு கொண்டது பொங்கல் விழாதான். அதற்கு காரணம், மற்ற பண்டிகைகள் போல இது மத நம்பிக்கை சார்ந்த பண்டிகையல்ல. புராணக் கதைகளின் அடிப்படையிலோ, கடவுளின் பெயரிலோ கொண்டாடப்படுவதில்லை. அதற்கு மாறாக, வேட்டைச் சமூகம் வேளாண் சமூகமாக மாறிய நிலையில், விளைச்சலைப் பெருக்கும் உழவர்களின் உழைப்பைப் போற்றியும், அதற்குத் துணையாக இருக்கும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு நன்றி தெரிவித்தும், இயற்கை ஆற்றலின் முதன்மையாக விளங்கும் சூரியனை வணங்கியும் பொங்கலைக் கொண்டாடுகிறார்கள் தமிழர்கள்.
அறுவடைத் திருநாளான பொங்கல் மற்ற பல மாநிலங்களில் சங்கராந்தி பண்டிகை என்று கொண்டாடப்படும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் அது தனித்துவமான அடையாளமாகக் கொண்டாடப்படுவதும், பொங்கல் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவதும் கவனத்திற்குரியது. மிகக் குறிப்பாக, உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கி, பாலமேடு, அவனியாபுரம், புதுக்கோட்டை எனப் பல இடங்களிலும் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு எனும் ஏறு தழுவுதல் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. மற்ற பண்டிகைகள் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு நாட்களில் வரும் நிலையில், பொங்கல் திருவிழா என்பது தை முதல் நாளில் மட்டுமே கொண்டாடப்படுவதும், அதனைத் தொடர்ந்து தை இரண்டாம் நாளில் மாட்டுப் பொங்கல், மூன்றாம் நாளில் காணும் பொங்கல் எனக் கொண்டாடி மகிழ்வதும் தமிழர்களின் வழக்கமாக இருக்கிறது. அறுவடை செய்த நெல்லை அரிசியாக்கி, அந்த புது அரிசியை, புதுப் பானையில் பொங்கி, அந்த உணவை உண்பதே பொங்கலின் சிறப்பாகும்.
இந்தியாவில் நகரமயமாக்கப்பட்ட பகுதிகளை அதிகம் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழும் நிலையில், விவசாயம் செய்யாதவர்களும் பொங்கலை சிறப்பாகக் கொண்டாடுவதற்கு காரணம், அதன் பண்பாட்டு அடையாளங்கள்தான். வண்ணக் கோலமிடுவது, வீர விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது, கலை-இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்துவது என மாநகரங்களிலும் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சமத்துவப் பொங்கல் என்ற பெயரில் அனைத்து மதத்தினரையும் இணைத்துப் பொங்கல் கொண்டாடுவதும், பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் வெளிநாட்டவர்களும் பங்கேற்கும் வகையில் சுற்றுலாத் தலங்களில் பொங்கல் விழா நடைபெறுவதும் பொங்கல் திருநாளைப் பண்பாட்டு அடையாளமாக மிளிரச் செய்கிறது.
வாணவேடிக்கைகளோ, ஆடம்பர ஆர்ப்பாட்டங்களோ இல்லாத பொங்கல் திருநாள் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையில் இளந்தலைமுறையை ஈர்த்து வருகிறது. கால் நூற்றாண்டுக்கு முன்பு பொங்கல் வாழ்த்து அட்டைகளை தபால் மூலம் அனுப்பி மகிழ்வது அன்றைய இளந்தலைமுறையின் வழக்கமாக இருந்தது. இயற்கை காட்சிகள், கடவுள் படங்கள், தலைவர்களின்பொன்மொழிகள், நடிகர்-நடிகையரின் படங்களுடனான வெவ்வேறு வகையான பொங்கல் வாழ்த்து அட்டைகள் அதனை அனுப்புவோருக்கும் பெறுவோருக்கும் மகிழ்ச்சியைப் பரிமாறச் செய்யும். அதன்பின்பு, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்வதும், இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக என்ற அடைமொழியுடன் ஒளிபரப்பாகும் திரைப்படங்களைப் பார்ப்பதிலும் பொங்கல் விழாவினைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
தற்போதைய தலைமுறை வண்ண வண்ண வடிவில் சொந்தமாக வாழ்த்து அட்டைகளை உருவாக்கி அலைபேசி வாயிலாகவே பரிமாறிக் கொள்கிறது. எளிமையான பொங்கல் விழாவின் பண்பாட்டு அடையாளங்களை மீட்டெடுக்கும் வகையில் ஒவ்வொரு கல்லூரியிலும் பொங்கல் விடுமுறைக்கு முன்பாகவே பொங்கல் கலை விழாக்கள் சிறப்பாக நடத்தப்படுகின்றன. இதனால், பொங்கல் விழாவின் மகிழ்ச்சி கூடுதல் நாட்களுக்கு நீடிக்கிறது. தமிழர் திருநாள் இதுதான் என்பதை அனைத்து தமிழர்களும் போற்றும் வகையில், ‘பொங்கலோ பொங்கல்’ என்று குலவையிட்டு கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
பொங்கலின் நோக்கம் உழைப்பை மதிப்பது, கலைகளை வளர்ப்பது, அன்பும் அறனும் கொண்ட தமிழர் பண்பாட்டை நிலைப் பெறச் செய்வதாகும். பிரிவினைகள், பேதங்கள் இவற்றைக் களைந்து தமிழர்களின் உயர் பண்பாட்டை நிலைநாட்டிட இந்தப் பொங்கல் திருநாள் தமிழ்கூறும் நல்லுலகம் எங்கும் சிறக்கட்டும். அரசியலில், சமுதாயத்தில், தனிமனித உள்ளத்தில் உள்ள வெறுப்பு நெருப்பை அணைக்கும் வரையில் பொங்கல் பொங்கட்டும். மகிழ்ச்சிப் பொங்கட்டும்.
வணக்கம் சிறப்பான தை பொங்கலின் பின்னணி தொகுப்பு அருமை அத்தனை யும் உண்மை அன்று வேறு களம் இன்று காலமும் வேறு களமும் வேறு ஒரு சிறு செய்தி அன்று பள்ளிக்காலங்களில் எங்கள் பிடித்த பெண்பிள்ளைகளின் வீட்டுக்கு அவர்கள் வீட்டு முகவரிக்கு பொங்கல் வாழ்த்து அட்டை பெயரில்லாமல் அனுப்புவது அப்புறந்தான் தெரியவந்தது எங்களை போல் வேறு பலரும் அனுப்பி அவர்கள் வீட்டில் வாழ்த்து அட்டை குவிந்த கதை அனைவருக்கும் இனிய நினைவு தை பொங்கல் நல் வாழ்த்துகள் அன்பன் சா முருகானந்தம் .திருவாரூர்