பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் 33வது ஒலிம்பிக் போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், 100 கிராம் உடல் எடை கூடி இருந்ததாகக்கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தங்கப்பதக்கம் வெல்லும் நேரத்தில் இந்த தகுதி நீக்கம் என்பது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மகளிருக்கான மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் 6.8.2024ல் களம் கண்ட வினேஷ் போகத், முதல் சுற்றிலேயே உலகின் நம்பர் -1 மல்யுத்த வீராங்கனையான யுய் சுசாகியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இதுவரை பங்கேற்ற 82 போட்டிகளில் எதிலுமே தோற்றதில்லை என்ற ஜப்பான் வீராங்கனை யுய் சுசாகியின் சாதனையை வினேஷ் போகத் தகர்த்தெறிந்தது பெரும் சாதனை.
இதையடுத்து உக்ரைன் வீராங்கனை ஆக்சனா லிவச்சை வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். கியூபா வீராங்கனை கஸ்மன் லோபஸை வென்று இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற ’முதல் இந்திய வீராங்கனை’ என்ற பெருமையைப்பெற்றார் வினேஷ் போகத். இறுதிச்சுற்றில் அமெரிக்க வீராங்கனை சாரா சாரா அன் ஹில்டெப்ராண்டுடன் மோதி தங்கப்பதக்கத்தை வென்றுவிடுவார் என்ற நம்பிக்கை இந்திய மக்களிடையே அதிகம் இருந்த நிலையில்தான் அந்த எதிர்பாராத அதிர்ச்சி.
இறுதிச்சுற்றுக்கு முதல் நாள் இரவில் நடந்த பரிசோதனையில் வினேஷ் போகத்தின் உடல் எடை 2 கிலோ அதிகரித்திருந்தது அறியப்பட்டது. 57 கிலோ எடை இருந்த வினேஷ் போகத், இந்த ஒலிம்பிக் போட்டிக்காக 7 மாதங்கள் கடுமையான பயிற்சிகள் மூலம் 50 கிலோ எடைக்கு வந்திருக்கிறார். அப்படி இருந்தும் இறுதிச்சுற்றுக்கு முதல்நாளில் உடல் எடை திடீரென்று கூடிவிட்டது. இந்திய அணியின் தலைமை மருத்துவ அதிகாரி தின்ஷா பர்திவாலாவின் அறிவுறுத்தலின்படி இரவு முழுவதும் வினேஷ் போகத்தின் உடல் எடையை குறைப்பதற்கான முயற்சிகள் நடந்துள்ளன.
குறைந்த உளவு உணவு, தண்ணீர் சேர்த்துக்கொண்டு சைக்கிளிங், ஜாகிங், ஸ்கிப்பிங் என்று இரவு முழுவதும் உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார் வினேஷ் போகத். இத்தனை போராடியும் இறுதிச்சுற்றுக்கு பல மணி நேரங்கள் முன்பாக நடந்த பரிசோதனையில் நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோவை விட வினேஷ் போகத்தின் உடல் எடை 100 கிராம் அதிகமாக இருந்தது அறியப்பட்டது.
எடைகுறைப்பு முயற்சியில் ஏற்கனவே முடியை பாதி இழந்திருந்தார் வினேஷ் போகத். கடைசி நேரத்தில் முடியை முழுவதுமாக மழிக்கவும் முயற்சிகள் நடந்துள்ளன. ஆனால் அதற்கு அனுமதி கிடைக்காமல் போயிருக்கிறது. இதனால்தான் முன்கூட்டியே முடியை முழுவதுமாக மழித்திருந்தால் கூட 100 கிராம் எடை குறைந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்ற பொதுவான பார்வை இருக்கிறது.
