பரந்தூர் பகுதியில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படுவதை எதிர்த்து அந்தப் பகுதியில் வசிப்பவர்களும், விவசாயிகளும், இயற்கை ஆர்வலர்களும் 900 நாட்களுக்கு மேலாகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். விமான நிலையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று கிராம சபை கூட்டங்களிலும் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள் பரந்தூரையும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களையும் சேர்ந்த மக்கள். பல்வேறு கட்சித் தலைவர்களும், சமூக நல அமைப்பினரும் போராட்டக் களத்திற்குச் சென்று ஆதரவு தெரிவித்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அந்தப் பகுதிக்கு சென்று வேனில் பிரச்சாரம் செய்திருப்பது ஊடகங்களில் பெருமளவில் கவனத்தை ஈர்த்திருப்பதுடன், இதற்கு முன்னர் வெளிப்பட்ட எதிர்ப்புகளை விட, இம்முறை ஆளுங்கட்சியான தி.மு.க. தரப்பிலிருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டிருப்பதையும் காண முடிகிறது.
விமான நிலையம் என்பது மத்திய அரசின் நிர்வாகத்தின் வரக்கூடியதாகும். அதற்குரிய நிலத்தைக் கையகப்படுத்திக் கொடுக்க வேண்டியது மாநில அரசின் பணி. அந்த வகையில், சென்னை விமான நிலைய விரிவாக்கத்திற்கானத் திட்டத்தை வகுத்தது மத்திய பா.ஜ.க. அரசுதான். அதற்கு அப்போதைய அ.தி.மு.க அரசு பரந்தூர், மாமண்டூர் ஆகிய இரண்டில் ஓரிடத்தை தேர்வு செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்தது. அதையடுத்து அமைந்த தி.மு.க. அரசு, மாமண்டூரைத் தவிர்த்துவிட்டு, பரந்தூர் மற்றும் பன்னூர் ஆகிய இடங்களைப் பரிந்துரைத்தது. இதில் பன்னூர், பரந்தூர் இரண்டுமே சுங்குவார்சத்திரம் பகுதியிலிருந்து வடமேற்கு திசையில் அமைந்துள்ளது.
பன்னூரில் அதிகளவில் மின்னழுத்த கோபுரங்கள் உள்ளன. அருகில் உள்ள பகுதிகளில் ஏழு தொழிற்சாலைகள் உள்ளன. இந்த இடத்தைத் தேர்வு செய்தால் 1546 குடும்பங்களை அப்புறப்படுத்த வேண்டியிருக்கும். அத்துடன், விமான நிலையத் தேவைக்காகக் கூடுதல் நிலங்களும் தேவைப்படும். பரந்தூரில் 1005 குடும்பங்களை அப்புறப்படுத்த வேண்டியிருக்கும். பன்னூர் பகுதியில் உள்ள மற்ற நெருக்கடிகள் இங்கு இல்லை என்பதால் தமிழ்நாடு அரசு பரிந்துரைத்த பரந்தூர் பகுதிக்கும் மத்திய அரசும் ஒப்புதல் அளித்ததால், நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான அறிவிப்புகளையும் அதற்குரிய இழப்பீடுகளையும் தமிழக அரசு வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாகத்தான் மக்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இயற்கையை அழித்து விமான நிலையமா எனப் போராட்டக்காரர்கள் கேட்கிறார்கள். எளிய மக்களின் வாழ்வாதாரத்தைவிடவும் உணவளிக்கும் விவசாய நிலங்களை விடவும் விமான நிலையம் முக்கியமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் எந்தவொரு திட்டம் தொடங்கப்படும்போதும் இத்தகைய கேள்விகள் எழுவதில் நியாயம் உண்டு. அதே நேரத்தில், ஒவ்வொரு திட்டமும் ஏதேனும் ஒரு வகையில் அந்த நிலப்பகுதியில் ஏற்பட்ட ஒரு சில மாற்றங்களுக்குப் பிறகே நிறைவேறியிருக்கிறது. பெருந்தலைவர் காமராசர் காலத்தில் கட்டப்பட்ட வைகை அணை குறித்து இன்றளவும் பெருமையுடன் குறிப்பிடப்படுகிறது. அந்த அணை கட்டப்பட்டபோது அந்தப் பகுதியில் இருந்த விவசாய நிலங்களும், மக்களின் வாழ்வாதாரமும் எப்படி பறிபோயின என்பதை கவிஞர் வைரமுத்து எழுதிய ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ புதினத்தில் காண முடியும். அந்தப் படைப்புக்கு சாகித்ய அகாடமி விருது அளித்தது இந்திய அரசு.
