படப்பிடிப்பின் கடைசிநாளில் அன்றைய தினம் பங்கேற்ற கலைஞர்களுக்கு தயாரிப்பாளரோ, முன்னனி நடிகரோ பரிசு கொடுத்து மகிழ்விப்பது வழக்கம்.
பணமாகவோ அல்லது புத்தாடைகள் போன்ற ஏதாவது ஒன்றாகத்தான் இருக்கும் அந்த பரிசு. ஆனால் அஜித்குமாரோ தனது விடாமுயற்சி படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பில் வித்தியாசமான பரிசினை அளித்திருக்கிறார்.
ஹைதராபாத்தில்தான் இறுதி நாள் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. சென்னையில் இருந்து சென்ற கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் இரண்டு பேருந்துகளில் புறப்பட்டிருக்கிறார்கள்.
அப்போது அஜித், ஒவ்வொருவருக்கும் ஒரு ஃபுல் பாட்டில் மது கொடுத்திருக்கிறார். ஃபுல் பாட்டில் கிடைத்ததில் மகிழ்ச்சியாக எல்லோரும் பேருந்தில் ஏறிச்சென்றிருக்கிறார்கள். ஆந்திர எல்லையை கடப்பதற்குள் அந்த மகிழ்ச்சி பறிபோயிருக்கிறது. திபுதிபுவென்று இரண்டு பேருந்திலும் ஏறிய போலீசார் அனைத்து மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துவிட்டு போயிருக்கிறார்கள்.
பின்னர்தான் அவர்களுக்கு விபரம் தெரியவந்திருக்கிறது.
சென்னையில் இருந்து வந்த கலைஞர்களுக்கு மட்டும் மது பாட்டில் கொடுத் திருக்கிறார். ஹைதராபாத் கலைஞர்களுக்கு கொடுக்காமல் சென்றிருக்கிறார் அஜித். இதனால் ஆத்திரமடைந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த அந்த கலைஞர்கள், இரண்டு பேருந்து முழுவதும் சரக்கு பாட்டில்களோடு போகிறார்கள் என்று போலீசுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள் என்பது தெரிந்ததும், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விட்டதே என்று நொந்து திரும்பியிருக்கிறார்கள்.