
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையைத் தொடர்ந்து ஒவ்வொரு துறை சார்பிலுமான மானியக் கோரிக்கைகளுக்கானப் பதிலுரைகள் அளிக்கப்பட்டன. முதலமைச்சரின் பொறுப்பில் உள்ள துறைகள் சார்பிலான மானியக் கோரிக்கைகளுடன் இந்த சட்டமன்றக் கூட்டத் தொடர் நிறைவடைகிற நிலையில், பேரவையின் 110 விதியின் கீழ் ஏப்ரல் 28ந் தேதியன்று முதலமைச்சர் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார். அந்த அறிவிப்பு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் சார்ந்த அறிவிப்புகளாகும்.
அதில் முக்கியமானது, ஈட்டிய விடுப்பினை சரண் செய்து அதற்கான ஊதியத்தைப் பெறுவது தொடர்பாகும். அரசு ஊழியர்கள் பல்வேறு காரணங்களுக்காகவும் அவசியத் தேவைக்காகவும் விடுப்பு எடுத்துக்கொள்ள முடியும். சிலர் அந்த விடுப்பினை எடுக்காமல் பணியாற்றி, அதற்குரிய ஊதியத்தைப் பெறுவார்கள். இந்த நடைமுறையை முந்தைய அ.தி.மு.க அரசு நிறுத்தி வைத்திருந்தது. இந்த சட்டமன்றத்தில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது, ஈட்டிய விடுப்பிற்கானத் தொகையை அடுத்த ஆண்டிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு வரை காத்திருக்க வேண்டிய சூழலை அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் விரும்பவில்லை. அவை தொடர்பான அதிருப்திகளும் வெளிப்பட்டன. இந்தத் தகவலை அறிந்து, ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை இந்த ஆண்டே நடைமுறைக்கு வரும் என்றும், 1.10.2025 முதல் சரண் செய்து பணப்பலன் பெறலாம் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
1.1.2025 முதல் கணக்கிட்டு 2% அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்றும் அரசு ஊழியர்களுக்கான அறிவிப்பில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன், பண்டிகை கால முன்பணம், பெண் பணியாளர்களுக்கான மகப்பேறு விடுப்பு, திருமணத்திற்கான முன்பணம், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குழந்தைகள் பட்டம் மற்றும் பட்டயப் படிப்புக்கான கல்வி முன்பணம் ஆகியவை உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் தன் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்புகளை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சங்கங்கள் வரவேற்றிருக்கும் நிலையில், தி.மு.க.வின் தோழமைக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்றவையும் வரவேற்றுள்ளன.
அரசு ஊழியர்களுக்கான முதலமைச்சரின் அறிவிப்பு அவர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கான செவிசாய்ப்பாகும். முந்தைய ஆட்சியில் அவர்களின் கோரிக்கைகள் வெளிப்படையாகவே புறக்கணிக்கப்பட்டன. போராட்டங்களை இரவும் பகலும் தொடர்ந்து நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். 2021 ஆட்சி மாற்றத்திற்கு வலு சேர்த்ததில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் பங்களிப்பும் முக்கியமானது. எனினும், அவர்களின் முக்கிய கோரிக்கைகள் நிறைவேறுவதில் தாமதம் எழுந்தது. ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என்ற அதிருப்தி குரல்கள் அவர்களிடமிருந்து வெளிப்பட்டன. போராட்ட அறிவிப்புகளும் வெளியாகின. அதனைத் தொடர்ந்து அரசு தரப்பில் பேச்சுவார்த்தை, சமாதான முயற்சிகள் என மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், எதிர்க்கட்சிகள் இவற்றைக் கையில் எடுத்து, அரசு ஊழியர்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி தி.மு.க ஏமாற்றி விட்டது என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். எதிர்க்கட்சித் தலைவரான அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்தக் குற்றச்சாட்டை அழுத்தமாக வைத்தார்.
பொதுவாக, அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றபோதெல்லாம் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதுடன் அவர்கள் மீது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. எம்.ஜி.ஆர். ஆட்சியில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். ஜெயலலிதா ஆட்சியில் அவர்கள் மீது எஸ்மா-டெஸ்மா போன்ற சட்டங்கள் பாய்ந்து பணி நீக்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. மாறாக, கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பல திட்டங்கள் செயல்படுத்ப்பட்டதுடன் ஊதிய உயர்வும் வழங்கப்பட்டது.
தற்போதைய முதலமைச்சர் அதே வழியில் பல கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளார். எனினும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து குழு அமைத்து, பழைய ஓய்வூதியத் திட்டம், புதிய ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வு ஊதியத் திட்டம் ஆகியவை குறித்து பரிசிலித்து செப்டம்பர் 30ந் தேதிக்குள் பரிந்துரை வழங்க அறிவுறுத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அதிக எதிர்பார்ப்பு மிக்க கோரிக்கை இதுதான். முதல்வரின் தற்போதைய அறிவிப்புகள் சர்க்கரை இனிப்பு போன்ற மகிழ்ச்சி என்றால், ஓய்வூதியத் திட்டம் தொடர்பான சாதகமான அறிவிப்பு சர்க்கரைப் பொங்கல் போன்ற மகிழ்ச்சியைத் தரும்.