வைகை அணை விவசாயிகளின் நலன் காக்கத்தானே உருவாக்கப்பட்டது, விமான நிலையம் அப்படிப்பட்டதா என்று கேள்வி எழுப்பலாம். அதே பெருந்தலைவர் ஆட்சிக்காலத்தில் உருவான நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம், அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆகியவற்றுக்காக விளை நிலங்கள், குடியிருப்புகள், நீர் நிலைகள் ஆகியவை கையகப்படுத்தப்பட்டுள்ளன. தொழில்வளர்ச்சி நோக்கிய பயணத்தில் இத்தகைய மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. வேட்டையாடும் சமூகமாக இருந்த மனிதன் வேளாண்மைக்கு மாறியபோது, விளைநிலங்களாக மாற்றுவதற்காக அழிக்கப்பட்ட காடுகளின் கண்ணீரும் இன்னும் காயாமல்தான் இருக்கும். குகையில் வாழ்ந்த மனிதன் கடற்கரையோரத்தில் பண்ணை நிலத்தில் கல்வீடுகளை கட்டி வாழ்வதையும்கூட இயற்கைக்கு எதிரான சதியாகக் கருத முடியும்.
வேன் பிரச்சாரப் போராட்டம் நடத்திய த.வெ.க. தலைவர் விஜய், “விமான நிலையம் வேண்டாம் என்று சொல்லவில்லை. இந்த ஊரில் வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார். அவருக்கு பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கம் தந்திருக்கிறார். தற்போதுள்ள காலநிலை மாற்றத்தை உணர்ந்து, உரிய வகையிலான இயற்கைப் பாதுகாப்பு நடவடிக்கைகள், சொந்த நிலத்தை இழக்கின்ற மக்களுக்கான நிவாரணம்-வாழ்வாதாரம் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கே அதிகம் உள்ளது. வளர்ச்சிப் போக்கிலான திட்டங்களின் உண்மை நிலையை கள ஆய்வு செய்து கருத்து தெரிவிப்பதே அரசியல் கட்சிகளின் கடமையாக இருக்கவேண்டும். எதிர்க்கட்சியாக இருக்கும்போது, விவசாயிகளின் நலன் காக்க குரல் கொடுத்துவிட்டு, ஆளுங்கட்சியான பிறகு விவசாய நிலம் உள்ளிட்ட பகுதிகளைக் கையகப்படுத்தும்போது தி.மு.க.வை நோக்கிய விமர்சனங்கள் எழுவதைத் தவிர்க்க முடியாது.
கூடங்குளம் அணுமின்நிலையம், ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட விவகாரங்களில் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் பல்வேறு நிலைப்பாடுகளை எடுத்துள்ளன. நாட்டின் வளர்ச்சியும் இயற்கைப் பாதுகாப்பும் எதிரெதிர் துருவங்களல்ல. இணக்கமானப் புரிதலுடன் மேற்கொள்ளப்பட வேண்டியவை. ஒரு பக்க சார்பாக நின்று அரசியல் செய்வது பூமராங்காகத்தான் மாறும்.
அண்மைக் காலத்தில் இவ்வளவு சிறப்பான தலையங்கத்தை (கட்டுரையை) நான் படித்ததே இல்லை!அவ்வளவு அருமையாக, ஆழமாக, விசாலப் பார்வையோடும் (உதாரணங்களோடு ஒப்பீடு செய்து விளக்கி) நடு நிலைமையோடும் – அதில் உள்ள நியாயத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்ளும்படியாகவும் மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது! 👌🏼👌🏼👏🏼👏🏼❤️❤️💐💐
இவ்வளவு சிறப்பான தலையங்கங்களை வெளியிடுவதனாலையே ஸ்பார்க் மீடியா மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் ஏற்படுகிறது! விரைவில் உங்கள் சேவை பல லட்சம் பேரை சென்றடைய உளமார்ந்த வாழ்த்துகள் 💐💐