
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க. தொடர் வெற்றியைப் பெற்று வருகிறது. தெலங்கானா, ஜார்கண்ட் இரண்டு மாநிலங்களில்தான் அண்மையில் இந்தியா கூட்டணியின் ஆட்சி அமைந்துள்ளது. மற்ற மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சி அமைத்ததற்கு காரணம், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை என்பதை வாக்கு சதவீதக் கணக்குகள் தெளிவாகக் காட்டுகின்றன.
ஹரியானா மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அங்கு ஆம் ஆத்மி கட்சி காங்கிரசுடன் கூட்டணி சேராமல் தனித்து நின்றது. தேர்தல் முடிவுகள் வெளியான போது பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைய, பா.ஜ.க ஆட்சி அமைந்தது. டெல்லியில் ஆளுங்கட்சியாக இருந்த ஆம் ஆத்மிக்கும் காங்கிரசுக்கும் கூட்டணி அமையவில்லை. தனித்து நின்ற காங்கிரஸ் வாங்கியது வெறும் 6 சதவீத ஓட்டுகள்தான். வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ள பா.ஜ.க.வுக்கும், ஆட்சியை இழந்த ஆம் ஆத்மிக்கும் இடையிலான வித்தியாசம் ஏறத்தாழ 2 சதவீத வாக்குகள்தான்.
இந்தியா கூட்டணி என்பது நாடாளுமன்றத் தேர்தலுக்கு மட்டுமே வலுவாக உள்ளது என்றும், மாநில சட்டமன்றத் தேர்தல்களின்போது அது வலுவாக இல்லாததே பா.ஜ.க.வின் வெற்றிக்கு காரணமாக அமைகிறது என்று சிவசேனா உத்தவ்தாக்கரே தரப்பு தெரிவித்துள்ளது. மகாராஷ்ட்ராவில் இந்தியா கூட்டணி அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. 2014, 2019 ஆகிய இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பா.ஜ.க.வால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அப்படி அமைக்க முடியவில்லை. கூட்டணிக் கட்சிகளான தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதாதளம் இவற்றின் ஆதரவில்தான் மூன்றாவது முறையாக பிரதமராகியிருக்கிறார் நரேந்திர மோடி. இதற்கு காரணம், முந்தைய தேர்தல்களில் இல்லாத வகையில், இந்த முறை இந்தியா கூட்டணி அமைந்ததும், அந்தக் கூட்டணி அமைத்த வியூகமும்தான்.
இந்தியா கூட்டணி அமைந்தபோது யார் பிரதமர் வேட்பாளர் என்பது அறிவிக்கப்படவில்லை. கூட்டணிக்குத் தலைமை வகித்த பீகார் முதல்வர் நிதீஷ் குமாரும் சில மாதங்களில் பா.ஜ.க. அணிக்குப் போய்விட்டார். எனினும், நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை இந்தியா கூட்டணி வலுவாகவே எதிர்கொண்டது. அதற்கு காரணம், எந்தெந்த மாநிலங்களில் எந்தக் கட்சிகள் வலிமையாக இருக்கின்றனவோ அவை அதிக இடங்களில் போட்டியிடவேண்டும். மற்ற கட்சிகள் அதற்கேற்ப ஒத்துழைக்க வேண்டும் என கூட்டணியின் முதல் கூட்டத்திலேயே வலியுறுத்திய தி.மு.க தலைவர்-தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் வியூகமே. அவர், 2019ஆம் ஆண்டே மினி இந்தியா கூட்டணியைத் தமிழ்நாட்டில் உருவாக்கி, 40க்கு 39 இடங்களை வெற்றி கண்டார். கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளை அனுசரித்து தொகுதிகளை ஒதுக்கி, வெற்றிபெறச் செய்தார். அதே வியூகத்துடன் 2024 தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளையும் தமிழ்நாடு-புதுச்சேரியில் வென்றது இந்தியா கூட்டணி.
உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வென்றதும் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போனதற்கு முக்கிய காரணமாகும். அங்கே வலிமையுள்ள சமாஜ்வாடி கட்சி அதிக இடங்களிலும், அதனுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் குறைந்த இடங்களிலும் போட்டியிட்டன. அதனால் வெற்றி சாத்தியமானது. இந்த நடைமுறை அதன்பிறகு பல மாநிலங்களிலும் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் சரியான முறையில் இல்லை. இந்தியா கூட்டணிக்கு யார் தலைவர் என்பதிலும் சிக்கல்கள் நீடிக்கின்றன.
காங்கிரஸ் தலைமையில் கூட்டணி நீடிப்பது குறித்து கருத்து வேறுபாடுகள் உள்ளன. திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, இந்தியா கூட்டணிக்குத் தலைமை தாங்க நினைத்து விருப்பத்தை வெளியிட்டார். சரத்பவார் போன்ற சீனியர்கள் அதனை ஆதரித்தனர். 2026ல் நடைபெறவுள்ள மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் தனது கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறாது என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
வெற்றிக்கேற்ப வியூகங்கள் வகுப்பது கட்சிகளின் நிலைப்பாடு. எதிர்க்கட்சிகளின் பொதுநோக்கம், பா.ஜ.க.வை வீழ்த்துவது என்பதாக இருந்தால் அந்த வியூகம் உரிய பலனைத் தரும். அத்தகைய நோக்கம் இல்லாவிட்டால், எதிரிகளை உதிரிகளாக்கி பா.ஜ.க. தொடர்ந்து வெற்றி பெறும். இதுதான் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களின் இன்றைய நிலை.
தமிழ்நாடு இதில் தனித்துவத்துடன் இருக்கிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தல் முதல் அண்மையில் நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரை தி.மு.க தலைமையிலான கூட்டணியை உறுதியாகக் கட்டிக்காத்து, தொடர்ந்து வெற்றியைப் பெற்று வருகிறார் மு.க.ஸ்டாலின். ‘இந்தியா’ தன்னை நிலைநிறுத்திக்கொள்ள தமிழ்நாட்டைப் பின்பற்ற வேண்டும்.