மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து அவ்வப்போது, குறிப்பாக ஒவ்வொரு தேர்தலின் போதும் சர்ச்சைகளும் விவாதங்களும் வழக்குகளும் வலுத்து வருகின்றன. எலான் மஸ்க் கருத்துக்கு பின்னர் இந்த விவாதம் மீண்டும் சூடு பிடித்திருக்கிறது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து பலரும் வழக்குகள் தொடர்ந்திருந்த நிலையில் அத்தனை வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரித்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நம்பகத்தன்மை உள்ளது . அறிவியல், தொழில்நுட்ப ரீதியிலான விசாரணையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்களின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சொல்லி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது உச்சநீதிமன்றம். ஆனாலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்த சர்ச்சைகளும் விவாதங்களும் தொடர்கின்றன.
உலகின் பெரும் தொழிலதிபர் எலான் மஸ்க்கின் எக்ஸ் தள பதிவிற்கு பின்னர் இந்த விவகாரம் தற்போது மீண்டும் சூடு பிடித்திருக்கிறது. எலான் மஸ்க் ஏன் தற்போது இந்த விவகாரத்தை கையில் எடுத்தார்? அமெரிக்காவில் நடந்த தேர்தல் ஒன்றில் வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இவிஎம் இயந்திரங்கள் தொடர்பான 100க்கும் மேற்பட்ட முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆவணங்கள் இருந்ததால் வாக்கு எண்ணிக்கை சரி பார்க்கப்பட்டது. ஆவணங்கள் இல்லாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? என்று சுயேட்சை அதிபர் வேட்பாளர் ராபர் எப் கென்னடி எழுப்பிய கேள்விக்கு, ’’மனிதர்கள் அல்லது ஏ1 மூலமாக ஹேக் செய்யப்படுவதற்கான ஆபத்து உள்ளதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒழிக்கப்பட வேண்டும்’’ என்று பதிவிட்டிருந்தார்.
எலான் மஸ்கின் இந்த பதிவினை மேற்கோள் காட்டி, ‘’இந்தியாவில் இவிஎம் பெட்டி என்பது கருப்பு பெட்டி. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆராய்வதற்கு யாரையும் அனுமதிப்பது இல்லை. அமைப்புகள் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகும் போது ஜனநாயகம் சீர்குலைந்துவிடும்’’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி.
’இதற்கு ஒன்றிய முன்னாள் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ‘’இந்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பானவை. வெளியே இருந்து ஹேக் செய்ய முடியாதவை ’’என்று சொல்லி இருந்தார். இதற்கு எலான் மஸ்க், ‘’எதையும் ஹேக் செய்யலாம்’’ என்று சொல்லி இந்த விவகாரத்தினை மீண்டும் பரபரப்பாக்கி இருக்கிறார்.
’’முன்னேறிய ஜனநாயக நாடுகளே இவிஎம் பயன்படுத்துவதில்லை. அவர்கள் வாக்குச்சீட்டு முறையினையே பின்பற்றி வருகின்றனர். அது போன்று இந்திய தேர்தல்கள் வாக்குச் சீட்டு முறைக்கு மாற வேண்டும். ஜனநாயகத்தின் உண்மையான உணர்வுகளை நிலைநாட்டிட நாமும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும்’’ என்று ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் வலியுறுத்தி இருக்கிறார்.
தேர்தல் நடத்தும் முறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும். வாக்குப்பதிவு இயந்திர முறையை கைவிட்டு, வாக்குச்சீட்டு முறையினை கொண்டு வரவேண்டும். இவிஎம் -ஐ கண்டுபிடித்த நாடுகளே அந்த முறையினை கைவிட்டு விட்டன. இவிஎம்க்கு மைக்ரோசிப் கண்டுபிடித்த ஜப்பானே அதை பயன்படுத்துவதில்லை. இந்தியாவும் நைஜீரியாவும் மட்டுமே வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துகின்றன. இந்தியாவிலும் வாக்குச்சீட்டு முறையினை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை நாடுமுழுவதும் பேசு பொருளாகி இருக்கும் நிலையில், இவிஎம் இயந்திரங்களின் செயல்பாடுகள் பற்றி பொதுவெளியில் விவாதிக்க வேண்டும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதுகுறித்து விவாதித்து நாட்டு மக்களிடையே இருக்கும் அச்சத்தை போக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு திமுக சட்டத்துறையும் வலியுறுத்தி இருக்கிறது.
ஒவ்வொரு தேர்தலின் போதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் பற்றி திட்டமிட்டு பிரச்சனை எழுகின்றன. இந்த இயந்திரங்களில் எந்த வித முறைகேடும் செய்ய முடியாது என்று எப்போதும் போலவே இந்திய தேர்தல் ஆணையம் இந்த முறையும் பதில் சொல்லப்போகிறதா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.