தீபாவளிக்கு முந்தைய நாள் வரை துணிக்கடையில், பட்டாசுக்கடையில், மளிகை கடையில், இனிப்பு பலகாரக் கடையில் கூட்டம் அதிகமாக இருக்கும். தீபாவளி நாளில் இறைச்சிக் கடையில் கூட்டம் அதிகமாக இருக்கும். அன்றைய நாளில் அதைவிடவும் கூட்டம் அதிகமாக இருப்பது டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனைக் கடைகளில்தான். இந்த முறை தீபாவளியன்றும் அப்படித்தான் இருந்தது. தீபாவளிக்கு முந்தைய நாள், தீபாவளி நாள், அடுத்த நாள் என 3 நாட்களும் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டே டாஸ்மாக் வியாபாரம் நடைபெறுகிறது. ஒவ்வொரு தீபாவளிக்கும் இதுதான் நிலைமை.
தமிழ்நாட்டில் நாள்தோறும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூலமாக சராசரியாக 150 கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெறுகிறது. வார இறுதிநாட்களில் இது 200 கோடி ரூபாய் அளவுக்கு உயர்கிறது. பண்டிகை நாட்களில் 225 கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெறுவது வழக்கம். இந்த தீபாவளியைப் பொறுத்தவரை, தீபாவளிக்கு முதல் நாள் 202 கோடியே 59 லட்ச ரூபாய்க்கும், தீபாவளி நாளன்று 235 கோடியே 94 லட்ச ரூபாய்க்கும் மதுபானம் விற்பனையாகியுள்ளது. இந்த இரண்டு நாள் விற்பனைத் தொகை என்பது 438 கோடியே 53 லட்ச ரூபாய் ஆகும். இது கடந்த ஆண்டைவிட 29 கோடி ரூபாய் குறைவு என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இரண்டு நாள் கணக்கு என்ற அடிப்படையில் இது குறைவாகத் தெரிந்தாலும், தீபாவளிக்கு மறுநாளும் அரசு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், அதற்கடுத்த இரண்டு நாட்கள் சனி, ஞாயிறு கிழமைகள் என்பதாலும் இந்த முறை தீபாவளிக் கால டாஸ்மாக் விற்பனை என்பது 5 நாட்களாக அமைந்துவிட்டது. எனவே, மீதமுள்ள 3 நாட்களும் ஆகக்கூடிய விற்பனையையும் சேர்த்தே தீபாவளி கணக்கில் எழுத வேண்டும். இதுபோக, மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் பார் லைசென்ஸ்கள் பல இடங்களிலும் வழங்கப்பட்டுள்ளன. அங்கே விற்கப்படுவதும் டாஸ்மாக் சரக்குதான். ஓட்டல் பார்களிலும் கூட்டம் கூடுகிறது. 29 கோடி ரூபாய் விற்பனைக் குறைவு என்பதற்கு இதுபோன்ற இடங்களை நோக்கி மது அருந்துபவர்கள் செல்வதும் காரணமாக உள்ளது.
குடிகாரர்கள், மது அருந்துவோர் என்பதையெல்லாம் மாற்றி, ‘மதுப்பிரியர்கள்’ என்று பட்டம் கொடுத்துவிட்ட பிறகு, மதுவைத் தங்களுக்குப் பிரியமான இடத்திற்குச் சென்று அருந்துவதுதானே அவர்களுக்குப் பிடித்தமானதாக இருக்கும்? டாஸ்மாக் என்பது மதுபாட்டில்களை ஒட்டுமொத்தமாகக் கொள்முதல் செய்வதிலும், அதனை விற்பனை செய்வதிலும் கவனம் செலுத்துகிற அரசு நிறுவனமாக இருக்கிறது. எந்தவொரு வியாபாரத்திலும் வாடிக்கையாளருக்கான சேவை என்பது வணிகத்தின் அடிப்படைத் தன்மைகளில் ஒன்றாக இருக்கும். டாஸ்மாக் சில்லரை விற்பனையில் அது சுத்தமாக கிடையாது. அந்தக் கடைகளிலும் அதையொட்டிய பார்களிலும் சுத்தமும் கிடையாது.
