மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களுக்கு எதிராக செயல்படும் ஆளுநர்களின் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று டெல்லியில் நடந்த 10வது காமன்வெல்த் பாராளுமன்ற கூட்டமைப்பு மாநாட்டில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு வலியுடுத்தினார்.
சட்டமன்றங்களில் ஒரு மனதாகவும், பெரும்பான்மை உறுப்பினர்களாலும் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரமுடியாத சூழல் நிலவுகிறது என்று அந்த மாநாட்டில் சொன்ன அப்பாவு, சமீப காலங்களாக இந்த நிலை நீடிக்கிறது என்றும் கூறினார்.
இதனால் தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் சிக்கலையும் அவர் அந்த மாநாட்டில் விவரித்தார்.
ஆளுநர் அலுவலகத்திற்கும் குடியரசுத்தலைவர் அலுவலகத்திற்கும் இடையே நீட் விலக்கு மசோதா இழுத்தடிக்கப்படுவதால் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பெரும் சவாலாக இருக்கிறது என்று கவலை தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை எந்தக்காரணமும் சொல்லாமல் ஆளுநர் நிறுத்தி வைத்தார். இந்த பிரச்சனையை உச்சநீதிமன்றத்திற்கு கொண்டு சென்ற பின்னர், அந்த மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. அந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல், அவற்றை குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைத்தார். ஒப்புதல் அளிக்காமல், அதே நேரம் எந்தக்காரணமும் சொல்லாமல் குடியரசுத்தலைவரும் இதில் பல மசோதாக்களை நிறுத்தி வைத்தார்.
இப்படி மசோதாக்களை நிறுத்தி வைத்திருப்பதன் மூலம் தமிழ்நாட்டு மக்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர் என்பதை எடுத்துச்சொன்ன அப்பாவு,
இல்லாத அதிகாரங்கள் தங்களுக்கு இருப்பதாக நினைத்துக்கொண்டு மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களுக்கு எதிராக செயல்படும் ஆளுநர்களின் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.