
பா.ஜ.க.வில் எந்தவொரு நிர்வாகி பேட்டி அளித்தாலும், “நாட்டிலேயே நாங்கள் மட்டும்தான் தேசபக்தர்கள். மற்றவர்கள் ஆன்ட்டி இந்தியர்கள். எல்லா கட்சிகளும் ஊழல் கட்சி. நாங்கள் கை சுத்தமானவர்கள். உத்தரபிரதேசத்தில் உள்ள எங்க பா.ஜ.க. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு மாற்றுத் துணிகூட கிடையாது. கன்னியாகுமரியில ஜெயிச்ச எங்க பா.ஜ.க. எம்.எல்.ஏ. காலுல செருப்புகூட போட மாட்டாரு. மோடி சொத்து சேர்த்தாருன்னு ஊழல் குற்றச்சாட்டு உண்டா? அமித்ஷா மேலே ஊழல் புகார் உண்டா?” என்று அடுக்குவார்கள்.
அதைக் கேட்பவர்களுக்கும், தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த, ஆட்சியில் இருக்கிற கட்சிகள் மீது எத்தனையோ ஊழல் வழக்குகள் இருக்கின்றன. இனறைய அமைச்சர்கள்-முன்னாள் அமைச்சர்கள் அடிக்கடி கோர்ட் படிக்கட்டுகளில் ஏறுகிறார்கள். வாய்தா வாங்குகிறார்கள். உயர்நீதிமன்றம்-உச்சநீதிமன்றத்திற்குப்போய் விசாரணைக்குத் தடை வாங்குகிறார்கள். ஆனால், பா.ஜ.க.வில் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன் இப்படி யார் மீதும் எந்த வழக்கும் இல்லையே என்கிற ஆச்சரியம் ஏற்படும். இது ஒரு கண்கட்டு வித்தை.
மோடிக்கு முன்பு பா.ஜ.க.வின் சார்பில் பிரதமராக இருந்தவர் வாஜ்பாய். அவரது ஆட்சியின்போதுதான் கார்கில் யுத்தம் நடந்தது. அந்த யுத்தத்தில் இறந்த இந்திய ராணுவ வீரர்களை அடக்கம் செய்ய சவப்பெட்டிகளை மத்திய அரசு வாங்கியது. அந்த சவப்பெட்டியிலும் ஊழல் செய்து வழக்கை எதிர்கொண்ட பெருமை பா.ஜ.க அரசுக்குத்தான் உண்டு. அதுபோல அப்போது பா.ஜ.க.வின் தேசியத் தலைவராக இருந்த பங்காரு லட்சுமணன் என்பவர், ராணுவத்திற்கு தளவாடங்கள் சப்ளை செய்கிற ஒப்பந்தத்தை வாங்கித் தருவதாகக் கூறி கட்சி நிதியாக கட்டுக்கட்டாகப் பணம் பெற்றது டெஹல்கா இணையதளத்தின் காணொலி மூலம் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதான் பா.ஜ.க. பாணி. பா.ஜ.க ஃபார்முலா.
பா.ஜ.க. தலைவர்கள் நேரடியாக லஞ்ச-ஊழல் வழக்குகளில் சிக்குவது அபூர்வம். அதை இரண்டாம் கட்டத் தலைவர்களும், பா.ஜ.க.வுக்கு வேண்டிய தொழிலதிபர்களும் பார்த்துக் கொள்வார்கள். மோடி அரசின் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளிலும் அதானியோ அம்பானியோ இருப்பார்கள். உள்நாட்டு வர்த்தகம் மட்டுமின்றி, வெளிநாட்டு வர்த்தகத்திலும் இவர்களே கோலோச்சுவார்கள். நாட்டின் முன்னணி வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் பா.ஜ.க.வுக்கு கட்சி நிதி என்ற பெயரில் பல்லாயிரம் கோடி ரூபாய்களை அள்ளிக் கொடுக்கும். காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தெலுங்கு தேசம், சமாஜ்வாடி கட்சி, தி.மு.க. போன்ற கட்சிகளுக்கு வர்த்தக நிறுவனங்கள் வழங்குகிற கட்சி நிதியின் மொத்த அளவைக் கூட்டினாலும் பா.ஜ.க.வுக்கு கிடைக்கக்கூடிய தேர்தல் நிதிக்குப் பக்கத்தில் வர முடியாது. தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க. எத்தனை ஆயிரம் கோடி நிதிகளை வாரிக் குவித்தது என்பதைப் பார்த்து உச்சநீதிமன்றமே அதிர்ந்தது. தேர்தல் பத்திர முறையை ரத்து செய்தது.
பா.ஜ.க.வின் ஊழல் சூட்சுமத்தை அறியாத சில பா.ஜ.க. நிர்வாகிகள் நேரடியாகவே ஊழல் வழக்குகளில் சிக்கிக்கொள்வார்கள். கர்நாடக மாநிலத்தில் கனிமச்சுரங்கம் சம்பந்தப்பட்ட வழக்கில் பா.ஜ.க.வின் ரெட்டி சகோதரர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவராக இருப்பவர் நயினார் நாகேந்திரன். இவர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். மத்தியில் பா.ஜ.க. அதிகாரம் செலுத்துவதால், அங்கே போனால் இன்னும் அதிக லாபம் வரும் என்று அரசியல் கணக்குப் போட்டு, பா.ஜ.க.வுக்குப் போனார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாகி, தனக்குள்ள லாபி மூலம் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவராகவும் ஆகிவிட்டார்.
கடந்த எம்.பி. தேர்தலின்போது நெல்லை தொகுதியில் போட்டியிட்ட இவருக்காக கொண்டு செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் தாம்பரம் ரயில்வே நிலையத்தில் பிடிபட்டது. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டியால் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், நீதிமன்றத்தில் இது பற்றி தெரிவித்திருக்கும் அதிகாரிகள், இது ஹவாலா பணம் என்பதையும், தேர்தலின்போது நயினார் நாகேந்திரனுக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் எஸ்.ஆர்.சேகர், கேசவ விநாயகம், கோவர்தன் ஆகியோர் உதவியதையும், ஒன்றரை கிலோ தங்கத்தைக் கைமாற்ற கிட்டதட்டட ஒரு கோடி ரூபாயை கைமாற்ற ஹவாலா தரகர் உதவியதற்கான கால் டேட்டாவையும் நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
நயினார் நாகேந்திரனுக்கு முன்பு அண்ணாமலை தலைவராக இருந்தார். ஆரூத்ரா நிதி நிறுவன மோசடி முதல் பலவற்றிலும் அவர் பெயர் அடிபட்டது. சிக்காமல் இருக்கிறவரை எல்லாரும் யோக்கியர்கள்தான். அந்த வகையில் பா.ஜ.க.வில் பல யோக்கியர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.