திருத்தணியில் (Thiruthani) வடநாட்டு இளைஞரை பள்ளிக்கூட வயதில் உள்ள சிலர் சூழ்ந்து கொண்டு சராமரியாக வெட்டுவதும், அதை அதே வயதில் உள்ள இன்னொருவன் செல்போனில் வீடியோ எடுப்பதும் சமூக வலைத்தளங்களில் பரவிய போது தமிழ்நாட்டு மக்களில் பலர் உறைந்து போனார்கள். இந்தப் பொடியன்கள் ஏன் இப்படிக் கொடூரமாக வெட்டுகிறார்கள், கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாமல் அதை வீடியோவும் எடுக்கிறார்களே என்று மக்கள் பதறினாலும், அவன்களுக்கு கொஞ்சம் கூட மனித உணர்ச்சி என்பதே இல்லை. சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் போட்டு பிரபலமாவதற்காக இப்படியொரு கொடூரத்தை செய்திருக்கிறார்கள்.
ஓடுகிற ரயிலில், ஆபத்தான மலை உச்சியில், ஆற்றுப்பாலத்தின் மேல் உள்ள தண்டவாளத்தில், காரின் உச்சியில் எனக் கண்ட இடத்திலும் நின்று ரீல்ஸ் எடுக்கும் ‘பைத்தியங்கள்’ பெருகிக்கொண்டே இருக்கின்றன. இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் இவற்றைப் பதிவிட்டால் நிறைய லைக் கிடைக்கிறது, வெளியிடங்களுக்குப் போனால், செலிபிரிட்டி போல அடையாளம் கிடைக்கிறது என்பதும், தன்னைப் போன்ற வயதுடைய வட்டத்தினரின் வயிற்றெரிச்சலைக் கிளப்ப வேண்டும் என்பதும் இத்தகைய ரீல்ஸ் ஆர்வலர்களின் தாறுமாறான செய்லபாடுகளுக்கு காரணமாக உள்ளது.
வடநாட்டு இளைஞரை வெட்டிய கும்பல், ரயிலில் கத்தி-அரிவாளை வைத்துக்கொண்டு ரீல்ஸ் எடுத்திருக்கிறது. அந்த இளைஞரை வெட்டுவது போல கத்தியைக் காட்டும்போது, அவர் பயந்து மறுக்கவே, அந்தக் கோபத்தில் அவரை ஸ்டேஷன் வந்ததும் இழுத்துப் போட்டு வெட்டியிருக்கிறது. வெட்டியவர்கள் சிறார் சட்டத்தின் கீழ் வரக்கூடியவர்கள் என்பதாலும், அதிலும் ஒருவன் மிகச் சிறிய வயது என்பதால் அவனைப் பெற்றோரிடம் அனுப்பி வைத்துவிட்டது நீதிமன்றம். மற்றவர்கள் சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
பள்ளிக்கூட வயதில் ரீல்ஸ் பைத்தியங்களாக அலைகின்ற தமிழ்நாட்டு சிறுவர்களை இப்படி அனுப்ப வேண்டுமென்றால், எல்லாப் பள்ளிகளிலிருந்தும் பலரை சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பவேண்டும். அந்த அளவுக்கு உண்மையான உலகத்தைத் தவிர்த்துவிட்டு, மெய்நிகர் வாழ்க்கையில் தங்களை ஆட்படுத்திக்கொண்டிருக்கிறது இந்த புதிய தலைமுறை. அதிலும், கஞ்சா-மது-போதை ஊசி போன்ற பழக்கங்களும் சிறு வயதிலேயே சேர்ந்து கொள்வதாலும், ரவுடித்தனம் செய்வதுதான் ஹீரோயிசம் என சினிமாப்படத்தைப் பார்த்து மனதுக்குள் அது போலவே மாறிவிடுவதாலும் இது போன்ற அவலங்கள் அரங்கேறுகின்றன.
