விளையாட்டுப் போட்டிகளுக்கு சென்னை எந்தளவு தகுதி பெற்றிருக்கிறது என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் சோதித்துப் பார்க்கப்படுகிறது. சேப்பாக்கத்தில் எம்.ஏ.சிதம்பரம் பெயரிலான கிரிக்கெட் ஸ்டேடியம் அமைந்தபிறகு, சென்னையில் டெஸ்ட் மேட்ச்கள் தொடங்கி ஐ.பி.எல். போட்டிகள் வரை அமர்க்களப்படுகின்றன. இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர்களாக இருந்தவர்கள்-இருப்பவர்கள் தங்களுக்குப் பிடித்த மைதானங்களில் சென்னையைக் குறிப்பிடத் தவறுவதில்லை.
இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் கிரிக்கெட் வீரர்களும் சென்னை கிரிக்கெட் மைதானத்தில் விளையாடிய அனுபவத்தைப் பெருமையுடன் பகிர்கிறார்கள். ஒரு போட்டியின்போது, கடைசி ஓவர்களில் வெற்றி பாகிஸ்தான் அணி பக்கம் சென்ற நிலையில், அந்த நாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தி கைத்தட்டியவர்கள் சென்னை கிரிக்கெட் ரசிகர்கள்.
கிரிக்கெட் அளவுக்கு வேறு எந்த விளையாட்டும் இந்திய அளவிலும் தமிழ்நாட்டிலும் புகழ் பெற்றிருக்காவிட்டாலும், செல்வி.ஜெயலலிதா ஆட்சியின்போது நடத்தப்பட்ட தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் புதிய விளையாட்டுகளுக்கும் அதற்குத் தேவையான சர்வதேச விளையாட்டு அரங்குகளுக்கும் வாய்ப்பாக அமைந்தன. தடகளம், கால்பந்து போட்டிகளை நடத்துவதற்கேற்ற நேரு விளையாட்டரங்கம், ஹாக்கிப் போட்டிக்கான எழும்பூர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கம், வேளச்சேரி நீச்சல் விளையாட்டரங்கம் போன்றவை முக்கியமானவை.
டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகளுக்கெனத் தனியார் பங்கேற்புடன் சென்னையில் 30 ஆண்டுகளுக்கு முன்பே சர்வதேச அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு போரிஸ் பெக்கர் போன்ற சாம்பியன்கள் பங்கேற்றுள்ளனர். பீச் வாலிபால் எனப்படும் கடற்கரை மணலில் ஆடும் சர்வதேச வாலிபால் போட்டியும் சென்னையில் நடத்தப்பட்டுள்ளது.
சென்னை நேரு விளையாட்டரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட செஸ் ஒலிம்பியாட் போட்டி, மாமல்லபுரத்தில் பல சுற்றுகளாக நடந்தன. இந்தப் போட்டிகள் சர்வதேசத் தரத்தில் அமைந்ததுடன், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தில் நடந்த செஸ் விளையாட்டுப் போட்டிகளும் இத்தகையத் தரத்துடன் நடைபெறவில்லை என்று செஸ் சாம்பியன்கள் சொல்லக்கூடிய அளவில் செஸ் ஒலிம்பியாட் அமைந்தது. ஒன்றிய அரசின் பங்கேற்புடனான இளைஞர்களுக்கான கேலோ விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பிற நகரங்களிலும் மாநில விளையாட்டுத் துறையால் சிறப்பாக நடத்தப்பட்டது.
அந்த வரிசையில், ஃபார்முலா 4 கார் ரேஸ் சென்னையில் நடந்து முடிந்துள்ளது. ஸ்ட்ரீட் சர்க்யூட் என்ற முறையில் சென்னை கடற்கரை-தீவுத்திடல், அண்ணாசாலை (மவுண்ட் ரோடு) பகுதிகளில் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில் அது குறித்த ஆர்வமும் எதிர்ப்பும் பரவலாக வெளிப்பட்டன.
எதிர்ப்பாளர்கள் தங்களின் குரலாக, மக்கள் நடமாடும் சாலையில் போட்டியா? யாருக்காவது விபத்து ஏற்பட்டால் என்னாவது? நல்ல சாலைகளைப் பாழ்படுத்தலாமா? கார் ரேஸ் நடத்துவதற்குப் பதில் பள்ளிக்கூடம் கட்டலாமே? மருத்துவமனை கட்டலாமே? ரேஸ் நடக்கும் பகுதியில் மருத்துவமனைகள் இருப்பதால் கார்கள் ஏற்படுத்தும் இரைச்சலால் நோயாளிகள் பாதிக்கப்பட மாட்டார்களா? என்ற கேள்விகளை முன்வைத்ததுடன், அரசியல் சார்ந்த விமர்சனங்களையும் தனிப்பட்ட வன்மங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, “மழை பெய்து கார் ரேஸ் நடத்த முடியாமல் போக வேண்டும் என பிரார்த்திக்கிறேன்” என்ற அளவுக்கு இறங்கி அடித்தார்கள்.
ஃபார்முலா 4 ரேஸை ஆதரித்தவர்களோ, “இந்த ரேஸ் நடத்துவதால் வருங்காலத்தில் தொழில் முதலீடுகள் கிடைக்கும். வேலைவாய்ப்புகள் பெருகும். நிலத்தின் மதிப்பு உயரும். சுற்றுலா பெருகும்” என்று உண்மையும் கற்பனையும் கலந்த காரணங்களை அடுக்கினார்கள். எரிந்த கட்சி-எரியாத கட்சி என்கிற லாவணிக்கிடையே மழை குறுக்கிடாமல் ஃபார்முலா 4 கார் ரேஸ் சென்னையில் வெற்றிகரமாக நடந்திருக்கிறது. இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி அவர்களின் பங்கு முக்கியமானது.
விளையாட்டுப் போட்டிகளை சமூக நலத் திட்டங்களுடன் ஒப்பிடுவது சரியான அணுகுமுறையல்ல. அதே நேரத்தில், இத்தகையப் போட்டிகள் எந்தளவுக்குத் தமிழ்நாட்டு இளைஞர்களை சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கச் செய்யும் என்பதும், இத்தகையப் போட்டிகளால் சென்னைக்கு சர்வதேச அளவில் என்ன முக்கியத்துவம் கிடைக்கம் என்பதும், தொடர்ச்சியான வாய்ப்புகள் என்னென்ன என்பதும்தான் கவனத்திற்குரியது.
நியாயமான விமர்சனங்களை கவனத்தில் கொண்டு, அற்பமான விமர்சனங்களைப் புறந்தள்ளி, சர்வதேசத் தரத்திற்கான உண்மையான முயற்சிகளும், அதில் தமிழ்நாட்டவருக்கான உரிய பங்கேற்புமே எந்த ஒரு விளையாட்டுக்குமான ஃபார்முலாவாகும்.