எளிய மக்களின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் நீதிமன்றம் மீண்டும் அந்த நம்பிக்கையை தனது தீர்ப்பின் மூலம் உறுதி செய்துள்ளது. பாதிக்கப்படுவர்களுக்கு நிம்மதியைக் கொடுத்து, அதிகாரம் இருப்பதால் ஆட்டம் போட்டவர்களுக்கு கடிவாளத்தைப் போட்டிருக்கிறது உச்சநீதிமன்றம்.
பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்தரபிரதேசத்திலும் மற்றும் சில மாநிலங்களிலும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுகிறவர்கள் அல்லது தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்படுகிறவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டதும் அவர்கள் குடியிருந்த வீட்டை புல்டோசர் கொண்டு இடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு. இதே வழியை பா.ஜ.க.வின் மற்ற முதலமைச்சர்களும் பின்பற்றி வருகிறார்கள்.
அரசாங்கத்தின் புல்டோசர்கள் இடித்துத் தள்ளுகின்ற வீடுகள் பெரும்பாலும் முஸ்லிம் சிறுபான்மை மக்களின் வீடுகளாக இருக்கும். தலித் மக்களின் வீடுகளாக இருக்கும். அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கக்கூடியவர்களின் வீடுகளாக இருக்கும். வீடுகள் இடிக்கப்படும் காட்சிகளைத் தொலைக்காட்சிகளில் நேரலை செய்வதுடன், சமூக வலைத்தளங்களிலும் பரப்பி, “தேசத்துரோகிகளுக்கு இதுதான் சரியான தண்டனை” என ஃபயர் விடுவார்கள். கைது செய்யப்பட்ட ஆண்கள் சிறையில் இருப்பார்கள். அந்தக் குடும்பத்தில் உள்ள பெண்களும் குழந்தைகளும் வீடுகளை இழந்து தெருவில் நிற்பார்கள். இதுதான், சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொள்ளும் பா.ஜ.க. நிர்வாகத்தின் ‘தேச பக்தி’.
உத்தரபிரதேசம் வழியில் குஜராத்திலும் இதே போன்ற புல்டோசர் கலாச்சாரம் பரவியது. தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க. நிர்வாகிகளும்கூட புல்டோசர் வரும் என்று மிரட்டினார்கள். ஆக்கிரமிப்பு இடத்தில் வீடு கட்டியுள்ளார்கள், முறையான பட்டா இல்லை என்பன போன்ற காரணங்களை வலிந்து சேர்த்துக்கொண்டு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் வீடுகளை இடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இத்தகைய அக்கிரமங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு, இதுபோல இடிப்பதற்கு இடைக்காலத் தடைவிதித்து, விசாரணையைத் தொடர்ந்து நடத்திய நிலையில், நவம்பர் 13 அன்று தீர்ப்பை வழங்கியது.
“நீதிமன்றம் வழங்க வேண்டிய தீர்ப்பை அதிகாரிகள் கையில் எடுத்துக்கொள்ள முடியாது. சட்டத்தின் ஆட்சியும், குடிமக்களுக்கான உரிமைகளும் அரசு நிர்வாகத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிரானது. அத்தகைய நடவடிக்கைகளை சட்டம் மன்னிக்காது. அரசு நிர்வாகியே நீதிபதி போல செயல்பட்டு, சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் ஒரு வீட்டை இடிக்க உத்தரவிட்டால் அது சட்டத்தின் விதியை மீறுவதாகும்.
குற்றம்சாட்டப்பட்டவராகவோ அல்லது குற்றவாளியாகவோ இருப்பதால், சொத்துகளை இடிப்பதற்கு அது ஒரு காரணமாக இருக்க முடியாது. சட்டவிரோதமாக ஒரு கட்டடம் இடிக்கப்பட்ல்கூட அது அரசியலமைப்பின் நெறிமுறைகளுக்கு எதிரானது” என்று புல்டோசர் இடிப்புகளைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.
வீடு என்பது மனிதர்களின் பாதுகாப்புக்கான இடம். ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்தாலும் அதற்குரிய கால அளவுடன் நோட்டீஸ் வழங்காமல் இடிக்க முடியாது. பாதிக்கப்பட்டவர் மேல்முறையீடு செய்யாவிட்டாலும்கூட, அவர் வேறு இடம் மாறுகிறவரை பொறுத்திருக்க முடியாமல், குடியிருக்கின்ற வீட்டை இடிப்பது போன்ற கடுமையான நடவடிக்கையில் இறங்கக்கூடாது. சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகின்ற அரசு நிர்வாகத்தின் அதிகாரிகள் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருப்பதுடன், பாதிக்கப்பட்டவருக்கான என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசவிரோதிகள் மீதான நடவடிக்கை என புல்டோசர் இடிப்புகளைக் கொண்டாடிக் கொண்டிருந்த பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகளின் தலையில் ஓங்கிக் குட்டியுள்ள உச்சநீதிமன்றம், “இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இந்த வழக்கில் நாங்கள் என்ன தீர்வை முன்வைத்தாலும் அதை அனைத்து குடிமக்களுக்காகவும், அனைத்து நிறுவனங்களுக்காகவும் வைக்கிறோம்” என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
குடியிருப்புகளை இடிக்கும் அதிகாரம் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு கிடையாது என்பதையும் அதை நீதிமன்றமே முடிவு செய்ய முடியும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ள உச்சநீதிமன்றம், தனது உத்தரவை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் தெரியப்படுத்தி, அங்குள்ள மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுகளுக்கும் இதை அறிவிக்க வேண்டும் எனத் தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
புல்டோசர் ராஜ்ஜியம் நடத்திவந்த பா.ஜ.க. மாநில அரசுகள் மீது நீதி எனும் புல்டோசரை ஏற்றியுள்ளது உச்சநீதிமன்றம்.