அரசியல் கட்சியினர் தங்கள் கட்சி கூட்டங்களுக்கு வேன், பஸ்,லாரியில் மக்களை அழைத்துச் சென்று திரும்பவும் அவர்களை பத்திரமாக கொண்டு போய் விட்டுவிடுவது வழக்கம். ஆனால் கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்திற்கு வந்து கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்து போய், மேலும் பலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தவெகவினர் ஓடிவிட்டனர்.
தங்களை நம்பி வந்தவர்களை இப்படி கைவிட்டுவிட்டது தவெக என்று எழும் விமர்சனங்களுக்கு, விஜய் கூட்டத்திற்கு யாரும் கூட்டத்தை கூட்டவில்லை. தன்னெழுச்சியாக வந்த கூட்டம் அது என்று தவெக தரப்பில் இருந்து கூறப்பட்டு வருகிறது.
ஆனால், சம்பவம் நடந்த கரூர் மாவட்டத்துக்காரர்கள் இதை மறுக்கிறார்கள். டெம்போ வச்சு கூட்டத்திற்கு ஆட்களை அழைத்துச்சென்றார்கள் என்கிறார்கள்.

கரூர் மாவட்டத்தில் ஏமூர் பகுதியைச் சேர்ந்த முதியவர் சுப்பிரமணியம், பிரபாகரன், தண்டபாணி என்கிற இரு தவெகவினர்தான் தங்கள் பகுதியில் இருந்து மக்களை டெம்போவில் அழைத்துச்சென்றார்கள் என்கிறார்.
இது குறித்து அவர், ‘’கூட்டிக்கிட்டு போனீல்ல.. உன்னால உயிருக்கு பாதுகாப்பு கொடுக்க முடிஞ்சதா? நெரிசல் இல்லாம பாத்துக்கிட்டு, பாதுகாப்பா கொண்டு வந்து விட முடியலேன்னா நீ ஏன் கூட்டிக்கிட்டு போற.. கொண்டு போய் விட்டுட்டு உன் உயிர மட்டும் பாதுகாத்துக்கிட்டு ஓடிட்ட.. இருக்குற உயிரோட நிலம என்னாகுறது? ஒரு ஆறுதலாவது சொன்னாங்களா?

நாங்க இருக்கோம், பாத்துக்கிறோம்னு ஒரு வார்த்தை கூட சொல்லல. எல்லா கட்சிக்காரங்களும் வந்து ஆறுதல் சொல்லுறாங்க. விஜய் கட்சிக்காரங்கதான் இதுக்கு பொறுப்பு. அவுங்களே வந்து ஆறுதல் சொல்லல. இவுங்களுக்கு கட்சி எதுக்கு? தலைமை எதுக்கு? ’’ என்று கொதித்தெழுகிறார்.

இனிமேல் ஊருக்குள் இருந்து யாரும் டெம்போ வச்சு அழைத்துச் செல்லக்கூடாது. யாராவது விருப்பப்பட்டா அவர்கள் தனியாக போகட்டும் என்று ஆவேசப்படுகிறார்கள் ஏமூர் மக்கள்.
