
cm stalin announces ban on the word colony in government records
அரசு சார்பில் சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டாலும் ஊர் என்றும் சேரி என்றும் மக்கள் வாழுமிடங்கள் இன்னுமும் சமுதாய ரீதியாகப் பிரிந்திருக்கும் சாதி ஏற்றத்தாழ்வு கொண்ட கட்டமைப்பு முழுமையாக மாறவில்லை. சேரி என்ற சொல் எழுத்து வடிவில் தவிர்க்கப்பட்டு காலனி என்று குறிப்பிடுவது வழக்கமாக உள்ளது. பேச்சு வழக்கிலும் பட்டியல் இன மக்கள் வாழ்கின்ற இடமாக காலனி குறிப்பிடப்படுகிறது.
இது ஆங்கிலச் சொல். வரலாற்றில் பிரிட்டிஷ் காலனி நாடுகள், பிரெஞ்சு காலனி நாடுகள் எனக் குறிப்பிடுப்படுவதை அறியலாம். இந்தியாவின் பெரும்பகுதி பிரிட்டிஷ் காலனிப் பகுதியாக இருந்து விடுதலை அடைந்தது. புதுச்சேரி (பாண்டிச்சேரி) பிரெஞ்சு காலனியாக இருந்து, இந்தியாவுக்குப் பிறகு தனியாக விடுதலை அடைந்தது. ஒன்றின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதை காலனி என்று வரலாற்றில் குறிப்பிடுகிறார்கள். வரிசையான குடியிருப்புகளுக்கும் காலனி என்றுதான் பெயர். ஆனால், காலனி என்கிற ஆங்கிலச் சொல் தமிழில் பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதியாகப் புழக்கத்தில் உள்ளது.
அதே சொல் அரசு ஆவணங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. ஊருக்கு வெளியே புதிதாகப் ப்ளாட் போடப்படும் இடங்கள் நகர் எனப்படுகின்றன. ஊருக்கு வெளியே நெடுங்காலமாக வாழும் மக்கள் உள்ள இடங்களை காலனி என்று குறிப்பிடுகிறார்கள். இது சாதிரீதியான குடியிருப்பைக் குறிக்கும் சொல்லாக இருப்பதால், காலனி என்ற வார்த்தை பட்டியல் இன மக்களை இழிவாக அடையாளப்படுத்தும் சொல்லாக பயன்பாட்டில் உள்ளது. இதுகுறித்து, ஒரு பெண் தன் கருத்தை வெளிப்படுத்த, அது சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சட்டமன்றத்தில் கவனத்தில் கொண்டு வரப்பட்டது.
சட்டமன்றத்தில் அறிவிப்பினை வெளியிட்ட முதலமைச்சர், காலனி என்ற சொல் ஆதிக்குடிகளை இழிவுபடுத்தும் வகையில் பயன்படுத்தப்படுவதால் அந்த சொல் பயன்பாட்டில் இருந்து நீக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளார். குறிப்பாக, அரசு ஆவணங்களில் இந்த வார்த்தை இனி பயன்படுத்தப்படாது என்ற நிலை முதல் கட்டமாக உருவாகும். அதே நேரத்தில், காலனி என்ற சொல்லைப் பயன்படுத்த தடை விதித்தால் போதுமா? மனதிலிருந்து காலனி என்ற சாதிபேதம் எப்போது நீங்கும்? என்ற விமர்சனக் கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் நிர்வாகியான எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா இதே கருத்தை எழுப்பியிருக்கிறார். சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்ற இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து நடத்தி வருவது கவனித்தில் கொள்ளத் தக்கது. இந்தியாவில் காங்கிரஸ் கட்சி, திராவிட இயக்கங்கள் ஆகியவை ஒவ்வொரு கட்டத்திலும் தீண்டாமைக்கு எதிரான இயக்கங்களைக் கட்டமைத்துள்ளன.
திராவிட இயக்கமான நீதிக்கட்சியின் ஆட்சியில் பட்டியல் இன மக்களை இழிவான பெயர்களில் குறிப்பிடுவதற்கு தடை விதிக்கப்பட்டதுடன், பேருநது உள்ளிட்ட பொதுப் பயன்பாடுகளில் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையையும் நீக்கியது. இதற்கான உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் பயன் கிடைத்தது. இந்தியா விடுதலையான பிறகு, தீண்டாமை ஒழிப்பிற்கும், சாதி ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்கும் பல்வேறு சட்டவழிகள் உருவாக்கப்பட்டன. எனினும், ஆயிரமாயிரம் ஆண்டுகாலமாக மனித மனதில் ஊறியிருக்கும் சாதி உணர்வும், அது குடும்ப உறவுகள் முதல் குலதெய்வ வழிபாடு வரை நிறைந்திருப்பதும் சட்டங்களைக் கடந்து சமுதாயத்தில் சாதிப் பாகுபாட்டை நீடிக்கச் செய்து வருகிறது.
தமிழ்நாட்டில் பஞ்சமர் உள்ளிட்ட சொற்களால் அழைக்கப்பட்ட மக்களை ஆதி திராவிடர்கள் என அரசுத் துறைகளின் சார்பில் குறிப்பிடுவது வழக்கம். இது 1920களில் நீதிக்கட்சி ஆட்சி முதல் நடைமுறையில் உள்ளது. தாழ்ந்தவர்கள் என்பது தவிர்க்கப்பட்டு, தாழ்த்தப்பட்டவர்கள் என்ற சொல் ஒரு கட்டத்தில் பயன்படுத்தப்பட்டது. 1990ல் டாக்டர் அம்பேத்கர் நூற்றாண்டைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், அமைப்புகளின் எழுச்சியினால் தலித் என்ற சொல் இந்திய அளவில் பயன்படுத்தப்பட்டது. தற்போது அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது போல பட்டியல் இனத்தவர் என்ற சொல் எழுத்து வடிவில் பயன்படுத்தப்படுகிறது. எனினும், பொதுமக்களின் பயன்பாட்டில் அவரவர் பகுதிக்கேற்ற சொற்கள் புழங்குகின்றன.
இந்த நிலையில்தான், காலனி என்று குறிப்பிடுவதை நீக்கும் வகையில் முதலமைச்சரின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சொல்லை மட்டுமின்றி, அதன் அடிப்படையிலான உணர்வையும் மனதிலிருந்து நீக்கும்போதுதான் உண்மையான சமத்துவம் மலரும். அது அரசாங்கத்தால் மட்டுமே நடக்கக்கூடியதல்ல. தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பணி. ஒருவர் மீது மற்றொருவர் பழி போட்டுத் தப்பிப்பதால் தீர்வு கிடைக்காது.