பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு, திரைப்பட இயக்குநர்-நீலம் அமைப்பின் நிறுவனர் பா.ரஞ்சித் முன்னெடுப்பில் நீதி கேட்கும் பேரணி நடைபெறுகிறது. இதில் தலித் அமைப்புகள் பலவும் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் உள்ள தலித் அரசியல் இயக்கங்களிலேயே தனிப்பட்ட செல்வாக்கும் அங்கீகாரமும் கொண்ட அமைப்பான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., இந்தப் பேரணியில் வி.சி.க. பங்கேற்காது என்று தனது கட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவுப்படுத்திவிட்டார். இதனையடுத்து, தலித் மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுப்பவர் ரஞ்சித்தா? திருமாவா? என்ற கோணத்தில் சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் நடைபெறுகின்றன.
ஆம்ஸ்ட்ராங்க் படுகொலை செய்யப்பட்ட விதமும், அது நடந்த இடமும் அனைத்து தரப்பினாலும் கண்டிக்கப்பட்டது. திருமாவளவனும் மருத்துவமனைக்கு சென்று ஆம்ஸ்ட்ராங்க் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தினார்.
காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட மற்ற தலைவர்களும் இதையே வலியுறுத்தினர். இந்தப் படுகொலை வழக்கைப் பொறுத்தவரை, சரணடைந்தவர்கள், கைதானவர்கள், என்கவுண்ட்டர் செய்யப்பட்டவர், தலைமறைவானவர் எனப் பல கிரிமினல்கள் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக் கிறார்கள். இந்தக் கொலையில் பின்னணியில் அரசியல் காரணமோ, சாதிப் பகையோ இதுவரை வெளிப்படவில்லை. தனிப்பட்ட காரணங்களே கொலை வரை சென்றுள்ளது என்கிறது போலீஸ் தரப்பு. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையமும் நேரடிக் கள விசாரணை மேற்கொண்டிருப்பதால் கூடுதல் உண்மைகள் தெரியவரலாம். சி.பி.ஐ. விசாரணை கோரியும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
பா.ரஞ்சித் நீதி கேட்பது அவருக்குள்ள உரிமை. அதில் ஏன் பங்கேற்க முடியவில்லை என்பது திருமாவளவன் தலைவராக உள்ள வி.சி.க.வின் நிலைப்பாடு. தலித் சாதிகள் மட்டுமே ஒன்றிணைந்து அரசியல் சக்தியாக உருவாக வேண்டும் என்பதை ரஞ்சித் பல முறை வலியுறுத்தியுள்ளார்.
தனிப்பட்ட சாதி உணர்வு என்பது பொது சமூகத்தில் பயன்தராது என்பதையும், பெரும்பான்மையுடன் இணைந்து நின்று, அரசியல் அதிகாரத்தின் மூலம் தலித் மக்களின் உரிமையை வெல்ல வேண்டும் என்பதை மூன்று முறை மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற திருமாவளவன் வலியுறுத்துகிறார். திருமாவின் சனாதன எதிர்ப்பு, பா.ஜ.க. எதிர்ப்பு, திராவிடக் கொள்கையுடனான உறவு, திராவிட இயக்கத் தலைவர்களுடனான தோழமை இவை தலித் உரிமைகளுக்கு எதிரானது என்பதே ரஞ்சித் ஆதரவாளர்களின் கருத்தாக இருக்கிறது.
ரஞ்சித்தின் வழிகாட்டிகளான பூவை மூர்த்தி, ஆம்ஸ்ட்ராங்க் ஆகியோர் திராவிடக் கொள்கையை ஆதரிக்கவில்லை. அ.தி.மு.க என்ற அரசியல் கட்சிக்கு பூவை மூர்த்தி ஆதரவு தெரிவித்திருக்கிறார். ஆம்ஸ்ட்ராங்க் இடம்பெற்றிருந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவரான மாயாவதியின் அரசியல் என்பது பா.ஜ.க.வுக்கே சாதகமாக இருக்கிறது. தி.மு.க எதிர்ப்பு நிலை என்பதே இதன் உட்பொருள். அதை பா.ரஞ்சித் வெளிப்படையாகவே தெரிவித்து, தி.மு.க.வுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
ரஞ்சித் எந்தக் கொள்கையை ஆதரிக்கிறார் என்பது அவருடைய விருப்பமும் உரிமையுமாகும்.
அதே விருப்பமும் உரிமையும் அங்கீகரிகாத்தைப் பெறக்கூடிய வலிமை பெற்றுள்ள கட்சியான வி.சி.க.வின் தலைவர் திருமாவளவனுக்கும் உண்டு. ஆம்ஸ்ட்ராங்க் கொலையில் நீதி கேட்பது என்பது, தி.மு.க. அரசுக்கு வேண்டுமென்றே நெருக்கடி கொடுக்க நினைக்கும் சக்திகளுக்கு வசதியாகிவிடக்கூடாது என்று தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள திருமாவளவன் நினைப்பதில் என்ன தவறு?
திராவிடத்துடன் தலித் அமைப்புகள் சேரக்கூடாது என்கிற நோக்கத்துடன், பெரியாருடன் அம்பேத்கரை இணைக்கக்கூடாது என்கிற அரசியல் பார்வையும் இங்கே பல ஆண்டுகளாக இருக்கிறது. சென்னைக்கு அம்பேத்கர் வந்தபோதே அத்தகைய அரசியலை நடத்திட முனைந்தவர்கள் உண்டு. திருமாவளவனுடைய அரசியல் என்பது பெரியார்-அம்பேத்கர் கொள்கைகளை இணைத்து, மதவெறி-சாதிவெறிக்கு எதிரான அரசியலைக் கட்டமைப்பதாக உள்ளது. அதில் அவர் குறிப்பிடத்தக்க வெற்றியையும் பெற்று வருகிறார்.
வடமாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு உள்ள செல்வாக்கை சரிவடையச் செய்து, அதனை வேறு திசையில் திருப்பும் உத்திகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் நிலையில்தான், ரஞ்சித் முன்வைக்கும் அரசியலும் அதை திசைதிருப்பல் வழியில் உள்ளதை உணர்ந்து திருமாவளவன் தன் நிலைப்பாட்டை அறிவித்திருக்கிறார்.
ஆம்ஸ்ட்ராங்க் கொலையின் அடிப்படையில் வைக்கப்படும் குறி, தி.மு.க.வுக்கு மட்டுமானதல்ல, அதன் உடனடி இலக்கு வி.சி.க.தான் என்பதை திருமா உணர்ந்திருக்கிறார். அரசியல் களம் இதை எப்படி உணர்ந்திருக்கிறது என்பது போகப் போகத் தெரியும்.