கடலில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வானகிரி மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினரை சிறைப்பிடித்துள்ளனர். தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்படுவதும், சித்திரவதைப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு, இலங்கை அரசால் ஏலம் விடப்படுவதும் முடிவே இல்லாத துன்பமாகத் தொடர்கிறது.
30 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை கடற்படையினர் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதும், சிறைப்பிடிப்பதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இலங்கையில் இனப்போராட்டம் ஆயுதப் போராக மாறிய நிலையில், விடுதலைப்புலிகளுக்கு தமிழ்நாட்டு மீனவர்கள் உதவுவதாகக் குற்றம்சாட்டி, இலங்கைக் கடற்படையினர் அடிக்கடி துப்பாக்கிச் சூடு நடத்தி, மீனவர்களைக் கொன்றார்கள். மீனவர்களைக் கடுமையாகத் தாக்கி, குற்றுயிராக தமிழ்நாட்டுக்கு அனுப்புவதும் வழக்கமாக இருந்தது. இப்போது இலங்கை உள்நாட்டு நிலவரம் அப்போது போல இல்லை. போர்ச்சூழல் இல்லாத நிலையிலும் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தாக்குதல்கள் தொடர்கின்றன.
2014ல் பிரதமராவதற்கு முன் தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்த நரேந்திர மோடி, தன்னுடைய குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் நாட்டவரால் தாக்கப்படுவதுபோல, தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதாகவும், அவர்களைப் பாதுகாப்பதற்காக ஒரு திட்டம் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதியை மூன்றாவது முறையாக பிரதமராகியும் நரேந்திர மோடி மறந்துவிட்டார். தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க. நிர்வாகிகளும் பிரதமரிடம் இதனை நினைவுபடுத்துவதில்லை.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீனவர்களின் பாதுகாப்பு குறித்து பிரதமருக்கும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் தொடர்ந்து கடிதங்கள் எழுதி வருகிறார். மயிலாடுதுறை மீனவர்களை இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ள நிலையில் முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், “நவம்பர் 9ந் தேதியன்று இரவு மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்களையும், அவர்களது எந்திரப் படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர். இந்திய மீனவர்களும் அவர்களது படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது ஆழ்ந்த கவலைக்குரியதாக உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 128 மீனவர்களும், 248 மீன்பிடிப் படகுகளும் இலங்கை காவலில் உள்ளனர். இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களை விடுவிப்பதற்கும், அவர்களின் மீன்பிடிப் படகுகளை மீட்பதற்கும் தேவையான அனைத்து தூதரக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, அவர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்புவதற்கு வழிவகை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
பா.ஜ.க ஆட்சி அமைந்ததிலிருந்து இது போன்ற கடிதங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இதுவரை எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் உள்ள மீனவர்களும், காரைக்கால் மீனவர்களும் இலங்கை கடற்படையின் கொடூரத் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். மீனவர்கள் பிரச்சினையில் தீர்வு காண்பதற்கு கச்சத்தீவு மீட்பு என்பது முக்கியத்துவமான ஒன்று என்ற போதும், அது பற்றிய அவதூறான-உண்மைக்கு மாறான அரசியல் சண்டைகள்தான் முன்னெடுக்கப்படுகின்றனவே தவிர, உருப்படியானத் தீர்வுக்கு வழிகாணப்படுவதில்லை.
இலங்கையில் உள்ள தமிழர் பகுதிகளில் வாழும் மீனவர்கள் தற்போது தங்களின் வாழ்வாதாரத்திற்கு கடலை நம்பியுள்ளனர். தமிழ்நாடு மீனவர்கள் எல்லை தாண்டுவதாகவும், மடிவலைகளைப் பயன்படுத்துவதாகவும் இலங்கைத் தமிழ் மீனவர்கள் தரப்பிலிருந்தும் புகார் எழுப்பப்படுகிறது. இது தொடர்பாக இருநாட்டு மீனவர்களின் சந்திப்புக்கு மீனவ சங்கங்கள் ஏற்பாடு செய்து, பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தன. எனினும், இலங்கை கடற்படையின் தாக்குதல் நீடிக்கவே செய்கிறது.
இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், இந்திய-இலங்கை மீன்வள கழகம் என்ற கூட்டமைப்பை நிறுவலாம் என்ற யோசனையை முன்வைத்துள்ளார் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.யான ரவூஃப் ஹக்கீம். அண்மையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன் தனது இலங்கை பயணத்தின்போது அந்நாட்டு பிரதமர் ஹரிணி அமரசூர்யாவை சந்தித்து, இது குறித்து தெரிவித்திருப்பதாகவும், நாடாளுமன்றத்திலும் இதனை பிரதமரிடம் தனது கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தி இலங்கைப் பிரதமரின் பதிலைப் பெற முயற்சிப்பார்கள் என்றும் ரவூஃப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இந்தியா-இலங்கை ஆகிய இரு நாட்டு மீனவர்களும் கடல்வளத்தை ஒருவருக்கொருவர் பாதிப்பின்றி சீராகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையிலான திட்டங்களை இந்தக் கழகத்தின் மூலம் உருவாக்கி, அதனை நடைமுறைப்படுததினால் தமிழ்நாட்டு மீனவர்கள் சிறைப்பிடிக்கப்படும் நிலை ஏற்படாது. இந்திய பிரதமர் என்ன முயற்சி எடுக்கப்போகிறார்?
