மூதாட்டிக்கு சொந்தமான ரூ.800 சொத்துக்களை போலியான ஆவணம் தயாரித்து கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆட்டைய போட்டிருக்கிறார் அதிமுக பிரமுகர் கேபிள் செந்தில்குமார்.
சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஷேக் சிராஜூதீன். இவரது மனைவி முகமதா பேகம்(79). சிராஜீதீனுக்கு தஞ்சாவூர் நாஞ்சில்கோட்டை பூர்வீகம். இந்த பகுதியில் உள்ள சிராஜ்பூர், செஞ்சிப்பட்டியில் இவருக்கு ஏராளமான சொத்துக்கள் இருந்தன. கடந்த 2025ம் ஆண்டில் சேக் சிராஜூதீன் மறைந்துவிட்டார். இதன் பின்னர் தமிழ் தெரியாத முகமது பேகமுக்கு எல்லா உதவிகளையும் செய்து கொடுத்து வந்துள்ளார் தஞ்சாவூரைச் சேர்ந்த ஸ்ரீவித்யா சுமதி. சிராஜிதீனுக்கு சொந்தமான சொத்துக்களை எல்லாம் ஸ்ரீவித்யா சுமதிதான் கவனித்து வந்துள்ளார்.

தஞ்சாவூரைச் சேர்ந்த வழக்கறிஞர் நாகராஜ் பாலசுப்பிரமணியன், அதிமுக ஜெயலலிதா பேரவை மத்திய மாவட்ட தலைவர் கேபிள் செந்தில்குமார் ஆகியோர் ஸ்ரீவித்யா சுமதிக்கு அறிமுகமாகி இருக்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் கூட்டு சேர்ந்து முகமதா பேகத்தின் சொத்துக்களை அபகரிக்க, ஆங்கிலம் தெரியாத அவரிடம் தமிழில் போலியான ஆவணங்கள் தயார் செய்து அதில் கையெழுத்து பெற்றுள்ளனர். தங்களுக்கு தானமாக வழங்கியதாக பவர் பத்திரம் தயார் செய்து முகமதா பேகத்தின் சொத்துக்களை தங்கள் பெயருக்கு மாற்றி இருக்கிறார்கள். 2017 முதல் 2022 வரை இந்த மோசடி நடந்திருக்கிறது. இந்த மோசடி விவகாரம் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக முகமதா பேகத்தின் உடல்நலத்தில் அக்கறை கொண்டது போல் நாடகமாடி அவரை சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

நாஞ்சில்கோட்டையில் உள்ள பெட்ரோல் நகர் அதன் அருகில் உள்ள சிராஜ் நகர் மற்றும் ஒரு லட்சத்து 18 ஆயிரம் சதுர அடி கொண்ட ரகுமான் நகர், 50சதுர அடியில் அமைந்துள்ள பங்களா வீடு, செங்கிப்பட்டியில் உள்ள 41 ஏக்கர் நிலம், நந்தவனப்பட்டி உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள 250 ஏக்கர் நிலம் ஆகிய சொத்துக்களின் மதிப்பு ரூ.800 கோடி என்று கூறப்படுகிறது. இவற்றை பிளாட் போட்டு விற்பனை செய்திருக்கிறார்கள். இதில் பலர் பிளாட் வாங்கி புதிய வீடுகளையும் கட்டி இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் முகமது பேகத்திற்கு விபரம் தெரியவந்திருக்கிறது.
முகமது பேகத்தின் உறவினர் முகமது எலியாஸ் , தன் பெரியம்மாவுக்கு சொந்தமான இடங்களை பிளாட் போட்டு விற்பது தெரியவந்து வில்லங்க சான்றிதழ் எடுத்து பார்த்த போதுதான் சொத்துக்கள் பெயர் மாற்றம் செய்திருப்பது தெரியவந்துள்ளது. முகம்மது பேகத்திடம் பணம் கொடுத்து வாங்கிவிட்டதாக சொல்லி இருக்கிறார் கேபிள் செந்தில்குமார்.

விபரம் அறிந்து சிங்கப்பூரில் இருந்து தஞ்சாவூர் வந்த முகமது பேகம், தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் தெரித்திருக்கிறார். போலீசார் தன் மீது வழக்கு பதிவு செய்யாமலிருக்க கேபிள் செந்தில்குமார் அழுத்தம் கொடுத்து வந்திருக்கிறார். ஆனால் எஸ்டிபிஐ கட்சியினர் இந்த விவகாரத்தை கையில் எடுத்து போராட்டம் அறிவித்ததால் கேபிள் செந்தில்குமார், நாகராஜ் பாலசுப்பிரமணியன், ஸ்ரீவித்யா சுமதி உள்ளிட்ட 12 பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
இது குறித்து எஸ்.டி.பி.ஐ தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில், ‘’மறைந்த சிராஜுதீன் சொத்துக்களை போலியாக ஆவணம் தயார் செய்த செந்தில் என்கிற கேபிள் செந்தில்குமார் அவரது மனைவி கவிதா மற்றும் கூட்டாளிகள் மீது தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் குற்றன் எண்:36/2025ன் படி 406,409,420, 465, 467,468,470,471.120(b)q2 ன்படி வழக்கு பதிவு செய்த காவல்துறைக்கு மனமார்ந்த நன்றி! ’’என்று ஊரெங்கும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
