
இந்தியாவை மட்டுமல்ல, உலக நாடுகளையே அதிர வைத்திருக்கிறது ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதல். சுற்றுலாப் பயணிகளாக அந்தப் பகுதிக்கு சென்றிருந்த 28 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ‘தி ரெஸிஸ்டென்ட் ஃப்ரன்ட்’ என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பு இது என்று கூறுகிறார்கள். பாகிஸ்தான் எல்லையிலிருந்து ஊடுருவும் இத்தகைய தீவிரவாத அமைப்புகளின் தொடர்ச்சியான தாக்குதல்கள் எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை.
நாடு சுதந்திரமடைந்தபோது இந்தியாவுடன் காஷ்மீர் இல்லை. அது தனி சமஸ்தானம். முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதி. சமஸ்தானத்தை ஆட்சி செய்தவர் இந்து மதத்தைச் சேர்ந்த ராஜா. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமைந்திருந்த காஷ்மீர் சமஸ்தானத்தின் மீது பாகிஸ்தான் குறிவைத்தது. அதன் ராஜா, இந்தியாவின் உதவியை நாடினார். பிரதமர் நேருவின் அரசாங்கம் துணை நின்றது. காஷ்மீர் இந்தியாவின் பகுதியாக ஆனது. ஆனாலும், அதற்கென தனிக் கொடி, சிறப்பு சட்டங்கள் ஆகியவை வழங்கப்பட்டன. காஷ்மீரின் ஒரு பகுதி இப்போதும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனை அவர்கள் ஆசாத் காஷ்மீர் என்கிறார்கள். அதாவது, சுதந்திர காஷ்மீர். இந்தியா அதனை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்கிறது. பெரும்பாலும் இந்தப் பகுதியிலிருந்துதான் தீவிரவாதம் ஊடுருவுகிறது.
பா.ஜ.க.வின் கொள்கைகளில் ஒன்று, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை நீக்குவது என்பது. பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு நாள் அதனை நாடாளுமன்றத்தில் அறிவித்தார். ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தும் ரத்து செய்யப்படுகிறது என அறிவித்தார். ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதி மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இனி காஷ்மீரில் தீவிரவாதத்திற்கு வேலையே இல்லை என்றும், தீவிரவாதிகள் எறிந்த கற்களெல்லாம் காஷ்மீரின் வளர்ச்சிக் கட்டமைப்புக்குப் பயன்படும் என்று பிரதமர் மோடி சொன்னார்.
ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா உள்ளிட்டவர்கள் சிறைப்படுத்தப்பட்டனர். ஜனாதிபதி ஆட்சியின்கீழ் கவர்னரின் கட்டுப்பாட்டில் மாநில நிர்வாகத்தை வைத்துக்கொண்டு, மத்திய பா.ஜ.க. அரசு முழுக்க முழுக்க தனது ஆதிக்கத்தின் கீழ்தான் வைத்திருந்தது. கடந்த ஆண்டில்தான் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு தேர்தல் நடத்தப்பட்டது. அதில் பா.ஜ.க.வால் ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி பெற முடியவில்லை. தேசியமாநாடு-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது. லடாக் பகுதிக்கு தேர்தல் கிடையாது. நேரடியாக துணை நிலை ஆளுநரின் கட்டுப்பாட்டில்தான் அது இருக்கும்.
இவற்றின் மூலம் தெரியவருவது என்னவென்றால், காஷ்மீரில் ஜனநாயகம் என்பதே இல்லை. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவை நீக்கிய பிறகு, அங்கே தீவிரவாதமே இருக்காது என்றார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. எல்லைப்புற காஷ்மீரின் பாதுகாப்பு என்பது ராணுவ அமைச்சரிடம் கிடையாது. நேரடியாக உள்துறை அமைச்சரின் பொறுப்பில் உள்ளது. காஷ்மீர் மக்களின் சிறப்பு உரிமைகள் தொடங்கி அடிப்படை உரிமைகள் வரை அனைத்தும் பறிக்கப்பட்ட நிலையில், உயிருக்குப் பாதுகாப்பான நிலைமைகூட அங்கே இல்லை என்பதைத்தான் தீவிரவாதிகளின் கொடூரத் தாக்குதலால் நடந்த உயிரிழப்புகள் அம்பலப்படுத்தியுள்ளன.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலம் காஷ்மீர் என்பதால்தான் அதன் உரிமகளைப் பா.ஜ.க. அரசு பறித்தது. ஆனால், முஸலிம் அல்லாத மற்ற மக்களுக்கும் அங்கே பாதுகாப்பில்லை என்பதை இந்தியாவின் ஸ்விட்சர்லாந்து எனப்படும் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் நடந்த தாக்குதல் நிரூபித்துள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ராணுவம்-உளவுத்துறை-உள்துறை மூன்றும் இதற்கு பொறுப்பேற்க வேண்டிய அமைப்புகள். ஆனால், பா.ஜ.க. நிர்வாகத் தரப்பிலிருந்தோ, இந்துக்களை குறி வைத்து சுட்டார்கள் என்றும், இந்துவா- முஸ்லிமா என்று கேட்டு சுட்டார்கள் என்றும், ஆண்களின் ஆடைகளை அகற்றி அடையாளம் பார்த்து சுட்டார்கள் என்றும், இந்திய ராணுவத்தின் உடையணிந்து வந்து சுட்டார்கள் என்றும் வாட்ஸ்ஆப் யுனிவர்சிட்டி மூலமாக வேகமாகப் பரப்பப்பட்டது. உயிர் மீண்டவர்கள் சொல்லும் கருத்துகளோ பா.ஜ.க. பரப்புவது பொய் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது.
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய ஈவுஇரக்கமற்ற கொடூரக் கொலைகளைப் போலவே கொடூரமானது, மத்திய பா.ஜ.க.வின் மதவாத அரசியல்.