இது விளையாட்டு விதிகளின் படியான நடவடிக்கை என்று ஒரு தரப்பும், இதில் சதிச்செயல் இருக்கிறது என்று விளையாட்டு வீரர்களின் தரப்பில் இருந்தே எதிர்க்குரல்களும் எழுந்திருக்கின்றன. “இது இந்தியாவுக்கும், இந்திய மல்யுத்தத்திற்கும் எதிரான மிகப்பெரிய சதி. இந்த வெற்றியில் யாரோ ஒருவருக்கு ஏதோ பிரச்சனை இருந்திருக்கிறது. அதனால் இந்த தகுதி நீக்கம் நடந்திருக்கிறது. 100 கிராம் எடையைக் றைக்க வினேஷ் போகத்திற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும்” என்று இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்கும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேதனை ஒரு பக்கம், இரவு முழுவதும் செய்த எடைகுறைப்பு முயற்சியால் ஏற்பட்ட நீர்ச்சத்து இழப்பால் உடலும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வினேஷ் போகத், ’’இனியும் சண்டையிட எனக்கு வலிமை இல்லை’’ என்று சொல்லி ஓய்வை அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியடைச் செய்துவிட்டார்.
இந்தியப்பிரதமர் நரேந்திரமோடி, குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி மற்றும் திரையுலக, அரசியல் பிரமுகர்களும், தொழிலதிபர்களும், இந்திய மக்களும் எத்தனையோ ஆறுதல் சொல்லியும் இந்த முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார் வினேஷ் போகத்.
இந்த நேரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை சாந்தியின் நினைவு வருகிறது. அவர் இப்படித்தான் பெண்களுக்கான பிரிவு போட்டியில் பங்கேற்க தகுதி இல்லை என்று சொல்லி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வர இருந்த பதக்கம் பறிபோனபோது. அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள், “ஓடிய கால்கள் சாந்தியின் கால்கள்தானே?” என்று சொல்லி அவருக்கு ஆறுதல் தெரிவித்து, அரசின் சார்பில் அவருக்கு நிதி வழங்கி கவுரவித்தார். அதுமட்டுமல்லாமல் அவரை பயிற்சியாளராக மாற்றி எதிர்காலத் தலைமுறையினருக்கு பயிற்சி அளிக்கச்சொல்லி ஊக்கப்படுத்தினார்.
வினேஷ் போகத் விவகாரத்தில் அரசியல்சதி இருக்கிறது என்ற சர்ச்சை எழுந்திருக்கிறது. இந்திய மல்யுத்த சம்மேளத்தின் தலைவராக இருந்த பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் செயல்பாடுகள் குறித்து வினேஷ் போகத் தொடர்ந்து விமர்சித்ததும், அவருக்கு எதிராக தொடர்ந்து போராடியதும்தான் இந்த தகுதி நீக்கத்திற்கு பின்னணியில் இருக்கும் சதிச்செயல் என்ற சர்ச்சை எழுந்திருக்கிறது.
அரசியல் பலவித விளையாட்டுகளை விளையாடுகிறது. விளையாட்டிலும் பல அரசியல் செயல்கள் உள்ளன. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு நியாயமான நேர்மையான நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இப்போது எழுந்திருக்கும் சர்ச்சைகளை தவிர்த்திருக்கலாம். இந்தியாவுக்கான தங்கப்பதக்கத்தையும் உறுதி செய்திருக்கலாம். ஆனால், தங்களது எம்.பியை காப்பாற்றும் நடவடிக்கைகளில் காட்டிய கவனத்தில் விளையாட்டு வீரர்களின் வெற்றியில் காட்டவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
உலக அரங்கில் சின்னச்சின்ன நாடுகளும் பதக்கம் வெல்லும் ஒலிம்பிக் போட்டியில், உலகின் முக்கிய நாடான இந்தியா, இது போன்ற கவனக்குறைவுகளாலும் அரசியல் சதிகளாலும் பதக்கத்தை இழப்பது என்பது விளையாட்டுக்கு மட்டுமல்ல; தேசத்திற்கும் அவமானம்தான்.