இந்தியாவின் தற்சார்புமிக்க அமைப்புகளாக நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம் ஆகியவை உள்ளன. இவை அரசியல் பார்வைகளுக்கு அப்பாற்பட்டதாக செயல்படும் தன்மையை அரசியலமைப்பு வழங்கியிருக்கிறது. இவற்றுடன் சி.பி.ஐ, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளும் தற்சார்புமிக்க அதிகாரங்கள் கொண்டவை. இந்த வரிசையில் வருமானவரித்துறையும் பாரபட்சமற்ற அணுகுமுறையுடன் செயல்படவேண்டியவையாகும்.
விசாரணை அமைப்புகள் அப்படித்தான் இயங்குகின்றனவா? இல்லை என்பதை உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறையின் உச்சந்தலையில் ஓங்கிக் குட்டித் தெரிவித்திருக்கிறது. தொடர்ந்து தெரிவித்துக் கொண்டிருக்கிறது.
தற்சார்புமிக்க விசாரணை அமைப்புகளை மத்திய ஆட்சியாளர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்திக்கொள்வது நெடுங்காலமாகவே தொடர்கிறது. ஆட்சிக்கு எதிராக இருக்கக்கூடிய அரசியல்பிரமுகர்கள், ஆட்சியாளர்களுக்கு உடன்படாத தொழிலதிபர்கள், திரைத்துறையினரை நோக்கி வருமானவரித்துறையை ஏவிவிடுவது வழக்கம். அதன்பிறகு, மத்திய அரசுக்கு எதிரான மாநில அரசுகளை நோக்கி சி.பி.ஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றை ஏவுகின்ற வழக்கம் ஏற்பட்டது. பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு அமைந்த பிறகு, இந்த அமைப்புகளை தங்கள் அரசியல் எதிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தும் போக்கு வெளிப்படையாகவே நடக்கிறது.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியிலும், தற்போதைய தி.மு.க. ஆட்சியிலும் தமிழ்நாட்டில் சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ஆகியவற்றின் செயல்பாடுகள் முன்னெப்போதைவிடவும் மிக அதிகமாக இருந்ததற்கும், இருந்து வருவதற்கும் காரணம் மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜக.. அரசுதான். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, மகாராஷ்ட்டிரம், ஜார்கண்ட், மேற்குவங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் இதே போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவற்றின் சோதனைகள் மற்றும் வழக்குகளில் சிக்குபவர்கள் மத்திய பா.ஜ.க. அரசுக்கு சாதகமாக மாறிவிட்டால், அவர்கள் மீதான வழக்குகளின் மீது கூடுதல் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அப்படியே கிடப்பில் போட்டுவிடுவதும், அல்லது அந்த வழக்குகளிலிருந்து அவர்களை விடுவிக்கின்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதும் வழக்கமாக இருக்கிறது.
அ.தி.முக.. ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் அவர்களின் உறவினர்கள் தொடர்பாக அமலாக்கத்துறை, சி.பி.ஐ. ஆகியவை மேற்கொண்ட நடவடிக்கைகள், கிணற்றில் விழுந்த கல் போல கிடப்பதற்கு காரணம், பா.ஜ.க. சொன்னபடி அ.தி.மு.க. நடந்துகொள்வதுதான். நடந்துகொள்ள மறுத்தால், வழக்குகள் தூசு தட்டப்படும் என்பதுதான் கூட்டணிக்கான நிபந்தனை. ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பா.ஜ.க.வை எதிர்ப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். டெல்லி முதல்வராக இருந்த ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீதும் மதுபான ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி சிறைக்கு அனுப்பியது பா.ஜ.க.வின் கட்டுப்பாட்டில் உள்ள விசாரணை அமைப்புகள்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஆட்சியில் உள்ள தி.மு.க.வுக்கு நெருக்கடி தரும் வகையில் தொடர்ந்து நெருக்கடிகளைத் தரும் பா.ஜ.க அரசு, அதற்கு அமலாக்கத்துறையை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது. அமைச்சர்கள் சிலரைக் குறிவைத்தும், அவர்களின் உறவினர்களைக் குறி வைத்தும் அமலாக்கத்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் பெரிய பலனளிக்காத நிலையில், மதுபான விற்பனை செய்யும் தமிழ்நாடு அரசு நிறுவனமான டாஸ்மாக் மீது அமலாக்கத்துறை நடவடிக்கையை மேற்கொண்டது. இந்தத் துறைக்கு அமைச்சராக இருந்தவரும், மேற்கு மாவட்டங்களில் பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணிக்கு சவாலாக இருப்பவருமான செந்தில்பாலாஜியை முடக்கிப்போடுவதன் மூலமும், டாஸ்மாக் விவகாரத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் வரை தொடர்புள்ளது எனக் காட்டுவதன் மூலமும், 2026 தேர்தல் களத்தில் தி.மு.க.வுக்கு மிகப் பெரும் நெருக்கடியை உருவாக்கி, செயல்பாடுகளை முடக்கலாம் என்பதுதான் பா.ஜ.க.வின் நோக்கம்.

அமலாக்கத்துறையை அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தும் பா.ஜ.க. அரசை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வில், டாஸ்மாக் நிறுவனத்தில் புகுந்து ஆவணங்களை எடுத்துச்சென்ற அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் விசாரணைக்குட்பட்ட ஒரு துறையில் எப்படி அத்துமீறி நுழைந்து, ஆவணங்களை எடுத்துச் செல்லலாம் என அமலாக்கத்துறையை நோக்கி கேள்விகளை வீசிய உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறையின் நடவடிக்கை இந்தியாவின் கூட்டாட்சித் தன்மைக்கு எதிரானது என்றும், ஏதேனும் புகார் வந்தால் எந்த முகாந்திரமுமின்றி அரசு அலுவலகத்தில் புகுந்து ஆவணங்களை அள்ளிச் சென்றுவிடுவீர்களா? எனக்கேட்டு, டாஸ்மாக் விவகாரத்தை அமலாக்கத்துறை விசாரிப்பதற்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
அமலாக்கத்துறைக்கு எதிரான முதன்மை வழக்கின் விசாரணையும் தொடர்கிறது. விசாரணை அமைப்புகள் மட்டுமின்றி தேர்தல் ஆணையமும் மத்திய பா.ஜ.க. அரசின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகிறது என அரசியல் கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டுவதுடன் அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளன. இந்திய ஜனநாயகத்தின் மிகப் பெரிய சீர்கேடு இந்தியாவை ஆளும் பா.ஜ.க.
