அசுர பலத்துடன் ஆட்சி என்கிற பாஜகவின் கனவு கலைந்துவிட்டது. 400 இடங்களில் வெற்றி என்ற இறுமாப்புடன் இருந்த பாஜகவின் இமேஜ் டோட்டல் டேமேஜ் ஆகிவிட்டது.
தனித்து 370 தொகுதிகள், என்.டி.ஏ. கூட்டணியாக 400 தொகுதிகள் என்று கணக்கு போட்டிருந்தது பாஜக. ஆனால் 240 தொகுதிகளில் மட்டுமே பாஜக தனித்து வென்றுள்ளது. கூட்டனிக்கட்சிகளுடன் சேர்ந்து 292 இடங்களை பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 272 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்பதால், நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது பாஜக.
மெகா சறுக்கல்:
நாடு முழுவதிலும் பாஜகவுக்கு மெகா சறுக்கல் ஏற்பட்டிருக்கிறது. கர்நாடகாவில் கடந்த முறை 25 இடங்களில் வென்ற பாஜக இந்த முறை 17 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. மகாராஷ்டிராவில் 48 தொகுதிகளில் பாஜக 10 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. கூட்டணியாக சிவசேனை 9 இடங்களை பிடித்துள்ளது. ராஜஸ்தானில் கடந்த முறை மொத்தமுள்ள 25 இடங்களிலும் வென்ற பாஜக இந்த முறை 14 இடங்களையே பிடித்துள்ளது.
பாஜக 400 இடங்களை பிடிக்கும், 350 இடங்களை பிடிக்கும் என்று சொன்ன கருத்து கணிப்புகள் எல்லாம் கருத்து திணிப்புகள் என்றானது. இதனால் உத்தரபிரதேசத்தில் ஒரு பாஜக தொண்டர் டிவியை போட்டு உடைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
2014ம் ஆண்டு தேர்தலில் கோவையில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 42.016 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். ஆனால், 2024 தேர்தலில் 1,18,068 வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணாமலை தோல்வி அடைந்துள்ளார்.
பாஜக கூட்டணி 361 முதல் 401 இடங்களை பிடிக்கும் என்றும், இந்தியா கூட்டணி 160 இடங்களை பெறும் என்று தவறாக கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிட்டதால் ஆக்சிஸ் மை இந்தியா நிறுவன இயக்குநர் பிரதீப் குப்தா, தொலைக்காட்சி நேரலையிலேயே கதறிகதறி அழுதது எல்லாம் பாஜகவின் இமேஜை மேலும் டேமேஜ் ஆக்கி இருக்கிறது.
ஸ்மிருதி ராணி உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் பலரும் தோல்வி அடைந்துள்ளனர். இதே அமேதியில் கடந்த 2019ல் ராகுல்காந்தியை தோற்கடித்த ஸ்மிருதி ராணி, இம்முறை காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மாவிடம் தோல்வி அடைந்திருக்கிறார். இவர் 5,39,228 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், 3,72,032 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார் ஸ்மிருதி ராணி.
மோடி, அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் 2014, 2019 மக்களவை தேர்தல்களில் ஒரு தொகுதியை கூட பிடிக்க முடியாமல் போன காங்கிரஸ் இந்த முறை ஒரு தொகுதியை கைப்பற்றி இருக்கிறது. 2009 தேர்தலில் 11 தொகுதிகளை கைப்பற்றி இருந்தாலும் அடுத்து மோடி, அமித்ஷாவின் ஆதிக்கத்தால் காங்கிரசால் 10 ஆண்டுகள் குஜராத்தில் வெற்றி பெற முடியவில்லை. இந்த முறை ஒரு தொகுதியை பிடித்து கணக்கை தொடங்கி இருக்கிறது காங்கிரஸ்.
சரிந்தது மோடியின் வாக்கு சதவிகிதம் -உயர்ந்தது காங்கிரசின் சதவிகிதம்
வாரணாசியில் பெற்ற மோடியின் வெற்றி பரிதாப வெற்றி என்றே விமர்சிக் கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் மோடி பின்னடைவு என்றும் அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் முன்னிலை என்று வந்ததும் நாட்டே பரபரப்பானது. பாஜக ரொம்பவே பதறிப்போனது. நீண்ட நேரம் கழித்தே மோடி முன்னிலை என்று வந்ததும்தான் பாஜகவுக்கு போன மூச்சு திரும்ப வந்தது.
கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் இதே வாரணாசி தொகுதியில் 4.79 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மோடி, தற்போது 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். 6,12,970 வாக்குகள் மோடி பெற்றுள்ள நிலையில், 4,60,457 வாக்குகள் பெற்றுள்ளார் அஜய் ராய். 1,52,513 வாக்குகள் மட்டும் வித்தியாசம்.
கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் இதே வாரணாசியில் 5,18,022 வாக்குகள் பெற்றிருந்தார் மோடி. 56.37% பெற்றிருந்தார். 2019ல் 6,74,644 வாக்குகளும், 63.62% பெற்றிருந்தார். இந்த 2024 தேர்தலில்
6,12,970 வாக்குகளும் அதாவது 54.24%ம் பெற்றுள்ளார். கடந்த தேர்தலை விட 9% குறைவாக பெற்றுள்ளார்.
மோடியின் வாக்கு சதவிகிதம் வாரணாசியில் இப்படி சரிந்தது என்றால் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயின் வாக்கு சதவிகிதம் உயர்ந்துள்ளது. 2019ல் 14% ஆக இருந்தது 2024ல் 40.74% ஆக உயர்ந்துள்ளது.
’பப்பு’ என்று தன்னை கிண்டல் செய்து வந்த பாஜகவினருக்கு, ரேபரேலி, வயநாடு அபார வெற்றியின் மூலம் வாயடைக்கச் செய்திருக்கிறார் ராகுல்காந்தி.
தகர்ந்தது பாஜக கோட்டை:
பாஜகவின் கோட்டையாக இருந்தது உத்தரபிரதேசமும். அந்த கோட்டையும் உடைந்தது. அயோத்தி ராமர் கோயில், புல்டோசர் அரசியல் எல்லாம் இந்த தேர்தலில் எடுபடாமல் போய்விட்டது. உத்தரபிரதேசத்தில் பாஜக பெரிய சறுக்கலை சந்தித்துள்ளது.
2014ல் 71 இடங்களையும் 2019ல் 62 இடங்களையும் பெற்ற பாஜக இப்போது வெறும் 36 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது. கடந்த தேர்தலை விட 26 இடங்கள் குறைவாக கிடைத்துள்ளன. 80 மக்களவை தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் இதுவரைக்கும் பாஜக பெற்ற வெற்றியே தனிப்பெரும்பான்மையுடன் ஒன்றியத்தில் ஆட்சி அமைக்க உதவியது. இந்த முறை 36 இடங்களை மட்டுமே பிடித்துள்ளதால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாமல் கூட்டணிகளின் நிர்பந்தத்தால் அல்லாடுகிறது பாஜக.
அதே நேரம் 2019ல் வெறும் 5 இடங்களை மட்டுமே பெற்றிருந்த அகிலேஷ் யாதவ் இந்த தேர்தலில் 37 இடங்களை பிடித்து சாதித்திருக்கிறார்.
முதற்கட்ட வாக்குப்பதிவில் வளர்ச்சியடைந்த இந்தியா மற்றும் மோடியின் உத்தரவாதம் போன்றவற்றை பேசியது பாஜக. அந்த முதற்கட்ட வாக்குப்பதிவில் குறைவான சதவிகித வாக்குகள் பதிவானதால் கலக்கம் அடைந்தது பாஜக. இதன் பின்னர் பாஜக தனது பிரச்சார யுக்தியை மாற்றியது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்துக்களின் 2 எருமைகளில் ஒன்றை பிடுங்கிக் கொள்வார்கள். நாட்டின் சொத்துக்களை இஸ்லாமியர்களுக்கு பங்கிடுவார்கள். எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினரின் இட ஒதுக்கீட்டை இஸ்லாமியர்களுக்கு தாரை வார்த்துவிடும், இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் காங்கிரச் கட்சி தனி பட்ஜெட் தாக்கல் செய்யும், காங்கிரஸ், இந்துப் பெண்களின் தாலிகளை பறித்து ஊடுருவலாளர்களுக்கு தந்துவிடுவார்கள், காந்தி படம் வந்த பின்னர்தான் உலகம் காந்தியை அறிந்தது என்று பேச ஆரபித்தார் மோடி. இது மாதிரி தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களையே பேசி வந்தார் மோடி.
அதுமட்டுமல்லாமல் தான் மனிதப்பிறவியே அல்ல என்றும், தன்னை கடவுள் அனுப்பினார். தான் கடவுளின் அவதாரம் என்று சொல்லி பெரும் சலசலப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் காங்கிரசின் தேர்தல் அறிக்கை மக்களவை தேர்தலின் கதாநாயகன் ஆனது. இதில் இந்தியா கூட்டணி கட்சியினரின் பிரச்சாரமும் மக்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றது. அதனால்தான் அசுர பலத்துடன் ஆட்சி எனும் பாஜகவின் கனவு கலைந்துள்ளது. தனிப்பெரும்பான்மையையும் இழந்ததால் பேரம் நடத்தி கூட்டணி ஆட்சி அமைக்கிறது பாஜக.