உணவோ, மளிகைப் பொருட்களோ, வீட்டுக்குத் தேவையான மற்ற பொருட்களோ ஆன்லைன் செயலி மூலமாக ஆர்டர் போட்டால் அடுத்த 10 நிமிடத்தில் வந்து சேர்ந்துவிடும் என்பதுதான் இன்றைய வணிக உலகம். பயனாளிகள் தங்கள் வீட்டில் இருந்தபடியே எதையும் வாங்கிவிட முடியும். அதுவும் 10 நிமிடத்தில் கிடைத்துவிடும். அலைய வேண்டியதில்லை. நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை. இது ஆன்லைன் செயலி மூலமாக வியாபாரம் செய்யும் நிறுவனங்களுக்கும், அதனைப் பயன்படுத்தும் மக்களுக்கும் மிகவும் உபயோகமாக உள்ளது. ஆனால், நிறுவனத்தின் பொருளை மக்களிடம் கொண்டு சேர்ப்பவர்களுக்கு?
அவர்களைத்தான் Gig Workers என்று கூறுகிறார்கள். ஸ்விகி (Swiggy), சொமாட்டோ, பிளிங்கிட் போன்ற ஆன்லைன் விற்பனைத் தளங்கள் தங்களிடம் உள்ள பணியாளர்களை 10 நிமிடத்திற்குள் டெலிவரி செய்தாக வேண்டும் என்று வேகப்படுத்துகிறது. அந்த நேரத்திற்குள் செல்ல முடியாவிட்டால், வாடிக்கையாளர்கள் தங்களக்கு அந்தப் பொருள் வேண்டாம் என்று சொல்வது உண்டு. இது நிறுவனத்தின் வியாபாரத்தைப் பாதிக்கும். அதனால், எந்தளவுக்கு வேகமாக டெலிவரி செய்ய வைக்க முடியுமோ அந்தளவுக்கு ஆன்லைன் ப்ளாட்ஃபார்ம் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை அவசரப்படுத்துகின்றன.
சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் உள்ள போக்குவரத்து நெருக்கடிக்கிடையே டூவீலரை வளைந்து, நெளிந்து வேகமாக ஓட்டி வந்து, பத்து நிமிடத்திற்குள் டெலிவரி செய்வது என்பது, கம்பி மேல் பைக் ஓட்டுவது போன்ற சாகசமாகும். இதனால் விபத்துகள் நடப்பது வழக்கமாகிவிட்டது. டெலிவரி செய்பவர்கள் மட்டுமல்ல, அவர்களின் வாகனத்தில் மோதி பொதுமக்களும் பாதிப்படைகிறார்கள். டெலிவரி செய்யும் இளைஞர்கள் மக்களின் கோபத்திற்குள்ளாகி, மோசமாகத் திட்டு வாங்குகிறார்கள்.(Ohttps://sparkmedia.news/nline tamil news)
இந்தியாவில் வேலை கிடைப்பது என்பது படிப்பைப் பொறுத்ததாக இல்லாமல், வாய்ப்பைப் பொறுத்ததாக உள்ளது. பட்டப்படிப்பு முடித்தவர்கள், பொறியியல் போன்ற தொழிற்படிப்பு முடித்தவர்கள் கூட இந்த வேலைக்கு வருகிறார்கள். பகுதிநேரமாக இந்த வேலையைப் பார்க்கிறவர்களும் உண்டு. அவர்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கவேண்டிய வேலை, வாழ்க்கைக்கே கேள்விக்குறியாக மாறக்கூடிய சூழல் இருப்பதால், 10 நிமிட டெலிவரி குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே இருந்தன.
பொதுமக்களைப் பொறுத்தவரை, முன்புபோல வரிசையில் நின்று, காத்திருந்து ஒரு பொருளைப் பெற வேண்டும் என்ற மனநிலையிலிருந்து முற்றிலும் மாறிவிட்டார்கள். சினிமா திரையரங்குகள் முன் வரிசையில் நிற்கும் இளைஞர்கள் குறித்து 20 ஆண்டுகளுக்கு முன் கவிதை எழுதாத கவிஞர்களே இல்லை. ஆனால், இப்போது முதல் நாள் முதல் காட்சி என்பதே ஆன்லைன் புக்கிங் மூலமாகத்தான் நடக்கிறது. ஆன்லைன் புக்கிங் தொடங்கியவுடன் டிக்கெட் பதிவு செய்துவிடவேண்டும், திரைப்படத்தின் முதல் காட்சியைப் பார்த்துவிடவேண்டும் என்பதுதான் இளைஞர்களின் ஆர்வம். அதுபோலவே, பெண்களும் காலம் காலமாக வீட்டு வேலைகளுக்காகவே தங்கள் வாழ்க்கையைத் தொலைத்தவர்களாக இருந்தார்கள். இப்போது அவர்களுக்கு அறிவியல் வளர்ச்சியும் தகவல் தொழில்நுட்ப முன்னேற்றமும் சுதந்திர வெளியைக் கொடுக்கிறது. விரைவாகப் பொருட்கள் வீட்டுக்கு வந்தால் பெண்களின் வேலைச்சுமை பெருமளவு குறையும். இவற்றுக்கிடையேதான் Gig Workersகளாக உள்ள இளைஞர்களின் வாழ்க்கை அல்லாடுகிறது.
தங்களின் வாழ்க்கையையே பணயம் வைக்க வேண்டிய சூழல் இருப்பதைக் கருத்திற்கொண்டு, கடந்த டிசம்பர் 31ஆம் நாள் அவர்கள் ஒருநாள் வேலை நிறுத்தம் செய்தார்கள். இதையடுத்து மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மான்ட்சுக் மாளவியா, ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களை (Online delivery companies) அழைத்துப் பேசினார். பணியாளர்களின் முக்கிய கோரிக்கையான 10 நிமிட டெலிவரி என்பதை நிறுத்தவேண்டும் என்பது குறித்து நிறுவனத்தினரிடம் அமைச்சர் பேசினார். இதன் விளைவாக, 10 நிமிட அதி விரைவு டெலிவரியை நிறுத்துவதாக நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன. Gig Workers அனைவருக்கும் இது மிகப் பெரிய நிம்மதியைக் கொடுக்கும். அவர்களின் குடும்பத்தாருக்கும் அந்த நிம்மதி பொருந்தும். மத்திய அரசின் இந்த முயற்சி ஒரு நல்ல விளைவை ஏற்படுத்தியுள்ளது.
Gig Workers குறித்து தமிழ்நாடு மாநில அரசு எப்போதும் அக்கறை கொண்ட அரசாக உள்ளது. கொளுத்தும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் விரைந்து பயணித்து டெலிவரி செய்யும் அவர்களுக்காக, தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை போன்ற நகரங்களில் ஓய்வறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. டெலிவரி செய்தபிறகோ, ஆர்டர் ரெடியாகும் வரையிலோ அவர்கள் அங்கு ஓய்வெடுக்க முடியும். இந்த அக்கறை இந்தியா முழுவதும் பரவவேண்டும்.
மனிதப் பிறவிக்கு டெலிவரி என்பது 10 மாதம். ஆனால், மனிதர்களுக்கு 10 நிமிடங்களில் டெலிவரி தேவைப்படுகிறது. அதுவே வணிகத்தின் இலக்காக மாறுகிறது. அதில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் தொடரவேண்டியது அவசர உலகில் அவசியமாகும்
