தமிழன் என்றோர் இனம் உண்டு- தனியே அவருக்கோர் குணம் உண்டு என்று பாடியவர் நாமக்கல் இராமலிங்கம் என்ற கவிஞர். அந்த தனிக்குணம் என்ன என்பதை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கியங்களும், திருக்குறளும் குறிப்பிட்டுள்ளன. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற குறளும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற புறநானூறு பாடலும்தான் அந்தத் தனிக் குணங்களாகும்.
பிறப்பில் ஏற்றத்தாழ்வு இல்லை, எல்லா மனிதர்களும் உறவினர்கள்தான் என்கிற இந்தக் கருத்துகளும் தமிழர்களின் உயர் பண்பாட்டை விளக்கக்கூடியவை. அவற்றுடன் விருந்தோம்பல், கல்வி, பசிப்பிணி நீக்குதல், ஒன்றுசேர்ந்து வாழ்தல் ஆகியவையும் தமிழர்களின் அறங்களாக இலக்கியங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
தமிழர்களின் தனிப் பண்பாட்டிற்கு நேர் எதிராக வெறுப்பையும் பாகுபாட்டையும் விதைக்கின்ற கலாச்சாரத்தை எல்லா இடங்களிலும் பா.ஜ.க. பரப்பி வருகிறது. வடமாநிலங்களில் இப்படிப்பட்ட வெறுப்பு பரப்புரைகளால் கடந்த 30 ஆண்டுகளாக உருவான மதக்கலவரங்கள், அதன் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் சொல்லி மாளாதவை. இந்தியாவில் உள்ள மதச் சிறுபான்மையினர் வாழ்வதற்கே அச்சப்படும் வகையிலான நிலைமைதான் இன்றைய யதார்த்தம்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடைப்பெற்று வருகிறது. அங்குள்ள பள்ளிகளுக்கு அரசு சார்பில் ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளான டிசம்பர் 6ஆம் நாளை வீர நாளாக (ஷௌர்யா திவாஸ்) கொண்டாட வேண்டும் என்பதுதான் அந்த அறிவிப்பு. ஒரு மதத்தினரின் அடையாளமாக இருந்த மசூதியை இடித்த நாளை வீர நாளாக பள்ளிக் குழந்தைகளைக் கொண்டாடச் செய்வது அவர்களின் இளம் நெஞ்சில் விஷ விதையை நடுவதாகும். சிறு வயதிலேயே மதவெறியை ஊட்டும் வேலையாகும். ராஜஸ்தான் பா.ஜ.க. அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு கிளம்பியதால் அதனைத் திரும்பப் பெற்றிருக்கிறார்கள். மற்றொரு சந்தர்ப்பத்தில் இதை செயல்படுத்துவார்கள். அதுதான் பா.ஜ.க.
உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற வடமாநிலங்களில் மதவெறி அரசியலை வைத்து வெற்றி பெறுவதுபோல தமிழ்நாட்டில் நடத்த முடியவில்லையே என்ற ஏக்கம் பா.ஜ.க.வுக்கு நீண்ட காலமாக இருக்கிறது. அங்கு ராமரை வைத்து அரசியல் செய்தது போல தமிழ்நாட்டில் முருகக் கடவுளை கையில் எடுத்து அரசியல் செய்யும் முயற்சிகள் தொடர்கின்றன. திருப்பரங்குன்றம் என்பது முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று. அந்த மலையில் முஸ்லிம்கள் வழிபடும் சிக்கந்தர் தர்கா உள்ளது. சமணர் கோயிலும் உள்ளது.
