
இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கிய நாளில் அதிர்ச்சித் திருப்பமாக குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவையின் தலைவருமான ஜகதீப் தன்கர் தன் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார். உடலநலனைக் காரணம் காட்டி, மருத்துவர்களின் அறிவுரைப்படி இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவரது ராஜினாமா ஏற்கப்பட்டுள்ள நிலையில், 74 வயதாகும் ஜகதீப் தன்கரின் ராஜினாமா முடிவுக்கு உடல்நிலைதான் காரணமா என்ற விவாதம் அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. அதற்கு காரணம், ஜகதீப் தன்கரின் தொடர்ச்சியான சர்ச்சைக்குரிய செயல்பாடுகள்தான்.
பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட ஆளுநர்களை நியமித்து, அவர்கள் மூலம் அந்தந்த மாநில அரசுகளுக்கும் நெருக்கடியை உண்டாக்குவது மோடி அரசின் வழக்கமாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு ஆர்.என்.ரவி போல, மேற்கு வங்கத்திற்கு கவர்னராக நியமிக்கப்பட்டார் ஜகதீப் தன்கர். அங்கே ஆட்சியில் உள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் மம்தா பானர்ஜிக்குத் தொடர்ந்து நெருக்கடிகள் கொடுத்தார். மம்தாவின் பதிலடிகளால் பா.ஜ.க.வின் திட்டம் அம்பலமாகிப்போனது.
பா.ஜ.க. மூத்த தலைவரான வெங்கையா நாயுடுவின் குடியரசு துணைத் தலைவர் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், ஜகதீப் தன்கரை அந்தப் பதவிக்கு நிறுத்தியது பா.ஜ.க. மேலிடம். நாடாளுமன்ற இரு அவைகளிலும் இருந்த பா.ஜ.க. மற்றும் தே.ஜ.கூ. எம்.பிக்களின் பலத்தால் ஜகதீப் தன்கர் வெற்றி பெற்று குடியரசு துணைத் தலைவரானார். கண்ணியமிக்க மாநிலங்களவையின் தலைவர் பொறுப்பும் குடியரசு துணைத் தலைவருக்கேயுரியது. ஆனால், ஜகதீப் தன்கர் மாநிலங்களவைத் தலைவர் இருக்கையில் உட்கார்ந்திருந்த நேரமெல்லாம் மதவெறி பூசிய ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதியின் குரலாகத்தான் ஒலித்தார்.
ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தாறுமாறாகப் பேசுவார்கள். மழுமையாக அனுமதிப்பார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதற்குப் பதில் சொல்ல முன்வந்தால் அனுமதி மறுப்பார். குறிப்பாக, தி.மு.க.வின் மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா எம்.பி.,, எம்.எம்.அப்துல்லா எம்.பி. போன்றோரிடம் ஜகதீப் தங்கர் காட்டிய கடுமையும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது அவர் வைத்த குற்றச்சாட்டுகளும் நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை அறியப்படாதவை. பெயரளவுக்குகூட அவைத் தலைவருக்குரிய பொறுப்புடன் அவர் செயல்படவில்லை என்பதே எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வாக்குமூலமாக இருந்தது.
இந்திய குடியரசுத் துணைத் தலைவர்களிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்களால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொடுக்கப்பட்டவர் ஜகதீப் தன்கர்தான். நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளையும் அவர் கடுமையாக விமர்சித்தார். சட்டமன்றங்களில் நிறைவேற்றப்படும் மசோதாக்களின் மீது ஆளுநர் முடிவெடுப்பதற்கான காலக்கெடு குறித்த தமிழ்நாடு அரசின் வழக்கில், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இதைப் பொது அரங்கில் கடுமையாக விமர்சித்தார் இந்தியாவின் குடியரசு துணைத்தலைவர். பொதுவாக, நாடாளுமன்றத்திற்கும் உச்சநீதிமன்றத்திற்கும் மோதல் போக்கு இருக்கக்கூடாது என்பதுதான் ஜனநாயக மரபு. அதற்கு மாறாக, குடியரசுத் துணைத் தலைவரைப் பேச விட்டது பா.ஜ.க. அரசு. குடியரசு தலைவரின் சார்பில் 14 கேள்விகளை உச்சநீதிமன்றத்தை நோக்கிக் கேட்க வைத்தது.
பா.ஜ.க.வின் ஊதுகுழலாகவே வெளிப்படையாக செயல்பட்டு வந்த ஜகதீப் தன்கர், 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் அரசியலில் பதவிப்பொறுப்புகளில் இருக்கக்கூடாது என ஆர்.எஸ்.எஸ். தலைமை அறிவித்திருந்த நிலையில் தன் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு 74 வயது நிறைவடைந்துள்ளது. இன்னும் சில மாதங்களில் 75 வயதைக் கடந்துவிடுவார். பிரதமர் நரேந்திர மோடியின் வயதைக் குறிவைத்து, ஆர்.எஸ்.எஸ். தலைமை தனது அறிவிப்பை வெளியிட்ட நிலையில், தன்கர் ராஜினாமா செய்தது பிரதமருக்குத் தரும் நெருக்கடியா என்ற சந்தேகக் கேள்வி எழுந்தது.
பிரதமர் தரப்பில் தந்த நெருக்கடியால்தான் ஜகதீப் தன்கர் தனது குடியரசு துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் என்ற புதிய தகவலும் கசிந்தது. டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யஷ்வந்த் சர்மா வீட்டில் தீவிபத்து ஏற்பட்டபோது, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது 500 ரூபாய் அடங்கிய சாக்கு மூட்டைகள் பல தீயில் கருகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பணம் குறித்த சர்ச்சையினால், நீதிபதியை பதவி நீக்கம் (இம்பீச்மென்ட்) செய்யும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர எம்.பி.க்களிடம் எதிர்க்கட்சிகள் கையெழுத்துகளைப் பெற்றன.
இதை மாநிலங்களவைத் தலைவரான ஜகதீப் தன்கர் ஆதரித்ததாகவும், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரின் அனுமதியின்றி, ஆலோசனைக் குழுக் கூட்டங்களை இதுதொடர்பாக நடத்தியதாகவும் எழுந்த சர்ச்சையால், மத்திய அரசின் மேலிடம் அவரிடம் தொலைபேசியில் விளக்கம் கேட்க, ஜகதீப் தன்கர் தன் நிலைப்பாட்டை கோபமாகத் தெரிவித்ததையடுத்தே, அவருடைய ராஜினாமா நிர்பந்திக்கப்பட்டிருக்கிறது என்கிற செய்தியும் வெளியாகியுள்ளது.
மூட்டை மூட்டையாக நீதிபதி வீட்டில் இருந்தது என்ன பணம், யார் தந்தது, எதற்காகத் தரப்பட்டது என்பன உள்ளிட்ட பல மர்மங்கள் உள்ள நிலையில், அவரை மையமாக வைத்து குடியரசு துணைத் தலைவர் ராஜினாமா என்பது இந்திய அரசியலில் புதிய பரபரப்பை உருவாக்கியுள்ளது.