
சமூக வலைத்தளங்கள் இல்லாத காலத்திலேயே உண்மையைவிட வதந்திகள் வேகமாகப் பரவின. யாராவது ஒருவர் வீட்டிற்கு ஒரு தபால் கார்டு வரும். அதில் ஏதேனும் ஒரு சாமியைப் பற்றி எழுதியிருக்கும். இதை 100 பேருக்கு எழுதி அனுப்பினால் லாட்டரி சீட்டு போல அதிர்ஷ்டம் அடிக்கும் என்றும், இல்லையென்றால் உடல்நலிவு-சொத்துப் பிரச்சினை போன்ற நெருக்கடிகள் ஏற்படும் என்றும் அதில் எழுதப்பட்டிருக்கும். அதைப் படித்தவர்களுக்கு பயமும் பதற்றமும் தொற்றிக்கொள்ளும். உடனே 100 போஸ்ட் கார்டில் அதை எழுதி, 100 பேருக்கு அனுப்பி வைப்பார்கள். அந்த 100 பேர் ஆளுக்கு 100 பேருக்கு எழுதுவார்கள். இப்படியே தொடரும். யாருக்கு லாட்டரி சீட்டு போல அதிர்ஷ்டம் அடித்தது என்ற விவரமோ, யாருக்கு உடல் நலிவு ஏற்பட்டது என்ற செய்தியோ யாருக்கும் தெரியாது. தபால் ஆபீஸில் போஸ்ட் கார்டு விற்பனை மட்டும் அதிகமாக இருக்கும்.
சகோதரிகளுக்கு அண்ணன்-தம்பிகள் பச்சைப் புடவை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்ற செய்தி ஓர் ஆண்டு முழுவதும் பரவியது. அப்போது வாட்ஸ்ஆப், எஸ்.எம்.எஸ். உள்பட எதுவும் கிடையாது. எல்லா அண்ணன்-தம்பிகளும், எல்லா அக்கா-தங்கைகளுக்கும் புடவை எடுத்துக்கொடுத்தார்கள். இது அன்பு நிறைந்த செயல்தான் என்றாலும், இந்த கருத்து எங்கிருந்து தொடங்கியது என்று தெரியவில்லை. ஜவுளி வியாபாரத்திற்கான உத்தியாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டார்கள். நல்லதோ கெட்டதோ உறுதி செய்யப்படாத தகவல் என்றால் உடனே பரவிவிடுகிறது. உறுதியான உண்மைத் தகவலை கொண்டு போய் சேர்ப்பதற்குள் காலம் கடந்துவிடுகிறது. அதனால் இறக்கை கட்டி பறக்கும் வதந்திகளுக்கு இணையாக உண்மைச் செய்தி மூச்சிறைக்க ஓட வேண்டியுள்ளது.
இரண்டு நாட்களாகத் தமிழ்நாடு முழுவதும் ஓர் பரபரப்பு. ஜூன் மாதத்திலிருந்து மின்கட்டணம் உயரும் என்பதுதான் பரபரப்பிற்கான காரணம். இந்த செய்தி எங்கிருந்து வெளியானது, மின்சார வாரியம் ஏதேனும் அறிவித்திருக்கிறதா, ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் கட்டணத்தை உயர்த்தும் திட்டமிருக்கிறதா என்பது குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல், ஜூனில் மின்கட்டண உயர்வு என்ற வதந்தி பரவியது. நடப்பது தி.மு.க. ஆட்சி என்பதால், அ.தி.மு.க தரப்பிலிருந்து இது அதிகம் பரப்பப்பட்டது. அதன் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வும் சேர்ந்து கொண்டது. தி.மு.க.வை எதிர்ப்பதன் மூலமே அரசியலில் பிழைக்க முடியும் என நீண்டகாலமாக செயல்படும் கட்சிகளும், புதிய கட்சிகளும் மின் கட்டண உயர்வு என்பதைப் பரப்பிக்கொண்டிருந்தன.
இது குறித்து மின்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் வீட்டு மின் இணைப்புகளின் கட்டணம் உயராது. தற்போது வழங்கப்படும் அனைத்து இலவச மின்சாரத் திட்டங்களும் அதே சலுகைகளுடன் தொடரும்” என்று தெரிவித்துள்ளார். மத்திய அரசின் உதய் மின் திட்டத்தில், செல்வி.ஜெயலலிதா உடல்நலிவுற்று மருத்துவமனையில் இருந்தபோது, பொறுப்பு முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை கையெழுத்திட்டது. உதய் மின் திட்டம் என்பது மின்சார விநியோகம் தொடர்பான மாநில அரசின் முடிவுகளையும் உரிமைகளையும் கட்டுப்படுத்துகிற திட்டமாகும். அத்தடன், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலம் மின்விநியோகம்-அதற்கானக் கட்டணம் ஆகியவை பரிசீலிக்கப்பட்டு மாற்றி அமைக்கப்படும். அதாவது, மின்கட்டணம் உயர்த்தப்படும்.
கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும் உதய் மின் திட்டத்தில் தமிழ்நாடு சேர்வதற்கு காரணமாக இருந்தது அ.தி.மு.க. அரசு. தற்போது தி.மு.க ஆட்சியின் மின்கட்டணம் உயரப் போவதாக வதந்தி பரப்புவது அ.தி.மு.க. என்ற கட்சி. அரசியலுக்காக மக்களைப் பதற்றமடைய வைக்கும் செய்திகளை சட்டமன்றத் தேர்தல் வரை அதிகம் எதிர்பார்க்கலாம். கிட்டதட்ட ஓராண்டு காலத்திற்கு எது உண்மை, எது பொய் என்று தெரியாத வகையில் நாளொரு வதந்தி-பொழுதொரு பரபரப்பு வெளியாகிக் கொண்டே இருக்கும். அது பற்றி ஆட்சியில் இருப்பவர்கள் மக்களுக்கு விளக்க வேண்டியது கடமையாகும்.
மின்சார ஒழுங்கு முறை ஆணையம் பரிந்துரை செய்தாலும், வீடுகளுக்கான மின் கட்டணம் உயராது என்று மின்துறை அமைச்சர் அறிவித்திருப்பது, இரண்டு நாட்களாகப் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. எனினும், மின்துறை சார்ந்த புதுப்புது வதந்திகள் தொடர்ந்து பரவக்கூடும். மக்களுக்கு அரசின் மீதும் மின்துறை மீதும் நம்பிக்கை தொடர வேண்டுமென்றால், கோடைக்காலத்தில் மின்வெட்டு இல்லாத நிலையை உருவாக்கியிருப்பதுபோல, மாதம் ஒரு முறை மின்கட்டணம் செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்ற வாக்குறுதியை பரிசீலிக்க வேண்டியது அவசியமாகும்.