நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுவரை 8 முறை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார். பொதுவாக, அவர் தாக்கல் செய்த முந்தைய பட்ஜெட்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கின்றன என்ற விமர்சனங்கள் வெளிப்படுவது வழக்கம். அதனால், இந்த முறை மத்திய அரசின் பட்ஜெட்டில் நடுத்தர மக்கள் மீதான பார்வை கூடுதலாகத் தெரிகிறது.
12 லட்ச ரூபாய் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு வரி கிடையாது என்கிற அறிவிப்பைப் பாராட்டி பல கருத்துகள் வெளியாகி வருகின்றன. புதிய வருமான வரிக் கணக்கின் அடிப்படையில் வரி செலுத்துபவர்களுக்கு நிதியமைச்சரின் அறிவிப்பு பயன் தரும் என்று சுட்டிக்காட்டுபவர்களும் உள்ளனர். இதிலும் மாறுபட்ட கருத்துகளை வெளிப்படுத்தும் பொருளாதார வல்லுநர்கள் இருக்கிறார்கள். மறைமுக வரிகளை நீக்காதவரை இந்த வருமான வரிச் சலுகையால் பெரிய பயனில்லை என்று சுட்டிக்காட்டுகிறார்கள். தங்க நகை இறக்குமதியில் வழஙகப்பட்டுள்ள சலுகை, கார் மற்றும் டூவீலர் வாகனங்கள் சிலவற்றின் மீதான வரிக்குறைப்பு, எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்திக்கு காட்டுகின்ற ஆதரவு, சிறு-குறு தொழில்துறை முன்னேற்றத்திற்கானத் திட்டங்கள் உள்ளிட்டவை நடுத்தர வர்க்கத்தினருக்கு நல்ல சேதியை சொல்லக் கூடியனவாக இருக்கின்றன.
விவசாயிகளின் நலன் வழக்கம்போல புறக்கணிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி இந்திய அளவில் பல விவசாய அமைப்புகளும் விமர்சனம் செய்து கருத்துகளை வெளியிட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள விவசாய சங்கங்களும் தங்கள் கண்டனத்தை வெளியிட்டிருப்பதும் கவனத்திற்குரியது. பட்ஜெட்டில் பீகார் மாநிலத்தின் மீது காட்டப்பட்டிருக்கும் அக்கறை மற்ற மாநிலங்களுக்கு இல்லை என்ற கடும் விமர்சனத்தை பல அரசியல் கட்சிகளும் வைத்துள்ளன. “முதன் முதலாக பீகார் மாநில பட்ஜெட்டை இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதைப் பார்க்க முடிந்தது” என தி.மு.க.வின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி விமர்சித்திருந்தார்.
பீகார் முதல்வர் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளத்தின் ஆதரவு மோடியின் பா.ஜ.க. அரசுக்குத் தேவை என்பதால் அந்த மாநிலத்தின் மீது காட்டப்பட்ட அக்கறை மற்ற மாநிலங்கள் மீது, குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களுக்கானத் திட்டங்களில் காட்டப்படவில்லை என்பதையும் அரசியல் தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தமிழ்நாடு என்ற சொல்லேகூட பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்பதையும், தமிழ்நாட்டிற்கானத் திட்டங்களோ, இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களுக்கான நிவாரணமோ பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை என்பதை தமிழ்நாடு முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், மற்ற கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான இடங்களைத் தொடர்பான அறிவிப்பில்கூட, தமிழ்நாட்டிற்கு புதிதாக எந்த இடமும் கிடைக்காது என்றும், மக்கள்தொகை அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் இந்த இடங்களின் எண்ணிக்கை என்பது தமிழ்நாடு போன்ற சிறந்த மருத்துவக் கட்டமைப்பு கொண்ட மாநிலத்தை முற்றிலுமாகப் புறக்கணிப்பதாகவும் மருத்துவத் துறையைச் சார்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.
வளர்ச்சித் திட்டங்களில் மட்டுமின்றி, பண்பாட்டு அடிப்படையிலும்கூட தென்னிந்தியா மீது இந்தியாவை ஆள்பவர்களுக்குப் பாரபட்சமான பார்வை தொடர்ந்து இருந்து வருவதையும், அது பிரதமர் மோடியின் பா.ஜ.க. ஆட்சியில் மிக அதிகளவில் இருப்பதையும் தமிழ்நாடு தொடர்ந்து சொல்லி வருகிறது. உத்தரபிரதேசத்தின் நடைபெறும் மகா கும்பமேளாவை இந்தியாவின் ஒற்றுமைக்கும் வலிமைக்குமான அடையாளமாக பிரதமர் தொடங்கி பா.ஜ.க. அமைச்சர்கள், தலைவர்கள், பிரமுகர்கள் உள்ளிட்ட அனைவரும் சொல்லி வருகின்றனர். அதே நேரத்தில், தமிழ்நாட்டில் சிவகளை என்ற இடத்தில் நடந்த அகழாய்வில் கிடைத்த இரும்புப் பொருட்களை அறிவியல்பூர்வமான முறையில் ஆய்வு செய்ததில், 5300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்புத் தனிமத்திலிருந்து இரும்பைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தையும், இரும்புக்கருவிகள் செய்யும் முறையையும் அறிந்திருந்தனர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை கடந்த ஜனவரி 23 அன்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் வெளியிட்டும்கூட இது குறித்து பிரதமரிடமிருந்தோ, மத்திய அரசிடமிருந்தோ வாழ்த்துச் செய்திகூட வரவில்லை.
தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறது. உத்தரபிரதேசமும் இந்தியாவில்தான் இருக்கிறது. உத்தரபிரதேசத்தின் கும்பமேளா இந்தியாவின் வலிமையாகப் பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்படுத்தப்பட்டது என்பது பெருமையாகப் பார்க்கப்படவில்லை. இதிலும் இந்திய மத்திய அரசின் பார்வை பாரபட்சத்துடன் இருக்கிறது. ஏற்கனவே சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என அறிவிக்கப்பட்டதால் அதனை மாற்றுவதற்கு பா.ஜ.க தரப்பு கடுமையான வேலைகளை செய்து கொண்டிருக்கிறது. அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையையும் ஏற்க மறுக்கிறது. இந்த பாரபட்சப் பார்வைக் கோளாறை எப்போது சரி செய்யப் போகிறார்கள்?