நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ராமர் கோயில் விவகாரத்தை தான் பாஜக முக்கிய ஆயுதமாக கையில் ஏந்தியது. ராமர் கோயிலால் பாஜகவின் வாக்கு வங்கி பெருமளவில் உயரும் என்று கனவு கண்டிருந்தது பாஜக. அதனால்தான் அவசர அவசரமாக திறப்பு விழா எடுத்தார்கள். ஆனால் பாஜகவுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.
அயோத்தி ராமர் கோயில் அமைந்துள்ள உ.பி. பைசாபாத் தொகுதியில் பாஜக வேட்பாளர் லல்லு சிங் படுதோல்வி அடைந்துள்ளார்.
ராமர் கோயில்.. ராமர் கோயில்… என்று என்னதான் கூவினாலும் ராமர் கோயில் அமைந்திருக்கும் தொகுதி மக்கள் பாஜகவை புறக்கணித்து விட்டார்கள்.
ராமர் கோயில் அமைந்திருக்கும் தொகுதியே தங்களை புறக்கணித்ததில் படு அப்செட்டில் இருக்கின்றனர் பாஜகவினர். ராமர் கோயிலால் இந்தியா முழுவதும் வாக்குகள் குவியும் என்று நினைத்திருந்த பாஜகவுக்கு அது நடந்தேறாமல் போனதால், ”அயோத்தியில் இருக்கும் மக்கள் இந்துக்களே அல்ல” என்று வசைபாடி வருகின்றனர் பாஜகவினர்.
பாஜக 3வது முறையாக ஆட்சிக்கு வந்தால், பீகாரில் சீதாவின் பிறப்பிடமாக சொல்லப்படும் சீதார்மஹி மாவட்டத்தில் உள்ள சீதா கோவில் சர்வதேச வழிபாட்டு தலமாக மேம்படுத்தப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்திருந்தார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
அதுமட்டுமல்லாமல், ‘’இது அன்னை சீதாவின் பூமி. இங்கே பசுக்கடத்தல், பசு படுகொலைகளை அனுமதிக்க மாட்டோம். பசுவதை செய்பவர்களை தலைகீழாக தொங்கவிடுவோம்’’ என்றும் எச்சரித்திருந்தார் அமித்ஷா.
அயோத்தியில் ராமர் கைவிட்டாலும் பீகாரில் சீதை கை கொடுத்திருக்கிறது பாஜகவுக்கு.
கடந்த 2019ல் நடந்த மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 39 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போதைய 2024 தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 24 இடங்களை கைப்பற்றி இருக்கிறது.