நான்கு தலைவர்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும் சொல்லும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன், இவர்களுக்கு உரிய பாதுப்பை உடனே வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.
இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜான் பாண்டியன், ‘’ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தினால் நன்றாக இருக்கும். அதற்காக காவல்துறை சரியாக செயல்படவில்லை என்று குற்றம்சாட்டவில்லை. உண்மை குற்றவாளிகளை மறைக்க முயற்சி செய்யாமல் உண்மை குற்றவாளிகள் யார் என்பதை கண்டறிந்து தருவதற்கு ஏதுவாக இருக்கும் என்றுதான் சிபிஐ விசாரணையை கோருகிறோம்’’ என்றார்.
மேலும், ‘’தமிழகத்தில் படுகொலைகள் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த படுகொலைகள் எல்லாம் நடப்பதற்கு ஒரு சில காவல்துறை அதிகாரிகளும் உடைந்தையாக இருப்பார்களோ என்ற சந்தேகம் இருக்கிறது. அந்த அதிகாரிகளையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றவர், ’’கொலைக்கு கொலைதான் தீர்வு என்றால், ஒரு உயிருக்கு ஒரு உயிர் என்றால் சட்டம் எதுக்கு இருக்கிறது? நீதிமன்றம் எதுக்கு இருக்கிறது? நீதிமன்றம் வழியாக தண்டனை வாங்கிக்கொடுங்கள்’’என்று அரசை வலியுறுத்தினார்.
’’எங்களைப்போன்ற தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது உண்மைதான். கடந்த அதிமுக ஆட்சியில் எனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை எடுத்துக்கொண்டு விட்டீர்கள். ஒரே ஒரு போலீஸ் மட்டும் பாதுகாப்புக்கு கொடுத்திருக்கிறீர்கள். இந்தியா முழுவதும் சுற்றி வரும் எனக்கு இது பாதுகாப்பாக இருக்குமா? என்பதை அரசுதான் முடிவெடுக்க வேண்டும். எனக்கு பாதுகாப்பை துரிதப்படுத்த வேண்டும்.
என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்பதை டிஜிபி அலுவலகத்திற்கு தெரியப்படுத்தி உள்ளேன். தொடர்ந்து அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறேன்.
எனக்கு மட்டுமல்ல, திருமாவளவன், டாக்டர் கிருஷ்ணசாமி, சீமான் போன்ற தலைவர்களுக்கு எல்லாம் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
தலைவர்களை கொலை செய்துவிட்டால் பெயர் வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார்களே தவிர எதிரி என்ற எண்ணத்தில் இல்லை. ஒரு தலைவரையே கொலை செய்துவிட்டோம் என்று பெயர் வாங்க வேண்டும் என்ற குறுகிய எண்ணத்துடன் இப்படி கொலை செய்கிறார்கள். இவர்களை எல்லாம் கண்காணித்து தலைவர்களை காக்க வேண்டும் அரசு. இது அரசின் கடமை. நான் பயந்து போய் பாதுகாப்பு கேட்கவில்லை. பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பது அரசின் கடமை.
அந்த கடமையைத்தான் செய்ய வேண்டு என்றுக் கேட்கிறேன்’’ என்று சொன்னது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.