எந்த அரசாக இருந்தாலும் தனது நிதிநிலை அறிக்கையில் மக்களின் அன்றாடத் தேவைகளுக்கானப் பொருட்கள் மீது வரி விதிக்க பல முறை யோசித்தே முடிவெடுக்கும். ஆனால், மதுபாட்டில்களின் விலையும் வரியும் உடனடியாக உயர்த்தப்படும். மதுவிலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் என்று எந்தக் கட்சியும் போராட்டம் நடத்த முடியாதே! அந்த வகையில், ஆண்டுதோறும் டாஸ்மாக்கில் மதுபாட்டில்களின் விலை உயர்கிறது. அவற்றின் தரம் உயர்கிறதா என்பதும், மதுபாட்டில்களை வாங்கிச் செல்பவர்களின் பயன்பாட்டு இடம் சுத்தமாக இருக்கிறதா என்பது பற்றி டாஸ்மாக் நிறுவனம் அக்கறை காட்டுவதில்லை.
குடிப்பதற்காக உள்ள இடம் என்பது பேருந்து நிலையத்தின் இலவசக் கழிப்பறையைவிடவும் மோசமான நிலையில் இருக்கும். ஒருவேளை, “நீங்கள் தொடர்ந்து குடிபழக்கத்திற்கு அடிமையானால் உங்கள் உடலும் இந்த இடம்போலத்தான் மோசமாக ஆகிவிடும்” என்பது அரசாங்கத்தின் குறியீடோ என்னவோ! மதுபோதை ஏறியதும் சுற்றுப்புற நிலவரத்தை மனது உணராது என்பதால் அப்படி வைத்திருக்கிறார்களோ!
குடித்துவிட்டு வெளியே வந்து வாகனத்தில் செல்பவர்களை நூறு மீட்டரிலேயே போலீஸ் மடக்கி ஊதச் சொல்கிறார்கள். அபராதத் தொகையின் அளவினால், ஏற்றிய போதையெல்லாம் இறங்கி வீட்டிற்குச் செல்கிறார்கள் மதுப்பிரியர்கள் எனப்படும் குடிகாரர்கள். மனமகிழ் மன்றங்கள் நடத்தும் பார்களுக்குப் பக்கத்திலேயோ, பார்கள் உள்ள ஹோட்டல்களுக்குப் பக்கத்திலேயோ இப்படி போலீஸ் நிற்பதில்லை. கூடுதல் விலை என்றாலும் தரமான சரக்கு, சுத்தமான இடம், வாடிக்கையாளருக்கான சேவை இவையெல்லாம் கிடைப்பதால், மதுப்பிரியர்கள் அங்கே செல்வது அதிகரித்து வருகிறது. குடித்து முடித்தபின் அருகில் உள்ள சந்து தெருக்கள் வழியே, போலீஸ் நெருக்கடியின்றி வீட்டுக்கும் போய்ச் சேர்ந்துவிடுகிறார்கள். வீட்டில் உள்ளவர்கள் ஊதிக்காட்டச் சொல்லும்போது மாட்டிக்கொள்வது தனி ரகம்.
கூடுதல் விலை கொடுத்து தீபாவளியைக் கொண்டாட முடியாத மதுப்பிரியர்களுக்கு டாஸ்மாக்கே கதி. இருக்கின்ற பணத்திற்கு, கிடைப்பதை வாங்கி, ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் நின்று ஊற்றிக்கொண்டு போகிறார்கள். விற்பனைக் குறைவு என்ற கணக்கிற்கும் மதுப்பிரியர்களின் தேவைக்கும் உள்ள வித்தியாசத்தை டாஸ்மாக் நிறுவனம் கவனிக்க வேண்டிய நிலை வந்துள்ளது.
மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு.