இந்தி மொழி திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் எழுந்த மொழிப்போர் குறித்த பதிவுகள்தான் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘பராசக்தி’ சினிமா.
அறுபது வருடங்களுக்கு முன்னால் தமிழகத்தில் எழுந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தீயின் வெப்பத்தினை இந்த தலைமுறையினரும் உணரும் வகையில் அமைந்திருக்கிறது பராசக்தி.
தாய்மொழியைக் காப்பாற்ற வேண்டும் என்று அன்றைக்கு திராவிட இயக்கங்களும் திராவிட தலைவர்களும் தொலைநோக்கு பார்வையுடன் முன்னெடுத்த முயற்சிகளின் பலனாக இன்றைக்கு தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தி மொழி திணிப்புக்கு எதிரான குரல்கள் கர்நாடகத்திலும், கேரளாவிலும், மகாராஷ்டிராவிலும் , வங்காளத்திலும் உரக்க கேட்கின்றன.

இந்தி மொழி திணிப்புக்கு எதிராக மகாராஷ்டிராவில் இப்போது ’பராசக்தி’ முழக்கம் வலுத்து வருகிறது. இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு உறுதியாக நிற்பதை சுட்டிக்காட்டி மகாராஷ்டிரா மக்களிடையே தொடர்ந்து பேசி எழுச்சியை ஏற்படுத்தி வருகிறார் ராஜ்தாக்கரே. இந்தி மொழியை ஆதிக்கத்தை ஒழிப்பதற்காகவே 20 ஆண்டுகளாக பிரிந்திருந்த உத்தவ் தாக்கரே – ராஜ்தாக்கரே சகோதரர்கள் இணைந்திருக்கிறார்கள்.
இந்தி சினிமா என்றாலே மும்பை நகரம்தான் நினைவுக்கும் வரும் . இதனால் ‘இந்தி’ என்றாலே பெரும்பாலானோருக்கு மும்பைதான் நினைவுக்கு வரும். இந்தி சினிமா உலகின் தலைநகரம் மும்பைதான். படப்பிடிப்பு தளங்கள் முதல் இந்தி நடிகர்கள் வரையிலும் மும்பைதான் எல்லாமே. ஆனால், மும்பை நகரம் இருக்கும் மகாராஷ்டிராவில் தாய்மொழி இந்தி மொழி அல்லவே.

தமிழ்நாட்டில் இந்தி திணிப்பை புறக்கணித்து இரு மொழிக்கொள்கையினை கொண்டு வந்த கால கட்டங்களில் தமிழர்கள் அதிகம் பேர் பிழைப்பு தேடி மும்பைக்கு சென்றிருந்தனர். இதனால் தமிழையும் ஆங்கிலத்தையும் மட்டுமே வைத்துக்கொண்டு மும்பைக்கு போனால் இந்தி தெரியாமல் அல்லாடுவீர்கள். எப்படி பிழைப்பீர்கள்? என்று விமர்சனம் செய்தார்கள். உண்மை என்னவென்றால், இந்திக்கும் மும்பைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மும்பையின் மொழி இந்தி அல்லவே, மும்பையின் மொழி மராத்தி.
அந்த மராத்தி தாய்மொழியை காக்கவும், மாநில மொழிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் உரக்க குரல் எழுப்பி வருகிறார் ’நவநிர்மான் சேனா’ தலைவர் ராஜ்தாக்கரே. மும்மொழிக்கொள்கை மூலம் மகாராஷ்டிராவில் இந்தி திணிப்பதை கடுமையாக எதிர்த்து பாஜகவை பின்வாங்க வைத்திருக்கிறார் ராஜ்தாக்கரே. ‘’எந்த ஒரு மொழிக்கும் நான் எதிரானவன் அல்ல. அதே நேரம், என் மீது ஒரு மொழியை திணித்தால் உதைதான் விழும்’’ என்று பாஜகவை பகிரங்கமாக எச்சரிக்கிறார். ‘’உங்கள் தாய்மொழி இந்தி அல்ல. இதை புரிந்துகொள்ளுங்கள். உங்கள் நிலமும் மொழியும் பறிபோனால் உங்கள் வாழ்க்கையும் பறிபோய்விடும்’’ என்று பீகார், உ.பி. உள்ளிட்ட மாநில மக்களுக்கும் அறிவுறுத்துகிறார்.

இந்தியா என்பது ஒரே நாடு! ஒரே மொழி! அல்ல. பல மாநிலங்களின் ஒன்றியம்தான், துணைக்கண்டம்தான் இந்தியா. இங்கே பல்வேறு மொழிகளும், பல்வேறு பண்பாடுகளும், பல்வேறு வழிபாட்டு முறைகளும் உள்ளன. இந்தியாவை ஆள்பவர்கள் இவற்றை பாதுகாப்பதுதான் இந்திய அரசியலமைப்பிற்குச் செய்யும் நியாயம். இதை மத்திய பாஜக அரசு செய்யவில்லை என்றால் அது துரோகம்.
