ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலில் களம் காணும் அரசியல் கட்சிகளுக்குத் தனித்தனி சின்னங்கள் உண்டு. ஆண்டுதோறும் பருவமழைக் காலத்தில் உருவாகும் புயல் சின்னத்திற்குப் புதுப் புதுப் பெயர்கள் வைக்கப்படுகின்றன. அந்த வகையில், அண்மையில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறும் என்ற எதிர்பார்ப்புடன் ‘ஃபென்கல்’ என்று பெயரும் சூட்டப்பட்டது. தானே, கஜா, வர்தா உள்ளிட்டப் புயல் சின்னங்கள் தமிழ்நாட்டில் கரை கடந்து தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் ஃபென்கல் என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் பதற்றமும் நிலவியது.
நாகைக்கும் சென்னைக்கும் இடையிலான பகுதியை நோக்கி காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நெருங்கி வந்ததால், அது புயலாக வலுப்பெறும்போது என்னென்ன பாதிப்புகள் ஏற்படுமோ என்ற அச்சமும் நிலவியது. 2015ல் சென்னையை மிகக் கடுமையாக பாதித்த வெள்ளம், கடந்த 2023ல் சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழையால் ஏற்பட்ட வெள்ளம் இவை மக்களின் அச்சத்திற்கு காரணமாக அமைந்தன. பொதுவாக, அக்டோபர்-நவம்பர்-டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவ மழையினால் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்வது இயல்பு என்றாலும், அது இயல்பு வாழ்க்கையை பாதிப்பதுடன், வாழ்விடங்களையும் பாதிக்கிறது என்பதே மக்களின் அச்சத்திற்கு காரணமாக அமைகிறது.
ஃபென்கல் புயல் சின்னம் கடலில் நீடித்தாலும் அதன் வலு குறைந்துவிட்டது. பெரும்பாலான மழை இலங்கையின் நிலப்பரப்பில் பொழிந்ததால் அங்கே வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. காற்றின் அடுக்குகளில் ஏற்பட்ட இயற்கையான மாற்றங்களின் காரணமாக தமிழ்நாட்டிற்கு புயலால் பெரிய ஆபத்து ஏதுமில்லை என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்திருப்பது பொதுமக்களுக்கு நிம்மதியைத் தந்துள்ளது. தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வரும் புயல் சின்னங்கள் வலுவிழப்பதும், அண்டை மாநிலங்களின் கடற்கரையில் வீசுவதும் புதிதல்ல. எனினும், புயல் சின்னத்தால் தமிழ்நாடு பெறுகின்ற மழை அளவு என்பது கவனத்திற்குரியது.
கடந்த 2023 டிசம்பரில் புயல் வீசாவிட்டாலும், மேகத்திரள் நிலைத்து நின்று சென்னையையும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளிலும் பெய்த பெருமழையின் காரணமாகத்தான் குடியிருப்புப் பகுதிகள் நீரால் சூழப்பட்டு, கார் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீரில் மிதந்தன. தற்போது ஃபென்கல் புயல் சின்னத்தால் அந்தளவு கனமழை இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் பரவலான மழை பெய்துள்ளது. திருச்சி போன்ற உள்மாவட்டங்களிலும் தொடர்ச்சியான மழை பெய்திருப்பதுடன், இந்த மழை இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
புயல் நேரத்தில் மழையை அறுவடை செய்து கொள்வது மண்ணின் தன்மையாகும். டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் சில இடங்களில் மூழ்கக்கூடிய அளவிற்கு மழை பெய்திருந்தாலும், விவசாயிகள் பலருக்கு இந்தப் பருவமழைத் தேவைப்படுவதாகவே அமைந்துள்ளது. வடகிழக்குப் பருவ மழை உரிய அளவில் பெய்யாவிட்டால் அடுத்த பருவம் வரை வறட்சியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை விவசாயிகள் அறிவார்கள். ஒட்டுமொத்த தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு கூடுதலாகவே பொழிந்துள்ளது எனக் கணக்கிடப்பட்டுள்ளது. எனினும், சென்னைக்கு குடிநீர் வசதிகளை வழங்கக்கூடிய நீர்த்தேக்கங்கள், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தக்கூடிய ஏரிகள், குளங்கள் ஆகியவற்றில் போதுமான அளவில் நீர் இல்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
ஐப்பசி அடைமழை, கார்த்திகை கனமழை என்பதையும் தாண்டி டிசம்பர்-மார்கழி மாதங்களிலும் மழைக்காலம் தொடரக்கூடிய அளவுக்கு சூழலியல் மாறியிருப்பதால், அடுத்தடுத்த புயல் சின்னங்களையும் எதிர்பார்க்கலாம். ஃபென்கல் போல அந்தப் புயல் சின்னங்களும் பேராபத்தை உண்டாக்காமல் பெருமழையைத் தந்தால் நீர்நிலைகள் நிறையும். விவசாயிகள்-பொதுமக்களின் மனது குளிரும்.
தற்போதைய வானிலை என்பது தமிழ்நாடு முழுவதையுமே ஊட்டி, கொடைக்கானல் போல மாற்றியிருக்கிறது. மின்விசிறி, ஏ.சி. பயன்படுத்தாமல் உறங்குகிறோம் என்று பல மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் தெரிவிக்கிறார்கள்.
நின்று நிதானித்து மழை பெய்யட்டும் என்கிற மக்களின் எதிர்பார்ப்பை இயற்கைதான் நிறைவேற்ற வேண்டும். புயல் சின்னங்களின் வெற்றி என்பது கரையைக் கடப்பதில் அல்ல. கரை மீறாத அளவுக்கு தண்ணீர் மட்டத்தை உயரச் செய்வதுதான். வடகிழக்குப் பருவ மழைக்காலம் நிறைவு பெறுவதற்குள் நீர் நிலைகள் நிறையட்டும்.