தமிழர்களின் தனிக்குணத்தின்படி அனைத்து மதத்தினரும் நல்லிணக்கத்துடன் பல நூறு ஆண்டுகளாக அவரவர் வழிபாட்டை மேற்கொண்டு வருகிற நிலையில், மதுரைக்குள் பா.ஜ.க. புகுந்து, மலைப்பகுதியில் ஆடு வெட்டக்கூடாது என்றது. பேரணி-ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் மதுரையில் வன்ம முழக்கங்களை கக்கியது. கார்த்திகைத் திருநாளில் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது வழக்கம். ஆனால், அந்த தீபத்தை சிக்கந்தர் தர்கா அருகே உள்ள தூணில்தான் ஏற்ற வேண்டும் என்றும் அது தீபத்தூண் என்றும் வழக்குப் போட்டு, தனி நீதிபதி ஒருவரின் சாதகமான தீர்ப்பையும் பெற்று, மீண்டும் வன்மத்திற்கு விதையிட்டுள்ளது. தீபத்தூண் என்று பா.ஜ.க. சொல்லும் கல் என்பது நில அளவைக்காக நடப்பட்ட கல். மைல் கல்லுக்கு பொட்டு வைத்து மைல்சாமி, கிலோமீட்டர் சாமி என்று கும்பிடுகிற கதையாக பா.ஜ.க. தன் வேலையைத் தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டுக்கு விண்ணப்பித்திருப்பதுடன், பக்தர்கள் எப்போதும் வழிபடும் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகிலேயே கார்த்திகை தீபத்தை ஏற்றி பாஜகவின் மதவெறி திட்டத்தை முறியடித்துள்ளது.
தீர்ப்பளித்த நீதிபதி நீதிமன்ற பாதுகாப்பில் உள்ள துணை ராணுவ படையை கோவிலுக்கு அனுப்பியது என்பது இந்த நாட்டில் நீதியின் பங்களிப்பு என்ன என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. துணை ராணுவப் படையையும் தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக கையாண்டு, தர்கா அருகே தீபம் ஏற்றும் முயற்சியை முறியடித்து விட்டது .
மத நல்லிணக்கத்தின் அடையாளமான பாசக்காரர்களின் மண்ணான மதுரையில் வீணான வெறுப்பும் கலவரமும் சூழும் அபாயம் தற்காலிகமாக தவிர்க்கப்பட்டாலும் எதிர்காலத்தில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை இந்த நிகழ்வு சுட்டிக்காட்டுகிறது.
நூறு ஆண்டுகளுக்கு முன் ஹரப்பாவில் நடைபெற்ற ஆய்வுகளின்படி, சிந்துவெளி நாகரிகம் என்பது ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைவதற்கு முந்தைய நாகரிகம் என்று ஜான் மார்ஷல் என்பவர் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் உறுதி செய்தார். இது திராவிட நாகரிகம் எனத் தொடர்ச்சியான ஆய்வுகள் நிரூபித்துள்ள நிலையில், ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. இதை சிந்து-சரஸ்வதி நாகரிகம் என்று திரித்துக் கூறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. சரஸ்வதி என்பது பூமிக்கு அடியில் ஓடும் ஆறு என்றும் புராண நம்பிக்கையை முன்வைத்து அறிவியல்பூர்வ ஆதாரங்களை நிராகரிக்கிறது.
காசி தமிழ்ச் சங்கமம் என்ற பெயரில் தமிழை சமஸ்கிருதத்துடன் கலக்கும் முயற்சியின் தொடர்ச்சியாக, தென்னிந்திய நாகரிகத்தை புராணத்துடன் கலந்து அதையும் ஆரியமயமாக்கும் வேலைக்கு கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியைத் தேர்ந்தெடுத்து சிந்து-சரஸ்வதி நாகரிகம் பற்றிய கருத்தரங்கத்தை நடத்துகிறது ஆர்.எஸ்.எஸ். கிளை அமைப்பு. தனித்தன்மையுடன் திகழும் தமிழ் மொழி, தமிழர் பண்பாடு ஆகியவற்றை சிதைத்து காவி பெயிண்ட் அடிக்கும் பா.ஜ.க.வின் சூழ்ச்சியையும் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்தையும் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய தருணம் இது.