எரிவதை இழுத்தால் கொதிப்பது அடங்கிவிடும் என்பதுபோல, அரசாங்கத் தரப்பின் தீவிரமான நடவடிக்கைகளே, இனியும் இதுபோன்ற கொடூரங்கள் நடக்காமல் தடுக்க உதவும். பள்ளிகள்-கல்லூரிகள் அருகே போதைப் பொருட்கள் விற்பவர்கள் யார் என்பதை தமிழ்நாடு போலீசார் அறியாதவர்கள் அல்ல. அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் போதுமான அளவில் இல்லை என்பதே பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. இதில் தனிப்பட்ட கவனம் செலுத்தாவிட்டால், எந்தவகையிலும் போதைப் பழக்கத்தை தடுக்க முடியாது.
பள்ளிகளுக்கென வகுக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறையை மாணவர்கள் தங்களின் உடை, செயல் என உச்சி முதல் பாதம் வரை சரியாகக் கடைப்பிடிப்பதை கட்டாயமாக்க வேண்டும். ஆபத்தான முறையிலும் வன்முறையை வெளிப்படுத்தும் வகையிலும் ரீல்ஸ் எடுத்து பதவிடுபவர்களை சைபர் க்ரைம் போலீசார் (Cybercrime police) தீவிரமாக கண்காணித்து, அவர்களின் சமூக வலைத்தளப்பக்கங்களை உடனுக்குடன் முடக்கினாலே, பல ரீல்ஸ் பைத்தியங்கள் தெளிந்துவிடும். பட்டாக்கத்தி, வீச்சரிவாள் போன்ற பயங்கரமான ஆயுதங்களுடனும் ஆபாசமான வார்த்தைகளுடனும் சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறவர்களை சட்டப்படி இரண்டு நாள் காவலில் எடுத்தால், ரீல்ஸ்க்காக கண்டபடி கொதிக்கும் கும்பல் அடங்கிவிடும்.
இவையனைத்தும் மாநில அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளாகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காவல்துறை என்பது முதலமைச்சரின் கட்டுப்பாட்டில்தான் கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாக உள்ளது. அதனால், காவல்துறையின் போதாமை, அலட்சியம், கறுப்பு ஆடுகளின் செயல் இவையனைத்தும், நேர்மையாக செயல்படும் காவல் அதிகாரிகளின் கடமையுணர்ச்சிக்கும் நிர்வாகத்திறனுக்கும் வேட்டு வைப்பதுடன், ஒட்டுமொத்தக் குற்றச்சாட்டும் முதலமைச்சரை நோக்கியே வைக்கப்படும். எதிர்காலத் தலைமுறையின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இதில் விரைவான நடவடிக்கைகள் அவசியமாகும்.
தற்போதுள்ள சட்டத்தின்படி, பதின்பருவ வயதில் உள்ளவர்களும் கூட சிறார் சட்டத்திற்குள் வருகிறார்கள். அதனால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க இயலவில்லை. தேர்தலில் வாக்களிக்கும் வயதை 21 என்பதிலிருந்து 18ஆக குறைத்தது போல, தற்போதைய (Technological development) தொழில்நுட்ப வளர்ச்சி-சிறார்களின் மூளை வளர்ச்சி ஆகியவற்றைக் கவனித்து, சிறார் சட்டத்தில் வயது வரம்பைக் குறைக்க வேண்டும்.
அப்போதுதான் பெற்றோருக்கோ, பள்ளி ஆசிரியருக்கோ சற்றும் பயப்படாத-கொஞ்சமும் மரியாதை தராத இத்தகைய ஆபத்தான கேன்சர் கட்டி போன்ற கும்பலின் வளர்ச்சியைத் தடுக்க முடியும்.
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில் அப்பாவி வடநாட்டு இளைஞர் கொடூரமாக வெட்டப்பட்ட நிகழ்வு என்பது அவமானமாகும். இனி ஒருபோதும் இது நிகழவே கூடாது.
