‘பராசக்தி’ திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ் பெறும் நடைமுறையில் ஏற்பட்ட காலதாமதங்கள் மற்றும் குழப்பங்கள் தற்போது பெரும் விவாதமாகியுள்ளன. கடந்த 2025 டிசம்பர் 19ஆம் தேதி, ‘பராசக்தி’ திரைப்படம் தத்கால் பிரிவின் கீழ் சென்சார் சான்றிதழுக்காக (Censor certificate) விண்ணப்பித்தது. இதனைத் தொடர்ந்து, டிசம்பர் 22ஆம் தேதி திரைப்படம் சென்சார் வாரியத்தின் பரிசோதனைக்குழுவால் திரையிட்டு பார்க்கப்பட்டது.
தொடர்ந்து, டிசம்பர் 25ஆம் தேதி மாலை திரைப்படம் மறுஆய்வுக் குழுவுக்கு (Revising Committee) அனுப்பப்படுவதாகக் கூறி, தயாரிப்பாளர்களுக்கு காரணம் காண்பிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதே நாளில் தயாரிப்பாளர்கள் மறுஆய்வுக் குழுவுக்காக முறையாக விண்ணப்பமும் செய்தனர். ஆனால், டிசம்பர் 25 முதல் 2026 ஜனவரி 1 வரை சென்சார் வாரியத்திலிருந்து எந்தவிதமான தகவலும் அல்லது எழுத்துப்பூர்வமான அறிவிப்பும் தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்படவில்லை.
இதனையடுத்து, ஜனவரி 1ஆம் தேதி மட்டுமே ஜனவரி 5ஆம் தேதி மறுஆய்வுக் குழு திரைப்படத்தைப் பார்க்க உள்ளதாக தயாரிப்பாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, ஜனவரி 5ஆம் தேதி மறுஆய்வுக் குழு திரைப்படத்தை திரையிட்டு பார்த்தது. திரையிடலுக்குப் பிறகு, வெளியீட்டு தேதி மிக நெருக்கமாக இருப்பதால், பெரிய மாற்றங்கள் இன்றி, சில ஒலி சார்ந்த திருத்தங்களுடன் யு/ஏ 16+ சான்றிதழ் வழங்கப்படும் என இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரிடம் குழுவினர் வாய்மொழியாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், அதன்பிறகு ஜனவரி 6 மற்றும் 7ஆம் தேதிகளில் எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் சென்சார் வாரியத்திலிருந்து வரவில்லை. இதனிடையே, ஜனவரி 8ஆம் தேதி தான் திடீரென காரணம் காண்பிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் மொத்தம் 25 திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த திருத்தங்களில் நேரம் அதிகம் எடுத்துக் கொள்ளும் விஷுவல் எஃபெக்ட்ஸ் தொடர்பான முக்கிய காட்சிகள், பல ஒலி மாற்றங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.
தொடர்ந்து, ஜனவரி 8ஆம் தேதி இரவு, வெளியீட்டுக்கு நேரம் மிகக் குறைவாக இருந்தபோதும், ‘பராசக்தி’ (Parasakthi) திரைப்படக் குழு இரவு முழுவதும் பணியாற்றி சென்சார் வாரியம் கோரிய அனைத்து திருத்தங்களையும் செய்து மீண்டும் திரைப்படத்தை சமர்ப்பித்தது. இதன் பின்னர், ஜனவரி 9ஆம் தேதி பிற்பகல் சுமார் 2 மணியளவில், திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டது. குறிப்பிடத்தக்க வகையில், இது திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நேரத்திற்கு 24 மணி நேரத்திற்கும் குறைவான கால இடைவெளியில் வழங்கப்பட்டது.
தயாரிப்பாளர்களுக்கு கடைசி நேர அழுத்தத்தை ஏற்படுத்தும் இந்த மாதிரியான செயல்பாடுகள், படத்தின் வெளியீடு மற்றும் தொழில்துறையின் நிதி நிலையை கடுமையாக பாதிக்கக்கூடும் என திரையுலகினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
