
எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும், அப்படியெல்லாம் அமெரிக்க அதிபர் டிரம்ப் நடந்துகொள்ள மாட்டார் என்ற சின்ன நம்பிக்கை இந்திய வெளியுறவுத் துறை மற்றும் வணிகத் தொழில் துறை சார்ந்தவர்களின் மனதின் ஓரத்தில் இருந்தது. என்ன இருந்தாலும் டிரம்ப் நம்ம பிரதமர் மோடிக்கு நண்பர். இதைப் பல முறை டிரம்ப்பே தன்னுடைய பேச்சில் தெரிவித்திருக்கிறார். ஒரு சில நேரங்களில் மோடிக்கு முக்கியத்துவமும் கொடுத்திருக்கிறார். அதனால் இந்திய பொருட்கள் மீதான வரிவிதிப்பு தொடர்பாக நிச்சயம் கரிசனம் காட்டுவார் என்பதுதான் அந்த நம்பிக்கை.
டிரம்ப்போ “என்னை அப்படியெல்லாம் நினைக்கவேண்டாம். ஃப்ரென்ட்ஷிப் வேறு, பிஸினஸ் வேறு. மற்ற நாடுகளையெல்லாம் அமெரிக்கா எப்படி நடத்துகிறதோ அப்படித்தான் இந்தியாவையும் நடத்தும். இந்தியப் பொருட்களுக்கு 26% வரி என்று முடிவாகியிருந்தது. இந்திய நாடாளுமன்றத்தில் என்னை நோக்கி எதிர்க்கட்சிகள் பாய்ந்தபோதும், என் பெயரை உங்கள் பிரதமர் குறிப்பிட வேண்டும் என்றும் பல முறை சொன்னபோதும், ஒரு முறைகூட என் பெயரைக் குறிப்பிடாமல் உறுதியாக இருந்த பிரதமர் மோடிக்காக, 1% குறைத்து, 25% வரி விதிக்கிறேன்” என்று சொல்லாமல் அதை செயலில் காட்டியிருக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
அமெரிக்காவின் பொருளாதாரம் சரிவிலிருந்து மீள வேண்டும் என்பது அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி முன்வைத்த பரப்புரை. டிரம்புக்கு முன் அதிபராக இருந்த ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் நிர்வாகத்தில் அமெரிக்காவின் நிர்வாகம் மிகவும் தளர்ந்துவிட்டதாகவும், பிற நாட்டவர்களின் ஊடுருவல் அமெரிக்காவில் அதிகமாகிவிட்டதாகவும் டிரம்ப் கடுமையான விமர்சனத்தை வைத்து, அமெரிக்க மக்களின் ஆதரவைப் பெற்று அதிபரானார். ஊடுருவல் தடுப்பு, சட்டவிரோதமாக உள்ள வெளிநாட்டினர் வெளியேற்றம், அமெரிக்க பொருளாதாரத்தை உயர்த்துவது, அதற்கேற்ப பிற நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களின் மீதான வரிவிதிப்பு என 2025 ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதி பொறுப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்றதிலிருந்தே தன் நடவடிக்கைகளை தொடங்கிவிட்டார் டிரம்ப்.
ஐரோப்பிய யூனியனுடன் வர்த்தக ரீதியான உறவுகளில் கடும் நெருக்கடியை உண்டாக்கிய டிரம்ப், இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் பொருட்கள் மீதான வரியை உயர்த்தி, ஆகஸ்ட் 1 முதல் இது நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்திருக்கிறார். 25% வரி விதிப்புடன், அபராதமும் (தண்டத் தொகை) விதிக்கப்படும் என அவர் அறிவித்திருப்பது இந்தியப் பொருளாதாரத்தின் மீதான கடும் தாக்குதலாகக் கருதப்படுகிறது. இந்தியத் தரப்பில் அமெரிக்காவுடன் வர்த்தக உடன்பாடுகள் குறித்து பேசப்பட்டு வரும் நிலையில், ஒரு தரப்பாக ட்ரம்ப அறிவித்துள்ள வரிவிதிப்பு மற்றும் தண்டத் தொகை என்பது இரட்டைத் தாக்குதலாக அமைந்துவிட்டது.
இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நான்தான் நிறுத்தினேன் என்று தொடர்ந்து சொல்லி வரும் டிரம்ப், ரஷ்யா-உக்ரைன் போரைத் தன் தலையீட்டால் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என விரும்புகிறார். உக்ரைனுக்கு ஆதரவாக அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ரஷ்ய அதிபர் புடின் ஏற்க மறுப்பதால், அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்குமான பகை நீடிக்கிறது. இந்த நிலையில், போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் நிலையில், ரஷ்யாவிலிருந்து அதிகளவில் எரிசக்தியைப் பெறக்கூடிய நாடாக இந்தியா இருக்கிறது என்றும், இந்தியா எப்போதுமே தனக்குத் தேவையான ராணுவத் தளவாடங்களை ரஷ்யாவிடமிருந்தே அதிகளவில் வாங்குகிறது என்றும் இந்தியப் பொருட்கள் மீதான வரிவிதிப்பிற்கு காரணம் சொல்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
அமெரிக்காவின் வரிவிதிப்பு மற்றும் தண்டத்தொகையால் இந்தியாவின் ஜவுளித்துறை, மருந்து உற்பத்தி, வாகன உதிரி பாகங்கள், வைரங்கள் மற்றும் நவமணிகள், தோல் சார்ந்த பொருட்கள் ஆகியவற்றில் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று இந்தியாவின் பொருளாதார வல்லுநர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். வாகன உதிரி பாகங்கள், ஜவுளி, ஆயத்த ஆடைகள், தோல் தொழிற்சாலை போன்றவை அதிகளவு பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்களாகும். எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் ஜவுளி சார்ந்த தொழில்கள் கரூர், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் போன்ற மேற்கு மாவட்டங்களில் இலட்சக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பை அளித்து வருகிறது. தோல் தொழிற்சாலைகள் வேலூர், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் உள்ள மக்களுக்கான வேலைவாய்ப்பாக உள்ளது.
இந்தப் பகுதிகளிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்கள் மீது கூடுதல் வரியும் அபராதமும் விதிக்கப்படும்போது, உற்பத்தி குறையும். அதனால் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும். நாட்டின் பொருளாதாரம் கடும் சவாலை சந்திக்கும்.
அதுமட்டுமின்றி, அமெரிக்கா தன்னுடைய பகையாளியாகக் கருதும் ஈரான் நாட்டுடன், எண்ணெய் வர்த்தகத்தில் தொடர்புடைய 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தன் நண்பரான டிரம்ப்பிடம் எந்தவிதமான அணுகுமுறையால் அமெரிக்காவின் வஞ்சகத்திலிருந்து இந்தியாவை மீட்கப் போகிறார் என்பதுதான் எல்லாரிடமும் உள்ள கேள்வி.