நவம்பர் -8 ஆம் தேதி அன்று தனது பிறந்த நாளை கொண்டாடிய சீமான், ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற வேண்டும் நினைத்திருக்கிறார். அன்றைய தினம் ரஜினியிடம் இருந்து அனுமதி வரவில்லை .
சீமான் அனுமதி கேட்டது ரஜினியின் கவனத்திற்கு சென்றது . முன்னதாக தான் நடித்த வேட்டையன் படத்தை பார்த்துவிட்டு அக்டோபர் 12ஆம் தேதி அந்த திரைப்படத்தை பாராட்டி அறிவிக்கை வெளியிட்டிருந்தார் சீமான்.
’’தமிழ்த்திரையுலகின் பெரும் புகழ் கொண்ட திரைநட்சத்திரம் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் கதாநாயனாக நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் சமூக அவலங்களைக் கண்முன்னே காட்சிப்படுத்தும் கண்ணாடியாக வெளிவந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது’’ என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
’’மதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த்’’ என்றே அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் சீமான். தன்னுடைய அறிமுகக் காட்சி முதல் இறுதி வரை ஒவ்வொரு காட்சியிலும் வழக்கம்போலக் காண்போரை பரவசப்படுத்துகிறார். தம்முடைய அனுபவமிக்க நடிப்பின் மூலம் ஏற்ற பாத்திரத்திற்கு உயிர்கொடுத்து அதியனாகப் படத்தினைத் தாங்கி நிற்கிறார் என்று ரஜினியின் கேரக்டரையும் நடிப்பையும் வியந்திருந்தார்.
ரஜினிகாந்திற்காகவே அமைக்கப்பட்ட இசை, சண்டைக்காட்சிகள் என ஒவ்வொன்றிலும் தம்முடைய கவர்ந்திழுக்கும் நடிப்பாற்றல் மூலம் ஆரம்பகால ரஜினியாக நம் மனதை ஆட்கொள்கிறார். அவருக்கு என்னுடைய அன்பும், வாழ்த்துகளும் என்று அறிக்கையின் பெரும்பகுதியை ரஜினிக்கே ஒதுக்கி இருந்தார் சீமான்,
அண்மையில் வெளிவந்த ரஜினிகாந்த் திரைப்படங்களிலேயே வேட்டையன் திரைப்படம் தனித்துவத்துடன் மக்கள் மனதில் உயர்ந்து நிற்கும் படைப்பாக அமைந்துள்ளது. ரசிகர்களுக்கானதாக மட்டுமில்லாமல் மக்கள் மனதில் மிக ஆழமான கருத்தை விதைக்கும் கலைப்படைப்பாக வெளிவந்துள்ள வேட்டையன் திரைப்படத்தினைப் போன்றே தொடர்ச்சியாகச் சமூக அக்கறைகொண்ட படங்களில் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்க வேண்டுமென்ம் என தனது விருப்பத்தையும் தெரிவித்திருந்தார்.
இதன் பின்னர் இம்மாதம் 21ம் தேதி அன்று சீமானுக்கு அனுமதி கொடுத்திருந்தார் ரஜினி. போயஸ்கார்டனில் உள்ள இல்லத்தில் ரஜினியை சந்தித்தார். ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. சினிமா குறித்து சம்பிரதாயத்திற்காக பேசினாலும் அரசியல் குறித்து அந்த சந்திப்பில் அதிகம் பேசி உள்ளார்கள்.
தவெக வந்து தமிழக அரசியல் களத்தின் போக்கை மாற்றிவிட்டது. அதனால் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டால் வாக்குசதவிகிதம் கூடிப்போகாவிட்டாலும் 8%ல் இருந்து குறைந்துவிடக்கூடாது. இப்போது இருக்கும் சூழலில் தனது தலைமையில் கூட்டணி அமைக்கலாம் என்று தற்போது முடிவெடுத்திருப்பதாக சீமான் ரஜினியிடம் சொல்லி இருக்கிறார். அதே நேரம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய கமலாலயம் தரப்பில் இருந்து சிலர் பேசிவருகின்றனர். ஆனால் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் மட்டுமே அதுபற்றி யோசிக்கலாம் என்று சொல்லி இருக்கிறார் சீமான்.
மேலும், கமலாலயம் தரப்பில் இருந்து தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால், அந்த கூட்டணிக்கு நீங்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று ரஜினியிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் சீமான்.
அதற்கு ரஜினி, நாதக கொள்கைக்கு இணக்கமான கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணிக்கு முயற்சி செய்யுங்கள். முதல்வர் வேட்பாளராக உங்களை தேசிய ஜனநாயக கட்சி அறிவிக்கும் என்கிற உங்களின் எதிர்ப்புக்கு கிடைக்கும் என்று உத்தரவாதமாக பதில் சொல்ல முடியாது என்று சொல்லி இருக்கிறார்.
தவெக -நாதக சண்டையையும் கவனித்து வரும் ரஜினி, தவெகவை பற்றி தேவையில்லாமல் விமட்சிக்க வேண்டாம் என்பது தனது கருத்து என்று சீமானிடம் சொல்லி இருக்கிறார். உங்களின் அரசியல் நிலைப்பாட்டை பார்த்து எதிரிகள் மிரண்டு போயிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது நீங்கள் ஏன் தவெகவை விமர்சித்து தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்றும் தனது கருத்தை சீமானிடம் சொல்லி இருக்கிறார்.
ஆனால் நாதகவோ இதை மறுக்கிறது. 90 இடங்களுக்கு மேல் வேட்பாளர்களை அறிவித்துவிட்டோம். அதனால் கூட்டணி இல்லை. அப்படியே கூட்டணி என்றாலும் அது நாதக தலைமையில்தான் அமையும் என்றே சொல்கிறது.