
இது களை உதிர்காலம் என்று தன் கட்சியின் நிலைமை பற்றி சொல்லியிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அவருடைய கட்சியிலிருந்து மாவட்ட அளவிலான நிர்வாகிகள் வெளியேறத் தொடங்கி, கொள்கை பரப்புச் செயலாளர் வெளியேறி, இப்போது அந்தக் கட்சியின் பிரபலமான நிர்வாகியான காளியம்மாளும் வெளியேறியிருக்கிறார். நாளுக்கு நாள் நிர்வாகிகள் வெளியேறுவது குறித்து செய்தியாளர்களிடம், “இலையுதிர்காலம் போல இது எங்கள் கட்சியின் களை உதிர் காலம். இப்போது என் பக்கம் இருப்பவர்கள் கூட நாளைக்கு வெளியேறலாம்” என்று விரக்தித் தத்துவத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் சீமான்.
இலை உதிரும். ஆனால், களை உதிராது. அதைப் பறிக்க வேண்டும். அல்லது களைக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி அழிக்க வேண்டும். மருந்துகளைப் பயன்படுத்துவதை எதிர்க்கும் ‘இயற்கை விவசாயம்’ ஆதரவாளரான சீமானுக்கு அடிப்படை விவசாயமும் தெரியவில்லை என்பது அவரது உதாரணம் மூலமாக அம்பலப்பட்டிருக்கிறது. ஆனால், எத்தனை முறை அம்பலப்பட்டாலும் அவர் வெட்கப்படவே மாட்டார். ஏனெனில், அவர் நேரடி அரசியல்வாதியல்ல. சில சக்திகளுக்கு ஏஜெண்ட்டாக செயல்படும் அரசியல்வாதி என்பதைத் தன்னுடைய ஒவ்வொரு செயல்பாட்டிலும் அவர் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்.
பெரியாரிய இயக்க மேடைகளில் தன் பேச்சாற்றலை வளர்த்துக்கொண்ட சீமான், அதன்பின் பெரியார் கொள்கைகளுக்கு எதிர்ப்பாளராகி, பெரியார் எனும் சொல்லையே எதிர்க்கும் அரசியலை மேற்கொண்டு, திராவிடம் என்ற அரசியல் கருத்தியலுக்கு எதிரான சாதித் தமிழ்த் தேசியத்தை உயர்த்திப் பிடித்து, அதற்காக வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் வாழும் தமிழர்களிடம் திரள்நிதி என்ற பெயரில் பணத்தை வசூலித்து, தேர்தல் களத்தில் தோற்பதற்காகவே போட்டியிட்டு, தோல்வியிலும் கொழுத்த லாபம் பார்க்கும் இழிவான அரசியல் நிலைப்பாட்டை அவர் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
அரசியல் வளர்ச்சியை எதிர்பார்த்தோ, வேறு ஏதேனும் எதிர்பார்ப்புகளுடனோ சீமானின் நாம் தமிழர் கட்சியில் பயணித்த பலர் இப்போது அதிலிருந்து வெளியேறுகிறார்கள். சிலர் சத்தமே இல்லாமல் ஒதுங்கி விட்டார்கள். ஆனாலும், தன்னுடைய கட்சியின் வாக்குவங்கியை அதிகரித்து, தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுவிட்ட சீமான், தன்னை நம்பும் இளம் வாக்காளர்களையும், தன்னைச் சுற்றி நின்று தன்னுடைய எல்லாக் கருத்துக்கும் கைத்தட்டி-விசிலடித்து, ‘ஆஹா.. ஓஹோ.. பேஷ்..பேஷ்” என்பது போல தலையாட்டுவதற்காக சுற்றி நிற்கும் ஆட்களையும் திடமாக நம்பி சீமானின் அரசியல் பயணம் தொடர்கிறது.
காளியம்மாள் என்பவர் பெண் சீமான் என்கிற வகையில் அந்தக் கட்சியில் செயல்பட்டவர். திராவிட எதிர்ப்பு எனத் தொடங்கி, கலைஞர் கருணாநிதி எதிர்ப்பு, தி.மு.க எதிர்ப்பு, தி.மு.க. அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு, கொச்சையான-மலிவான விமர்சனங்கள் என எதிலும் சீமானுக்கு காளியம்மாள் சளைத்தவரல்ல. உள்கட்சி விவகாரத்தில் ஏற்பட்ட புகைச்சல், நெருப்பாகி நாம் தமிழர் கட்சியிலிருந்து காளியம்மாள் விலகும் சூழல் உருவாகியுள்ளது. இனி அவர் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் போகலாம். தி.மு.கவுடன் பேரம் பேசுகிறார் என சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள், அதே தளத்தில் செயல்படும் தி.மு.க.வினரைப் பதற்றப்படுத்தியிருக்கிறது.
நாம் தமிழர் கட்சியிலிருந்து தி.மு.க.வுக்கு வருவது புதிதல்ல. அது பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில் பெரும் எண்ணிக்கையிலான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அதிலிருந்து விலகி, தி.மு.க தலைவர் முனனிலையில் இணைந்தனர். தி.மு.க.வுக்கு வந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளில் சிலர் மாவட்ட அளவிலான பொறுப்பிலிருந்து மாநில அளவிலான பொறுப்பு வரை தி.மு.க.வின் பல்வேறு அணிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனால், காளியம்மாள் தி.மு.க.வுக்கு வந்தால் அவருக்கு என்ன பதவி கொடுக்கப்படும் என தி.மு.க.வினரே பதற்றத்துடன் விவாதிக்கும் அளவுக்கான நிலைமை சமூக வலைத்தளத்தில் உருவாகியிருக்கிறது.
தி.மு.க.வுக்கு காளியம்மாள் வரமாட்டார் என்றும், அவர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்குப் போவார் என ஒரு ஊகம் வெளியான நிலையில், பா.ம.க.விடம் பேசிவிட்டார், எல்லாம் சரியாகிவிட்டது என அந்தக் கட்சியை சார்ந்த ஒருவர் செய்தி வெளியிட்டிருக்கிறார். காளியம்மாள் விலகியதால் சீமானுக்குப் பெரிய நட்டமில்லை. நாம் தமிழர் கட்சியை அவர் தனி பிராப்பர்ட்டியாகத்தான் நடத்திக் கொண்டிருக்கிறார். அதனால் அவருடைய லாப நோக்கு அரசியலுக்கு பாதிப்பில்லை.
மாறாக, நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணையில், அந்த நடிகையே புகாரை வாபஸ் பெற்றிருந்தபோதும், சீமான் மீதான குற்றச்சாட்டு சாதாரணமானதல்ல. அவர் விசாரிக்கப்பட வேண்டியவர். பாலியல் தொடர்பின் மூலம் பண லாபம் பெற்றிருக்கிறார். கடும் தண்டனைக்குரிய சட்டப்பிரிவின் கீழ் உள்ள இந்த வழக்கை, புகார்தாரர் வாபஸ் பெற்றாலும் விசாரணை நடத்தலாம் என உயர்நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு மீதான கவனம் வராதபடி, சீமானை காளியம்மாள் காப்பாற்றியிருக்கிறார். துப்பினால் துடைத்துக்கொள்வேன் என்று அரசியல் பிரமுகரும் சொற்பொழிவாளருமான நாஞ்சில் சம்பத் சொன்னார். சீமான் அதை செய்து கொண்டிருக்கிறார்.
x4vymn
pu4hyg